ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி: இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி வெண்கலப்பதக்கத்தை நழுவவிட்டது


ஒலிம்பிக் பெண்கள் ஆக்கி: இங்கிலாந்து அணியிடம் இந்தியா தோல்வி வெண்கலப்பதக்கத்தை நழுவவிட்டது
x
தினத்தந்தி 7 Aug 2021 3:11 AM GMT (Updated: 2021-08-07T08:41:24+05:30)

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஆக்கியில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெண்கலப்பதக்கத்தை தவற விட்டது.

டோக்கியோ, 

டோக்கியோ ஒலிம்பிக் பெண்கள் ஆக்கியில் நேற்று நடந்த 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் உலக தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்திய அணி, 4-வது இடத்தில் இருக்கும் இங்கிலாந்தை எதிர்கொண்டது.

நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியினர் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியதுடன், இந்திய அணியின் கோல் எல்லைக்குள் அடிக்கடி ஊடுருவிய வண்ணம் இருந்தனர். 16-வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி முதல் கோல் அடித்தது. அந்த அணி வீராங்கனை எலிலி ராயர் இந்த கோலை அடித்தார். 24-வது நிமிடத்தில் அந்த அணி வீராங்கனை சாரா ராபர்ட்சன் கோல் அடித்தார். இதனால் இங்கிலாந்து அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

இதைத் தொடர்ந்து இந்திய மங்கைகள் அடிபட்ட வேங்கை போல் ஆக்ரோஷமாக செயல்பட்டு பதில் கோல் திருப்பினார்கள். 25-வது மற்றும் 26-வது நிமிடங்களில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை குர்ஜித் கவுர் அடுத்தடுத்து கோலாக்கி அசத்தினார். இதனால் சமநிலை ஏற்பட்டது. 29-வது நிமிடத்தில் வந்தனா கட்டாரியா கோல் அடித்தார். இதனால் முதல் பாதியில் இந்திய அணி 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.

ஆனால் இந்த முன்னிலையை இந்திய அணியால் நீண்ட நேரம் தக்க வைத்து கொள்ள முடியவில்லை. இங்கிலாந்து அணியினர் தொடர்ந்து இந்திய அணியின் கோல் எல்லையை முற்றுகையிட்டு குடைச்சல் கொடுத்தனர். 35-வது நிமிடத்தில் இங்கிலாந்து வீராங்கனை ஹோலி பெரன்வெப் கோல் அடித்தார். இதனால் மீண்டும் சமநிலை உருவானது.

இங்கிலாந்து அணியினர் தங்களது தாக்குதல் ஆட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினார்கள். இதன்பலனாக அந்த அணிக்கு 48-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பு கிட்டியது. இதனை அந்த அணியின் கிரேஸ் பால்சன் கோலாக மாற்றினார்.

பதில் கோல் திருப்பி ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வர இந்திய அணி வீராங்கனைகள் கடுமையாக போராடினார்கள். பெனால்டி கார்னர் உள்பட சில கோல் அடிக்கும் வாய்ப்புகள் கிடைத்த போதிலும், இங்கிலாந்தின் தடுப்பு அரணை தகர்த்து கோலாக்க எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை.

முடிவில் இந்திய அணி 3-4 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கத்தை நழுவ விட்டது. இதனால் மனம் உடைந்த இந்திய வீராங்கனைகள் கண்ணீர் விட்டனர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய பெண்கள் ஆக்கி அணி பதக்கம் வென்று வரலாறு படைக்கும் அரிய வாய்ப்பை கோட்டை விட்டாலும், இந்திய ரசிகர்களின் மனதை கவரும் விதமாகவும், மெச்சும் வகையிலும் செயல்பட்டு 4-வது இடத்தை பெற்றுள்ளது. இந்திய அணி தொடக்க லீக் ஆட்டங்களில் நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து அணிகளிடம் தொடர்ச்சியாக தோற்ற பிறகு அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா அணிகளை அடுத்தடுத்து வென்று கால்இறுதிக்குள் கால்பதித்தது. கால்இறுதியில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தது. அரைஇறுதியில் அர்ஜென்டினாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வி கண் டதுடன், வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் மீண்டும் இங்கிலாந்திடம் பணிந்தது.

ஒலிம்பிக் போட்டிக்கு 3-வது முறையாக தகுதி பெற்ற இந்திய அணியின் சிறந்த செயல்பாடு இதுவாகும். ஏற்கனவே 1980-ம் ஆண்டு மாஸ்கோ ஒலிம்பிக்கில் இந்திய அணி 4-வது இடம் பிடித்து இருந்தது. ஆனால் 6 அணிகள் பங்கேற்ற அந்த போட்டி ரவுண்ட் ராபின் லீக் முறையில் நடந்தது. கடந்த 2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இந்திய அணி ஒரு வெற்றி கூட பெறாமல் கடைசி இடத்துக்கு (12-வது) தள்ளப்பட்டது நினைவிருக்கலாம்.

பதக்க வாய்ப்பை இழந்த இந்திய ஆக்கி அணியினருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி அவர்களது செயல்பாட்டை பாராட்டி இருக்கிறார். அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘ஒலிம்பிக்கில் மயிரிழையில் பதக்கத்தை தவற விட்டாலும், நமது ஆக்கி அணி புதிய இந்தியாவின் உத்வேகத்தை பிரதிபலித்திருக்கிறது. நமது அணியினர் சிறப்பாக செயல்பட்டு புதிய எல்லைகளை தொட்டுள்ளனர். இந்த வெற்றி இளம் வீராங்கனைகள் ஆக்கியில் ஈடுபட ஊக்கம் அளிக்கும். அணியில் உள்ள ஒவ்வொரு வீராங்கனைகளும் தங்களது சிறந்த திறனையும், போராட்ட குணத்தையும் வெளிப்படுத்தினர். இந்த சிறந்த அணியை நினைத்து இந்தியா பெருமிதம் அடைகிறது. இந்திய ஆக்கி அணியின் அருமையான செயல்பாடு எப்போதும் மனதில் நிலைத்து நிற்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் அவர் இந்திய ஆக்கி அணியினரை செல்போனில் தொடர்பு கொண்டு பாராட்டினார். அப்போது, தோல்வி கண்டதால் அழுத வீராங்கனைகளை அழக்கூடாது என்று தேற்றிய அவர் ‘நீங்கள் அற்புதமாக விளையாடினீர்கள். உங்களது கடினமான உழைப்பு பதக்கமாக மாறாவிட்டாலும், உங்களுடைய வியர்வை கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கு ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ளது. அதனால் நீங்கள் ஏமாற்றம் அடைய வேண்டாம்’ என்றார்.

Next Story