ஹாக்கி

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ஆக்கி வீரர் ருபிந்தர் பால்சிங் ஓய்வு - பிரேந்திர லக்ராவும் விடைபெற்றார் + "||" + Rubinder Palsing retires from international cricket - Brendra Lakra bids farewell

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ஆக்கி வீரர் ருபிந்தர் பால்சிங் ஓய்வு - பிரேந்திர லக்ராவும் விடைபெற்றார்

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ஆக்கி வீரர் ருபிந்தர் பால்சிங் ஓய்வு - பிரேந்திர லக்ராவும் விடைபெற்றார்
சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய ஆக்கி அணியின் முன்னணி வீரர் ருபிந்தர் பால்சிங், பின்கள வீரர் பிரேந்திர லக்ரா ஆகியோர் அறிவித்துள்ளனர்.
புதுடெல்லி,

சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆக்கி அணி வெண்கலப்பதக்கம் வென்று வரலாறு படைத்தது. 1980-ம் ஆண்டுக்கு பிறகு ஒலிம்பிக்கில் இந்திய ஆக்கி அணி பெற்ற முதல் பதக்கம் இதுவாகும்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய அணிக்காக 4 கோல்கள் அடித்தவரும், ‘பெனால்டி கார்னர்' வாய்ப்பில் தடுப்பு தரணை தகர்த்து அதிரடியாக கோல் அடிப்பதில் கில்லாடியுமான ருபிந்தர் பால்சிங் ஆச்சரியம் அளிக்கும் வகையில் சர்வதேச ஆக்கி போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று திடீரென அறிவித்தார்.

பஞ்சாப்பை சேர்ந்த 30 வயதான ருபிந்தர் பால்சிங் 2010-ம் ஆண்டு மலேசியாவில் நடந்த சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை போட்டியில் இந்திய அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்தார். 2014-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் தங்கப்பதக்கமும், 2018-ம் ஆண்டு ஆசிய விளையாட்டில் வெண்கலப்பதக்கமும், 2014-ம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்ற இந்திய அணியில் இடம் பெற்று முக்கிய பங்களிப்பை அளித்து இருக்கிறார். 2014-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் துணைகேப்டனாக இருந்த அவர் இந்திய அணிக்காக 223 போட்டிகளில் விளையாடி இருக்கிறார். 2018-ம் ஆண்டு அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவர் மீண்டும் அணிக்கு திரும்பியதுடன் டோக்கியோ ஒலிம்பிக்கிலும் அசத்தினார்.

ஓய்வு குறித்து ருபிந்தர் பால்சிங் ‘டுவிட்டர்’ மூலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய ஆக்கி அணியில் இருந்து உடனடியாக ஓய்வு பெறுகிறேன் என்பதை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன். கடந்த சில மாதங்கள் எனது வாழ்க்கையில் மிகச்சிறந்த நாட்கள் என்பதில் சந்தேகமில்லை. டோக்கியோ ஒலிம்பிக்கில் அணி வீரர்களுடன் இணைந்து பதக்க மேடையில் ஏறியது எனது வாழ்க்கையில் மிகவும் அற்புதமான தருணமாகும். அது எப்போதும் மனதில் நிலைத்து நிற்கும். கடந்த 13 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி நான் பெற்ற உற்சாகத்தையும், அனுபவத்தையும் இளம் மற்றும் திறமையான வீரர்கள் அனுபவிக்க வழிவிட வேண்டிய நேரம் இது என்று நான் நம்புகிறேன். இந்திய அணிக்காக விளையாடிய ஒவ்வொரு ஆட்டமும் சிறப்பானதாகும். இந்தியாவுக்காக ஒலிம்பிக் பதக்கத்தை வெல்ல வேண்டும் என்ற கனவை நனவாக்கிய மகிழ்ச்சியுடன் விடைபெறுகிறேன். இத்தனை ஆண்டுகளாக அணி வீரர்கள் எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தனர். ஆக்கியில் இந்தியாவை புதிய உயரத்துக்கு எடுத்து செல்ல சக வீரர்களுக்கு வாழ்த்துகள். எனது வெற்றிப்பயணத்துக்கு பக்கபலமாக இருந்த குடும்பத்தினர், நண்பர்கள், பயிற்சியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கான இந்திய ஆக்கி அணியின் துணை கேப்டனும், பின்கள வீரருமான பிரேந்திர லக்ராவும் சர்வதேச போட்டியில் இருந்து நேற்று ஓய்வு பெற்றார். இதனை ஆக்கி இந்தியா அமைப்பு தனது அதிகாரபூர்வ ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்துள்ளது. ருபிந்தர் பால்சிங் தனது முடிவை வெளியிட்ட சில மணி நேரங்களில் பிரேந்திர லக்ராவின் ஓய்வு அறிவிப்பு வெளியானது. ஒடிசாவை சேர்ந்த 31 வயதான பிரேந்திர லக்ரா இந்திய அணிக்காக 201 ஆட்டங்களில் விளையாடி இருக்கிறார்.