ஹாக்கி

சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் அனைத்து விருதுகளையும் அள்ளியது இந்தியா + "||" + Hockey: India sweeps FIH annual awards;

சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் அனைத்து விருதுகளையும் அள்ளியது இந்தியா

சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் அனைத்து விருதுகளையும் அள்ளியது இந்தியா
சிறந்த வீரர், வீராங்கனை உள்பட சர்வதேச ஆக்கி சம்மேளனத்தின் அனைத்து விருதுகளையும் இந்தியா அள்ளியது.
லாசானே, 

சர்வதேச ஆக்கி சம்மேளனம் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரர், வீராங்கனை உள்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர், வீராங்கனை உள்ளிட்ட விருதுக்கான பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. இதில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும் ஒருவரை விருதுக்கு தேர்வு செய்ய ‘ஆன்-லைன்’ மூலம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தேசிய ஆக்கி அணிகளின் கேப்டன்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்கள் மற்றும் வீரர்கள், ஊடகங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் அளிக்கும் வாக்குகளின் சதவீதத்தை அடிப்படையாக கொண்டு விருதுக்கு தேர்வாகி இருக்கும் வீரர், வீராங்கனைகளின் பெயரை சர்வதேச ஆக்கி சம்மேளனம் நேற்று அறிவித்தது. 

இதன்படி அனைத்து பிரிவுகளின் விருதுகளையும் இந்தியா கைப்பற்றியது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய அணியில் அதிக கோல்கள் அடித்த ஹர்மன்பிரீத் சிங் 52.11 சதவீத வாக்குகளுடன் சிறந்த வீரர் விருதுக்கும், டோக்கியோ ஒலிம்பிக்கில் 4-வது இடம் பெற்ற இந்திய பெண்கள் அணியில் அதிக கோல்கள் போட்ட குர்ஜித் கவுர் 46.63 சதவீத வாக்குகளுடன் சிறந்த வீராங்கனை விருதுக்கும் தேர்வாகி இருக்கிறார்கள். 

சிறந்த கோல்கீப்பர் விருதுக்கு இந்திய அணியை சேர்ந்த ஸ்ரீஜேஷ் (ஆண்கள்), சவிதா புனியா (பெண்கள்) ஆகியோரும், வளர்ந்து வரும் நட்சத்திர விருதுக்கு ஷர்மிளா தேவி (பெண்கள்), விவேக் சாகர் பிரசாத் (ஆண்கள்) ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்திய ஆண்கள் அணியின் பயிற்சியாளர் கிரகாம் ரீட், பெண்கள் அணியின் பயிற்சியாளர் ஜோர்ட் மர்ஜினே ஆகியோர் சிறந்த பயிற்சியாளர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர்.

சிறந்த வீரர்கள் தேர்வுக்கு பெல்ஜியம் ஆக்கி சம்மேளனம் அதிருப்தி தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த சம்மேளனம் வெளியிட்டு இருக்கும் டுவிட்டர் பதிவில், ‘ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற பெல்ஜியம் அணியை சேர்ந்த வீரர்கள் பட்டியலில் இருந்தும் ஒருவர் கூட விருதுக்கு தேர்வாகாதது விருதுக்கான வாக்கெடுப்பு முறையின் தோல்வியை எடுத்துக்காட்டுகிறது. வருங்காலத்தில் விருது தேர்வுக்கான முறை நியாயமானதாக இருக்கும் வகையில் மாற்றி அமைக்க நாங்கள் சர்வதேச ஆக்கி சம்மேளனத்துடன் இணைந்து பணியாற்றுவோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதற்கு சர்வதேச ஆக்கி சம்மேளனம் அளித்த விளக்கத்தில் ‘விருதுக்கு தேர்வானவர்கள், 3 பிரிவினரும் அளித்த வாக்குகளில் முதலிடத்தை பெற்றுள்ளனர். தேவைப்பட்டால் விருது வழங்கும் நடைமுறையில் மாற்றம் செய்ய வேண்டியது குறித்து மறுபரிசீலனை செய்வோம். தேசிய சம்மேளன பிரதிநிதிகள் முழுமையாக வாக்களிக்காதது ஏன்? என்பது குறித்து கவனம் செலுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. ஒலிம்பிக்கில் பங்கேற்கும் தமிழக வீரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வாகியுள்ள தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2. ஒலிம்பிக்கிற்கு தேர்வான தமிழக வீரர், வீராங்கனைகளுக்கு ச.ம.க. தலைவர் சரத்குமார் வாழ்த்து
ஒலிம்பிக் போட்டிக்கு தேர்வான தமிழகத்தைச் சேர்ந்த 5 வீரர், வீராங்கனைகளுக்கு சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
3. ஜப்பான் ஒலிம்பிக் போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி
ஜப்பானில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழக வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவிக்கு மு.க.ஸ்டாலின் ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார்.