ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வெளியேற்றியது அர்ஜென்டினா


ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: பாகிஸ்தானை வெளியேற்றியது அர்ஜென்டினா
x
தினத்தந்தி 29 Nov 2021 12:22 AM GMT (Updated: 2021-11-29T05:52:40+05:30)

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியில் பாகிஸ்தான் அணி கடைசி லீக்கில் அர்ஜென்டினாவிடம் தோற்று வெளியேறியது.

புவனேஸ்வர்,

12-வது ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டி (21 வயதுக்குட்பட்டோர்) ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதின. நேற்று கடைசி கட்ட லீக் ஆட்டங்கள் நடந்தன. ‘டி’ பிரிவில் நடந்த முக்கியமான ஆட்டத்தில் அர்ஜென்டினா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் ஜெயிக்கும் அணிக்கே கால்இறுதி வாய்ப்பு என்ற அழுத்தத்துடன் மல்லுகட்டிய இவ்விரு அணிகளில் அர்ஜென்டினாவின் ஆதிக்கம் மேலோங்கியது.

விறுவிறுப்பாக நகர்ந்த ஆட்டத்தின் முடிவில் அர்ஜென்டினா 4-3 என்ற கோல் கணக்கில் 2-வது வெற்றியை ருசித்தது. மற்றொரு ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ஜெர்மனி 11-0 என்ற கோல் கணக்கில் எகிப்தை பதம் பார்த்தது. இந்த பிரிவில் ஜெர்மனி (9 புள்ளி), அர்ஜென்டினா (6 புள்ளி) ஆகிய அணிகள் கால்இறுதிக்குள் நுழைந்தன. முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் ஒரு வெற்றி, 2 தோல்வி என்று 3 புள்ளியுடன் வெளியேறியது.

‘சி’ பிரிவில் நடந்த ஒரு ஆட்டத்தில் நெதர்லாந்து அணி 14-0 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை பந்தாடி ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்தது. நெதர்லாந்து வீரர் மில்ஸ் புக்கென்ஸ் 5 கோல்கள் அடித்து அசத்தினார். அவர் இதுவரை 11 கோல்கள் அடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு ஆட்டத்தில் ஸ்பெயின் அணி 9-0 என்ற கோல் கணக்கில் தென்கொரியாவை விரட்டியடித்தது. இந்த பிரிவில் நெதர்லாந்து (9 புள்ளி), ஸ்பெயின் (6 புள்ளி) அணிகள் கால்இறுதியை எட்டின.

லீக் சுற்று நிறைவடைந்த நிலையில் கால்இறுதி ஆட்டங்கள் வருகிற 1-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் கால்இறுதி ஆட்டங்களில் ஜெர்மனி- ஸ்பெயின், நெதர்லாந்து-அர்ஜென்டினா, பிரான்ஸ்-மலேசியா, நடப்பு சாம்பியன் இந்தியா-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

கால்இறுதி வாய்ப்பை இழந்த மற்ற 8 அணிகளும் 9 முதல் 16-வது இடத்திற்கான ஆட்டங்களில் விளையாடும்.


Next Story