ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: கால்இறுதியில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் இன்று மோதல்


ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: கால்இறுதியில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் இன்று மோதல்
x
தினத்தந்தி 30 Nov 2021 11:36 PM GMT (Updated: 2021-12-01T05:06:23+05:30)

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி போட்டியில் இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் மோதுகின்றன.

புவனேஸ்வர்,

12-வது ஜூனியர் (21 வயதுக்கு உட்பட்டோர்) உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநில தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் பெல்ஜியம், மலேசியா (ஏ பிரிவு), பிரான்ஸ், இந்தியா (பி பிரிவு), நெதர்லாந்து, ஸ்பெயின் (சி பிரிவு), ஜெர்மனி, அர்ஜென்டினா (டி பிரிவு) அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் 2 இடங்களை பிடித்து கால்இறுதிக்கு தகுதி பெற்றன.

இன்று 4 கால்இறுதி ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் கடைசி கால்இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. முதலாவது லீக் ஆட்டத்தில் பிரான்சிடம் (4-5) அதிர்ச்சி தோல்வி கண்ட இந்திய அணி அடுத்த ஆட்டங்களில் கனடா (13-1), போலந்து (8-2) ஆகிய அணிகளை அடுத்தடுத்து பந்தாடி தனது பிரிவில் 2-வது இடம் பிடித்து கால்இறுதிக்குள் நுழைந்தது. பெல்ஜியம் அணி 2 வெற்றி (தென்ஆப்பிரிக்கா, சிலிக்கு எதிராக), ஒரு டிராவுடன் (மலேசியாவுடன்) தோல்வியை சந்திக்காமல் தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து கால்இறுதிக்குள் கால் பதித்தது.

கடந்த முறை (2016) லக்னோவில் நடந்த ஜூனியர் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி 2-1 என்ற வலுவான ஐரோப்பிய அணியான பெல்ஜியத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை உச்சி முகர்ந்தது. அதேபோல் மீண்டும் அந்த அணியை சாய்த்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேநேரத்தில் முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்க பெல்ஜியம் அணி வரிந்து கட்டும். இதனால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது எனலாம்.

முன்னதாக நடைபெறும் கால்இறுதி ஆட்டங்களில் ஜெர்மனி-ஸ்பெயின் (காலை 10.30 மணி), நெதர்லாந்து-அர்ஜென்டினா (பகல் 1.30 மணி), பிரான்ஸ்-மலேசியா (மாலை 4.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

Next Story