ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி இன்று தொடக்கம்..!


ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி  இன்று தொடக்கம்..!
x
தினத்தந்தி 13 Dec 2021 9:21 PM GMT (Updated: 13 Dec 2021 9:21 PM GMT)

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டியின் முதலாவது ஆட்டத்தில் இந்தியா-தென்கொரியா அணிகள் மோதுகின்றன.

டாக்கா,

6-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 22-ந் தேதி வரை நடக்கிறது. இதன் முதலாவது லீக் ஆட்டத்தில் இந்தியா-தென்கொரியா அணிகள் மோதுகின்றன. 

இந்த போட்டியில் இந்தியா, தென்கொரியா, பாகிஸ்தான், ஜப்பான், வங்காளதேசம் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன. கொரோனா பிரச்சினை காரணமாக கடைசி நேரத்தில் மலேசியா அணி இந்த போட்டியில் இருந்து விலகி விட்டது. ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

தொடக்க நாளான இன்று 2 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. முதலாவது ஆட்டத்தில் இந்தியா-தென்கொரியா (மாலை 3.30 மணி) அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மற்றொரு ஆட்டத்தில் ஜப்பான்-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டங்களில் நாளை வங்காளதேசத்தையும், வருகிற 17-ந் தேதி பாகிஸ்தானையும், 19-ந் தேதி ஆசிய சாம்பியன் ஜப்பானையும் சந்திக்கிறது.

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இந்தியா 2011, 2016-ம் ஆண்டும், பாகிஸ்தான் 2012, 2013-ம் ஆண்டும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன. கடைசியாக 2018-ம் ஆண்டு மஸ்கட்டில் நடந்த போட்டியில் மழை காரணமாக இறுதி ஆட்டம் ரத்து செய்யப்பட்டதால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கூட்டாக சாம்பியன் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டியில் இந்திய அணி மன்பிரீத் சிங் தலைமையில் களம் காணுகிறது. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்த இந்திய அணி அதன் பிறகு பங்கேற்கும் முதல் சர்வதேச போட்டி இது என்பதால் சிறப்பாக செயல்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த போட்டி குறித்து இந்திய அணியின் கேப்டன் மன்பிரீத் சிங் கூறுகையில், ‘தென்கொரியா சிறந்த அணியாகும். இதே மைதானத்தில் 2017-ம் ஆண்டு நடந்த ஆசிய கோப்பை போட்டியின் லீக் ஆட்டத்தில் தென்கொரியாவுக்கு எதிராக நாங்கள் டிரா (1-1) கண்டோம். எனவே அவர்களுக்கு எதிரான ஆட்டத்தை மெத்தனமாக எடுத்து கொள்ளாமல் இருக்க வேண்டியது முக்கியமானதாகும். 

அவர்களுக்கு எதிரான போட்டியில் அடிப்படை ஆட்டத்தை சரியாக கடைபிடிக்க வேண்டும். டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு நாங்கள் கலந்து கொள்ளும் முதல் போட்டியான இது முக்கியமான ஒன்றாகும். எங்களது அடுத்த கட்ட அட்டவணை ஆரம்பமாகிறது. இந்த சீசனை நாங்கள் நன்றாக தொடங்கினால் எங்களுடைய நம்பிக்கை அதிகரிக்கும். 

எங்கள் அணியினர் அனைவரும் நல்ல நிலையில் உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளில் மற்ற ஆசிய அணிகள் எப்படி தயாராகி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம். இந்த போட்டி எங்களது திறமையை சோதிக்கும் நல்ல களமாக இருக்கும் என்று நினைக்கிறேன்’ என்றார்.


Next Story