சூப்பர் டிவிசன் ஆக்கி: இறுதிப்போட்டியில் ஐ.ஓ.பி.- ஐ.சி.எப். அணிகள் இன்று மோதல்


சூப்பர் டிவிசன் ஆக்கி: இறுதிப்போட்டியில் ஐ.ஓ.பி.- ஐ.சி.எப். அணிகள் இன்று மோதல்
x

கோப்புப்படம் 

58-வது சூப்பர் டிவிசன் லீக் ஆக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

சென்னை,

சென்னை மாவட்ட ஆக்கி சங்கம் சார்பில் ஸ்ரீராம் சிட்டி நிறுவனம் ஆதரவுடன் 58-வது சூப்பர் டிவிசன் லீக் ஆக்கி போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (ஐ.ஓ.பி.) அணி 5-3 என்ற கோல் கணக்கில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை (எஸ்.டி.ஏ.டி.) வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஐ.ஓ.பி. அணியில் ரூபிந்தர் பால்சிங், வினோத் ராயர் தலா 2 கோலும், தாலிப் ஷா ரஹிம் ஷா ஒரு கோலும் அடித்தனர். எஸ்.டி.ஏ.டி. அணியில் திலீபன் 2 கோலும், சந்தரபாண்டி ஒரு கோலும் திருப்பினர்.

மற்றொரு அரைஇறுதியில் ஐ.சி.எப். அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கியை சாய்த்து இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. ஐ.சி.எப். அணியில் தனுஷ், ஷியாம் தலா ஒரு கோல் அடித்தனர். இந்தியன் வங்கி தரப்பில் சோமன்னா ஒரு பதில் கோல் திருப்பினார்.

இன்று மாலை 3.45 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் ஐ.ஓ.பி.-ஐ.சி.எப். அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. முன்னதாக நடைபெறும் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் எஸ்.டி.ஏ.டி.-இந்தியன் வங்கி அணிகள் மோதுகின்றன.


Next Story