பாகிஸ்தான் சிறுமியின் சிகிச்சைக்கு உதவிய கவுதம் கம்பீர்
இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீரின் முயற்சியால் பாகிஸ்தானை சேர்ந்த சிறுமிக்கு இந்தியாவிற்கு வந்து மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்வதற்கான விசா கிடைத்துள்ளது.
புதுடெல்லி,
பாகிஸ்தானை சேர்ந்த ஓமைமா அலி என்ற 7 வயது சிறுமி, பிறவியிலேயே இதயம் சம்பந்தமான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தார். பாகிஸ்தானின் பல இடங்களில் ஓமைமாவிற்கு சிகிச்சை எடுத்த அவளது பெற்றோர், ஓமைமா பிறந்த ஆண்டு அதாவது கடந்த 2012-ம் ஆண்டு இந்தியாவின் நொய்டாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற முடிவெடுத்தனர்.
அதன்படி கிட்டத்தட்ட 8 மாதங்கள் ஓமைமாவிற்கு சிகிச்சை அளித்த நொய்டா மருத்துவர்கள் குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ள பரிந்துரை செய்தனர். அதன் பின்னர் ஓமைமாவின் பெற்றோர்கள் பாகிஸ்தான் திரும்பினர்.
இதனிடையே சமீபத்தில் சிறுமி ஓமைமாவிற்கு மீண்டும் இந்தியாவில் சிகிச்சை எடுக்க முடிவெடுத்த பெற்றோர், இதுதொடர்பாக முன்னாள் பாகிஸ்தான் வீரர் முகமது யூசப்பின் உதவியை நாடி உள்ளனர். இதனையடுத்து முகமது யூசப், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீரை தொடர்பு கொண்டு, ஓமைமாவிற்கு இந்தியாவில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யும்படி கோரிக்கை விடுத்தார்.
இந்த கோரிக்கையை ஏற்ற கவுதம் கம்பீர், மத்திய வெளியுறவு துறை அமைச்சரான ஜெய் சங்கரின் கவனத்துக்கு இதனை உடனே எடுத்துச்சென்றார். இதையடுத்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்ட அமைச்சர் ஜெய்சங்கர், சிறுமிக்கும், சிறுமியின் பெற்றோருக்கும் மருத்துவ விசா வழங்க ஏற்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, இதற்கு உதவிகரமாக இருந்த அமைச்சர் ஜெய்சங்கர், பிரதமர் மோடி, அமித்ஷாவிற்கு கம்பீர் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story