பேட்மிண்டன் லீக் அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சிந்து–கரோலினா அணிகள் மோதல்


பேட்மிண்டன் லீக் அட்டவணை வெளியீடு:  முதல் ஆட்டத்தில் சிந்து–கரோலினா அணிகள் மோதல்
x
தினத்தந்தி 28 Dec 2016 9:20 PM GMT (Updated: 28 Dec 2016 9:20 PM GMT)

பேட்மிண்டன் லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் சிந்து–கரோலினா அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன. பேட்மிண்டன் லீக் 2–வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) திருவிழா வருகிற 1–ந்தேதி முதல் 14–ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் சென்னை ஸ்மாஷர்ஸ், ஐதரா

புதுடெல்லி,

பேட்மிண்டன் லீக் போட்டியின் முதல் ஆட்டத்தில் சிந்து–கரோலினா அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.

பேட்மிண்டன் லீக்

2–வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) திருவிழா வருகிற 1–ந்தேதி முதல் 14–ந்தேதி வரை இந்தியாவில் நடக்கிறது. இதில் சென்னை ஸ்மாஷர்ஸ், ஐதராபாத் ஹன்டர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், டெல்லி ஏசர்ஸ், லக்னோ அவாத் வாரியர்ஸ், மும்பை ராக்கெட்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற 8 பேர் உள்பட மொத்தம் 60 வீரர், வீராங்கனைகள் மட்டையை சுழட்ட காத்திருக்கிறார்கள்.

இதற்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதன்படி ஐதராபாத்தில் ஜனவரி 1–ந்தேதி நடக்கும் முதல் லீக்கில் சென்னை ஸ்மாசர்சும், ஐதராபாத் ஹன்டர்சும் மோதுகின்றன. சென்னை அணியில் ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்துவும், ஐதராபாத் அணியில் ஒலிம்பிக் சாம்பியன் ஸ்பெயினின் கரோலினா மரினும் அங்கம் வகிக்கிறார்கள். முதல் ஆட்டத்தில் இருவரும் நேருக்கு நேர் மல்லுகட்ட இருக்கிறார்கள். அதே நாளில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ்–டெல்லி ஏசர்ஸ் அணிகள் மோதுகின்றன. மொத்தம் 18 ஆட்டங்கள் 5 நகரங்களில் நடக்கின்றன. இறுதிப்போட்டி டெல்லியில் அரங்கேறுகிறது.

இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.6 கோடியாகும். சாம்பியன் பட்டத்தை வெல்லும் அணிக்கு ரூ.3 கோடியும், 2–வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.1½ கோடியும் பரிசாக வழங்கப்படும்.

சென்னையில் போட்டி கிடையாது

முக்கியமான அணியாக சென்னை ஸ்மாஷர்ஸ் கவனிக்கப்பட்டாலும், இந்த முறையும் சென்னையில் போட்டி இல்லாதது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. போட்டியை பிரபலப்படுத்துவதிலும், வர்த்தகத்தை கவனிப்பதிலும் இந்திய பேட்மிண்டன் சம்மேளனத்துடன் கைகோர்த்துள்ள ஸ்போர்ட்ஸ் லைவ் நிறுவன நிர்வாக இயக்குனர் அதுல் பாண்டே கூறும் போது, ‘இந்தியாவில் பேட்மிண்டனுக்கு அதிக வரவேற்பு உள்ள நகரங்களில் ஒன்றான சென்னையில் இந்த போட்டியை நடத்த மிகவும் ஆர்வமாக இருந்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக இந்த முறையும் நடத்த இயலவில்லை. அடுத்த முறை நிச்சயம் சென்னையில் போட்டி இருக்கும்’ என்றார்.


Next Story