ஆசிய தடகள போட்டி: தமிழக வீரர் லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்று சாதனை


ஆசிய தடகள போட்டி: தமிழக வீரர் லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்று சாதனை
x
தினத்தந்தி 6 July 2017 9:15 PM GMT (Updated: 6 July 2017 8:57 PM GMT)

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

புவனேஸ்வரம்,

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்த லட்சுமணன் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

பிறந்த நாள் பரிசு

22-வது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நேற்று முன்தினம் மாலை கோலாகலமாக தொடங்கியது. முதல் நாளில் தொடக்க விழா மட்டுமே நடந்தது. 9-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, பாகிஸ்தான் உள்பட 45 நாடுகளை சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

2-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை மன்பிரீத் கவுர் 18.28 மீட்டர் தூரம் குண்டு எறிந்து இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார். நடப்பு சாம்பியன் அந்தஸ்துடன் நுழைந்த சீனாவின் டியான்குயான் வெள்ளிப்பதக்கமும் (17.91 மீட்டர்), ஜப்பானின் அயா ஒட்டா வெண்கலப்பதக்கமும் (15.45 மீட்டர்) பெற்றனர். மன்பிரீத் கவுருக்கு நேற்று 27-வது பிறந்த நாளகும். பிறந்த நாள் பரிசாக அவருக்கு இந்த மகத்தான வெற்றி கிடைத்திருக்கிறது.

பஞ்சாப்பை சேர்ந்த மன்பிரீத் கவுர் கூறுகையில், ‘எனது வாழ்க்கையில் இது 2-வது சிறந்த செயல்பாடாகும். இந்த போட்டிக்கு முன்பாக 18 மீட்டர் இலக்கை கடக்க வேண்டும். அதற்கு மேல் வீசினால் திருப்திகரமாக இருக்கும் என்று எனக்குள் கூறிகொண்டேன். நினைத்து மாதிரியே நடந்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்றார்.

தமிழக வீரருக்கு தங்கம்

ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்திய வீரர் ஜி.லட்சுமணன் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். அவர் இலக்கை 14 நிமிடம் 54.48 வினாடிகளில் கடந்து முதலாவதாக வந்தார். இதன் மூலம் அடுத்த மாதம் லண்டனில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கு தகுதி பெற்றார். ராணுவத்தில் பணியாற்றும் லட்சுமணன் புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்த பிரிவில் கத்தார் வீரர் யாசிர் சலிம் (14 நிமிடம் 55.89 வினாடி) வெள்ளிப்பதக்கமும், சவுதி அரேபியாவின் தாரிக் அகமது வெண்கலமும் (14 நிமிடம் 56.83 வினாடி) பெற்றனர்.

விகாஸ் கவுடா

ஆண்களுக்கான வட்டு எறிதலில் 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரும், 4 முறை ஆசிய சாம்பியனுமான ஈரான் வீரர் இசான் ஹடாடி 64.54 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கம் வென்றார். மலேசிய வீரர் இர்பான் முகமது 60.96 மீட்டர் தூரம் வீசி வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். கடைசி நேரத்தில் போட்டியில் கலந்து கொண்ட 2 முறை சாம்பியனான இந்திய வீரர் விகாஸ் கவுடா 60.81 மீட்டர் தூரம் வீசி வெண்கலப்பதக்கமே பெற்றார்.

நீளம் தாண்டுதலில் நீனா (வெள்ளிப்பதக்கம்), நயன் ஜேம்ஸ் (வெண்கலம்), பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் சஞ்ஜீவினி யாதவ் (வெண்கலம்), ஈட்டி எறிதலில் அனுராணி (வெண்கலம்) ஆகியோரும் இந்தியாவுக்கு பதக்கத்தை பெற்றுத்தந்தனர். ஒரே நாளில் இந்தியாவுக்கு மொத்தம் 7 பதக்கம் கிட்டியது.

Next Story