பிரிமீயர் பேட்மிண்டன் லீக்: சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்தை அந்தந்த அணிகள் தக்க வைத்து கொண்டன


பிரிமீயர் பேட்மிண்டன் லீக்:  சிந்து, சாய்னா, ஸ்ரீகாந்தை அந்தந்த அணிகள் தக்க வைத்து கொண்டன
x
தினத்தந்தி 9 Oct 2017 11:15 PM GMT (Updated: 9 Oct 2017 9:00 PM GMT)

பிரிமீயர் பேட்மிண்டன் லீக் போட்டிக்கான வீரர்கள் ஏலம் நேற்று நடந்தது.

ஐதராபாத்,

சிந்துவை சென்னை ஸ்மா‌ஷர்ஸ், சாய்னா நேவால், ஸ்ரீகாந்த் ஆகியோரை அவதே வாரியர்ஸ் அணிகள் தக்க வைத்து கொண்டன.

மொத்தம் ரூ.6 கோடி பரிசுத்தொகைக்கான 3–வது பிரிமீயர் பேட்மிண்டன் லீக் (பி.பி.எல்.) போட்டி டிசம்பர் 22–ந்தேதி முதல் ஜனவரி 14–ந் தேதி வரை மும்பை, ஐதராபாத், லக்னோ, சென்னை, கவுகாத்தி உள்பட 5 நகரங்களில் நடைபெறுகிறது. சென்னை ஸ்மா‌ஷர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், அவதே வாரியர்ஸ் (லக்னோ), பெங்களூரு பிளாஸ்டர்ஸ் உள்பட 8 அணிகள் பங்கேற்கின்றன.

இந்த போட்டிக்கான வீரர், வீராங்கனைகளின் ஏலம் ஐதராபாத்தில் நேற்று நடந்தது. 82 இந்தியர்கள் உள்பட மொத்தம் 11 நாடுகளைச் சேர்ந்த 120 பேர் ஏலப்பட்டியலில் இடம் பெற்று இருந்தனர்.

சமீபத்தில் நடந்த உலக போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்துவை நடப்பு சாம்பியன் சென்னை ஸ்மா‌ஷர்ஸ் அணி தக்க வைத்து கொண்டது. அவரது தொகை ரூ.48 லட்சத்து 75 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் அவருக்கு ரூ.39 லட்சம் அளிக்கப்பட்டது.

உலக போட்டி மற்றும் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய வீராங்கனை சாய்னா நேவாலை அவதே வாரியர்ஸ் அணி ரூ.41 லட்சத்து 25 ஆயிரம் கொடுத்து தக்க வைத்துள்ளது. கடந்த ஆண்டு அவருக்கு 33 லட்சம் வழங்கப்பட்டது. இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா ஓபன் பட்டத்தை வென்ற இந்திய வீரர் ஸ்ரீகாந்தை அவதே வாரியர்ஸ் அணி ரூ.56 லட்சத்துக்கு 10 ஆயிரத்துக்கு தக்க வைத்து இருக்கிறது.

‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்கை (சீனத்தைபே) ஆமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணி ரூ.52 லட்சத்துக்கு வாங்கியது. ரியோ ஒலிம்பிக் சாம்பியன் கரோலினா மரினை (ஸ்பெயின்) ஐதராபாத் ஹன்டர்ஸ் அணி ரூ.50 லட்சத்துக்கு ஏலத்தில் எடுத்தது. உலக சாம்பியனும், நம்பர் ஒன் வீரருமான விக்டர் ஆக்சல்சென்னை (டென்மார்க்) ரூ.50 லட்சத்துக்கு பெங்களூரு பிளாஸ்டர்ஸ் அணி தன்வசப்படுத்தியது. 2–ம் நிலை வீரர் சன் வான் ஹோ (தென்கொரியா), 5–ம் நிலை வீராங்கனை சுங் ஜி ஹூன் (தென்கொரியா) ஆகியோரை தலா ரூ.50 லட்சத்துக்கு டெல்லி ஏசர்ஸ் அணி வாங்கியது.

இந்திய வீரர்கள் சமீர் வர்மாவை (ரூ.52 லட்சம்) மும்பை ராக்கெட்ஸ் அணியும், அஜய் ஜெயராமை (ரூ.45 லட்சம்) நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணியும் வாங்கி உள்ளது.

உலக தர வரிசையில் 10–வது இடத்தில் இருக்கும் சு வெய் வாங்கை (சீனத்தைபே) ரூ.52 லட்சத்துக்கு நார்த் ஈஸ்டர்ஸ் வாரியர்ஸ் அணி எடுத்தது. இந்திய இரட்டையர் வீராங்கனை அஸ்வினி பொண்ணப்பாவை டெல்லி ஏசர்ஸ் ரூ.20 லட்சத்துக்கு வாங்கியது. இந்திய வீரர் பிரனாயை ரூ.62 லட்சத்துக்கு ஆமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் அணி வாங்கியது. இந்திய வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் போனவர் பிரனாய் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு அணியும் 2.12 கோடி வரை வீரர்களை ஏலத்தில் எடுக்க செலவு செய்யலாம். அதிகபட்சமாக ஒருவரை ரூ.72 லட்சத்திற்கு ஏலத்தில் எடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story