பிற விளையாட்டு

துளிகள் + "||" + Drops

துளிகள்

துளிகள்
பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையே பொதுவான இடமான ஐக்கிய அரபு அமீரகத்தில் கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
* பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2–0 என்ற கணக்கில் கைப்பற்றிய இலங்கை அணி அடுத்ததாக 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஆடுகிறது. இதன் முதலாவது ஒரு நாள் போட்டி துபாயில் இன்று நடக்கிறது. உபுல் தரங்கா தலைமையிலான இலங்கை அணியில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவுக்கு இடம் கிடைக்கவில்லை. டெஸ்ட் தொடரில் அடைந்த தோல்விக்கு சர்ப்ராஸ் அகமது தலைமையிலான பாகிஸ்தான் அணி பதிலடி கொடுக்க முனைப்பு காட்டும். இவ்விரு அணிகளும் இதுவரை 148 ஒரு நாள் போட்டிகளில் நேருக்கு நேர் மோதி அதில் 85–ல் பாகிஸ்தானும், 58–ல் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது. 4 ஆட்டங்களில் முடிவு இல்லை. இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை சோனி சிக்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

* சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் முதல் 3 இடங்களில் முறையே இந்தியா (120 புள்ளி), தென்ஆப்பிரிக்கா (119 புள்ளி), ஆஸ்திரேலியா (114 புள்ளி) ஆகிய அணிகள் உள்ளன. சமீபத்தில் இழந்த ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிப்பதற்கு தென்ஆப்பிரிக்காவுக்கு மீண்டும் சந்தர்ப்பம் கனிந்துள்ளது. தரவரிசையில் 7–வது இடத்தில் உள்ள வங்காளதேசத்துக்கு எதிராக தென்ஆப்பிரிக்க அணி நாளை மறுதினம் முதல் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் சொந்த ஊரில் மோத இருக்கிறது. இந்த தொடரை தென்ஆப்பிரிக்கா 3–0 என்ற கணக்கில் கைப்பற்றினால் தரவரிசையில் 121 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறலாம். 2–0 என்ற கணக்கில் வென்றாலும் மயிரிழையில் இந்தியாவை முந்தும். அதே சமயம் 2–1 என்ற கணக்கில் தொடரை வசப்படுத்தினால் 2–வது இடத்திலேயே நீடிக்கும். ஒரு வேளை தென்ஆப்பிரிக்கா முதலிடத்தை தட்டிப்பறிக்க நேர்ந்தாலும், அடுத்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை 3–0 என்ற கணக்கில் இந்திய அணி வெல்லும் பட்சத்தில் மறுபடியும் நமது அணி அரியணையில் ஏறி விடும்.

* ஆசிய கோப்பை கால்பந்து போட்டி 2019–ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ‘ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் இந்திய அணி நேற்று முன்தினம் மக்காவ் அணியை பெங்களூருவில் எதிர்கொண்டது. அபாரமாக ஆடிய சுனில் சேத்ரி தலைமையிலான இந்தியா 4–1 என்ற கோல் கணக்கில் மக்காவை புரட்டியெடுத்தது. தனது பிரிவில் 4 வெற்றிகளுடன் (12 புள்ளி) தொடர்ந்து முதலிடம் வகிக்கும் இந்திய அணி இதன் மூலம் ஆசிய போட்டிக்கும் தகுதி பெற்றது. 2011–ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியில் விளையாடும் வாய்ப்பை இந்தியா பெற்றிருக்கிறது.

* அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் டெஸ்ட் கிரிக்கெட் அந்தஸ்தை ஐ.சி.சி. வழங்கியது. இந்த நிலையில் அயர்லாந்து தனது அறிமுக டெஸ்ட் போட்டியை பாகிஸ்தானுடன் விளையாட இருக்கிறது. 2018–ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தான் அணி தங்கள் நாட்டுக்கு வருகை தந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆட சம்மதித்து இருப்பதாக அயர்லாந்து கிரிக்கெட் வாரிய நிர்வாகி வாரென் டியூட்ரோம் நேற்று தெரிவித்தார்.