‘உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் சிறப்பாக செயல்படுவேன்’ பி.வி.சிந்து நம்பிக்கை


‘உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டியில் சிறப்பாக செயல்படுவேன்’ பி.வி.சிந்து நம்பிக்கை
x
தினத்தந்தி 11 Dec 2017 10:15 PM GMT (Updated: 11 Dec 2017 7:53 PM GMT)

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் சிறப்பாக செயல்படுவேன் என்று இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தெரிவித்தார்.

ஐதராபாத்,

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதிப்போட்டி துபாயில் நாளை (புதன்கிழமை) முதல் 17-ந் தேதி வரை நடக்கிறது. இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தலா 8 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். பெண்கள் ஒற்றையரில் இந்திய வீராங்கனையும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான பி.வி.சிந்து ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளார். அந்த பிரிவில் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் அகானே யமகுச்சி (ஜப்பான்) 15-ம் நிலை வீராங்கனை சயகோ சாடோ (ஜப்பான்), 9-ம் நிலை வீராங்கனை ஹி பிங்ஜியோ (சீனா) ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையரில் இந்திய வீரரும், உலக தரவரிசையில் 4-வது இடத்தில் இருப்பவருமான ஸ்ரீகாந்த் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளார். அந்த பிரிவில் நம்பர் ஒன் வீரர் விக்டர் ஆக்ஸ்ல்சென் (டென்மார்க்), 7-ம் நிலை வீரர் ஷோ டின் சென் (சீன தைபே), 8-ம் நிலை வீரர் ஷி யுகி (சீனா) ஆகியோரும் இடம் பிடித்துள்ளனர்.

இந்த போட்டி குறித்து இந்திய வீராங்கனையான 22 வயது பி.வி.சிந்து அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்த ஆண்டு எனக்கு சிறப்பானதாக அமைந்தது. எனது செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிக்கிறது. 2 சூப்பர் சீரிஸ் (இந்திய ஓபன், கொரியா ஓபன்) பட்டங்களை வென்றேன். ஒரு சூப்பர் சீரிஸ் (ஹாங்காங்) போட்டியில் 2-வது இடம் பெற்றேன். உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றேன். எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. ஏனெனில் இந்த சீசனில் நான் நன்றாக செயல்பட்டு இருக்கிறேன். ஆண்டின் இறுதியை நல்ல அறிகுறியுடன் முடிப்பேன். துபாயில் நடைபெறும் உலக சூப்பர் சீரிஸ் போட்டியில் சிறப்பாக செயல்பட முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

உலக சூப்பர் சீரிஸ் போட்டியில் தரவரிசையில் உயர்ந்த நிலையில் உள்ள வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். எனவே இந்த போட்டி தொடர் எளிதாக இருக்காது. முதல் சுற்று முதலே எல்லா ஆட்டங்களும் மிகவும் கடினமாக இருக்கும். எனவே தொடக்கம் முதலே சிறப்பாக விளையாட தயாராக வேண்டும். ஒவ்வொரு வீராங்கனைக்கும் வெவ்வேறு விதமான ஆட்ட பாணி இருக்கும். ஒவ்வொரு போட்டியும் வித்தியாசமானது என்று நான் நினைக்கிறேன். போட்டிகள் தொடர்ச்சியாக இருந்தாலும் அதற்கு தகுந்தபடி பணிச்சுமையை கையாளும் விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்த ஆண்டு முதல் ‘டாப்-15’ இடத்துக்குள் இருக்கும் வீரர்-வீராங்கனைகள் கட்டாயம் 12 சர்வதேச போட்டியில் விளையாட வேண்டும் என்று தெரிவித்து இருப்பதால் அதிக போட்டிகளில் ஆட வேண்டியது சிரமமாக இருக்கும். அதற்கு தகுந்தபடி எனது பயிற்சியாளருடன் ஆலோசனை நடத்தி திட்டமிட்டு செயல்படுவேன்.

இவ்வாறு பி.வி.சிந்து கூறினார்.

24 வயதான ஸ்ரீகாந்த் அளித்த பேட்டியில், ‘எனது காயம் சரியாகி விட்டது. தற்போது நல்லநிலையில் பயிற்சி எடுத்து வருகிறேன். உலக சூப்பர் சீரிஸ் போட்டியில் வெல்ல வேண்டும் என்பதே முக்கிய இலக்காகும். தர வரிசையில் முதலிடத்தை பிடிப்பதை விட இந்த போட்டியில் வெல்ல வேண்டும் என்பதே எனக்கு முக்கியமானது. எனது ஆட்ட திறனில் மட்டுமே கவனம் செலுத்த விரும்புகிறேன்’ என்று தெரிவித்தார். இந்த ஆண்டில் ஸ்ரீகாந்த் 4 சூப்பர் சீரிஸ் பட்டங்களை வென்று சாதனை படைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story