இறுதிப்போட்டியில் சிந்து போராடி தோல்வி


இறுதிப்போட்டியில் சிந்து போராடி தோல்வி
x
தினத்தந்தி 17 Dec 2017 10:30 PM GMT (Updated: 17 Dec 2017 7:11 PM GMT)

உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன்: இறுதிப்போட்டியில் சிந்து போராடி தோல்வி அடைந்தார்.

துபாய்,

டாப்-8 வீரர், வீராங்கனைகள் மட்டுமே பங்கேற்ற 10-வது உலக சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் இறுதி சுற்று போட்டி துபாயில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடம் வகிக்கும் பி.வி.சிந்துவும் (இந்தியா), 2-ம் நிலை வீராங்கனை அகானே யமாகுச்சியும் (ஜப்பான்) மோதினர். முதல் செட்டை எளிதில் வசப்படுத்திய சிந்து, 2-வது செட்டில் பதற்றத்தில் கோட்டை விட்டார். இதையடுத்து வெற்றியை நிர்ணயிக்கும் 3-வது செட்டில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதில் ஒரு கட்டத்தில் சிந்து 11-5 என்ற கணக்கில் வலுவான முன்னணியில் இருந்தார். பிறகு யமாகுச்சி சரிவில் இருந்து மீண்டு 13-13 என்று சமனுக்கு கொண்டு வந்தார். இதன் பிறகு ஆட்டத்தில் அனல் பறந்தது. ஒரு கேமில் இருவரும் இடைவிடாது 52 ஷாட்டுகள் அடித்த போது, ரசிகர்கள் வியந்து போனார்கள். 17-17, 19-19 என்று இறுதிவரை சமநிலையே நீடித்தது.

ஆனால் கடைசி கட்டத்தில் சிந்து அடுத்தடுத்து இரண்டு முறை பந்தை வலையில் அடித்து தவறிழைக்க வெற்றிக்கனி எதிராளி வசம் சென்று விட்டது. 1 மணி 34 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான இந்த மோதலில் பி.வி.சிந்து 21-15, 12-21, 19-21 என்ற செட் கணக்கில் போராடி தோற்று வெள்ளிப்பதக்கத்துடன் திருப்திபட வேண்டியதாயிற்று. இதன் மூலம் லீக்கில் சிந்துவிடம் அடைந்த தோல்விக்கு யமாகுச்சி பழிதீர்த்துக் கொண்டார்.

கவுரவமிக்க இந்த போட்டித் தொடரில் இதுவரை எந்த இந்தியரும் சாம்பியன் பட்டத்தை வென்றது கிடையாது. ஏற்கனவே 2011-ம் ஆண்டு சாய்னா நேவாலும், 2009-ம் ஆண்டு கலப்பு இரட்டையரில் ஜூவாலா கட்டா-திஜூ ஜோடியினரும் இதே போல் இறுதிப்போட்டியில் தோற்று இருந்தனர்.

Next Story