துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 24 Dec 2017 8:30 PM GMT (Updated: 24 Dec 2017 7:18 PM GMT)

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து வருகிறார்.

பேட்டிங் சாதனைகள் அனைத்தையும் கோலி முறியடிப்பார்– யூனிஸ்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வக்கார் யூனிஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கேப்டன் விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்து வருகிறார். அவர் இதே போன்று தொடர்ந்து விளையாடி, உடல்தகுதியை தக்க வைத்து, தனது ஆட்டத்திறனை மேம்படுத்துவதற்கும் முக்கியத்துவம் அளித்து செயல்படுவாரே என்றால், வருங்காலங்களில் பேட்டிங்கில் உள்ள எல்லா சாதனைகளையும் உடைத்து விடுவார்’ என்றார். சச்சின் தெண்டுல்கர், பிரையன் லாரா ஆகியோரை ஒப்பிட்டு பேசிய வக்கார் யூனிஸ், ‘தெண்டுல்கரை போன்று அர்ப்பணிப்புடன் விளையாடிய வீரரை பார்த்ததில்லை. எனது பந்து வீச்சை எதிர்கொண்டவர்களில் தெண்டுல்கரே சிறந்த பேட்ஸ்மேன்’ என்றார். பிரையன் லாராவிடம் இயற்கையாகவே திறமை உண்டு. தனக்குரிய நாளாக அமையும் போது எதிரணி பந்து வீச்சை துவம்சம் செய்து விடுவார் என்றும் வக்கார் யூனிஸ் கூறினார்.

தெற்காசிய ஜூனியர் கால்பந்தில் இந்தியா தோல்வி

பெண்களுக்கான தெற்காசிய ஜூனியர் கால்பந்து போட்டி (15 வயதுக்குட்பட்டோர்) டாக்காவில் நடந்தது. இதில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்தியா–வங்காளதேச அணிகள் மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் 41–வது நிமிடத்தில் வங்காளதேசத்தின் ‌ஷம்சுன் நாஹர் கோல் அடித்தார். முடிவில் வங்காளதேச அணி 1–0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை வசப்படுத்தியது. லீக் சுற்றிலும் இந்திய அணி, வங்காளதேசத்திடம் தோற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் கிரிக்கெட்: டிவில்லியர்ஸ் தயார்

ஒரு நாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தி வந்த தென்ஆப்பிரிக்க அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிவில்லியர்ஸ் மீண்டும் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார். தென்ஆப்பிரிக்கா–ஜிம்பாப்வே இடையிலான 4 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டி (பகல்–இரவு) போர்ட்எலிசபெத்தில் நாளை தொடங்குகிறது. இதில் களம் இறங்க உள்ள டிவில்லியர்ஸ் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘இங்குள்ள சூழலுக்கும், பகல்–இரவு டெஸ்ட் போட்டிக்கும் ஏற்ப என்னை மாற்றிக்கொள்ள முடியும். கடந்த 6 மாதங்களாக பழைய நிலைக்கு திரும்ப கடினமாக உழைத்தேன். ஜூலை மாதம் பிரிட்டோரியா பல்கலைக்கழகத்தில் சிவப்பு நிற பந்துகளை எதிர்கொண்டு ஆடினேன். அப்போது சில தொழில்நுட்ப குறைபாடுகளை சரி செய்து கொண்டேன். இப்போது டெஸ்ட் போட்டிக்கு தயாராக இருப்பதாக உணர்கிறேன்’ என்றார்.

மேலும் டிவில்லியர்ஸ் கூறுகையில், ‘தற்போது சிறந்த கேப்டன்களில் ஒருவராக இந்தியாவின் விராட் கோலி திகழ்கிறார். முதல்முறையாக அவரை கேப்டனாக பார்த்ததில் இருந்து இப்போது நிறைய முன்னேற்றம் கண்டிருக்கிறார். விராட் கோலி மனஉறுதி மிக்க ஒரு கேப்டன் என்பதை அறிவோம். அவர் தென்ஆப்பிரிக்க மண்ணில் வெற்றி பெற்று வரலாறு படைக்க முயற்சிப்பார். இந்தியா–தென்ஆப்பிரிக்கா தொடர் சவால் நிறைந்ததாக இருக்கும். அதை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்’ என்றார். 33 வயதான டிவில்லியர்ஸ் கடைசியாக 2016–ம் ஆண்டு ஜனவரி மாதம் டெஸ்ட் போட்டியில் விளையாடி இருந்தது நினைவு கூரத்தக்கது.


Next Story