மகத்தான மாற்றுத்திறனாளி வீரர்!


மகத்தான மாற்றுத்திறனாளி வீரர்!
x
தினத்தந்தி 29 Dec 2017 11:15 PM GMT (Updated: 29 Dec 2017 9:37 AM GMT)

உடல் குறைபாடு ஒரு குறைபாடே அல்ல என்று கூடைப் பந்தில் தேசிய அளவில் சாதித்து வருகிறார், விஷ்ணுராம்.

திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டியைச் சேர்ந்த விஷ்ணுராம், அங்குள்ள என்.எஸ்.வி.வி. ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில் 12-ம் வகுப்புப் படிக்கிறார். பிறவியிலேயே காது கேளாதவர், வாய் பேசாதவர்.

ஆனால் தனது தந்தை ரமேஷ்பாபுவின் பயிற்சியில் கூடைப்பந்தில் வெற்றிகளைக் குவித்துக்கொண்டே இருக்கிறார்.

மகனைப் பற்றி பெருமிதம் பொங்க ரமேஷ்பாபு கூறும்போது...

“நான் மாநில அளவிலான முன்னாள் கூடைப்பந்து வீரன். மாநிலப் போட்டிகளில் சிறந்த வீரர் விருது உள்ளிட்ட பல பரிசு களைப் பெற்றிருக்கிறேன்.

விஷ்ணுராம் சிறுவயதில் தனது உடல் குறைபாடு காரணமாக வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடப்பதைப் பார்த்து நான் மிகவும் வருந்தினேன். எனவே என்னைப் போல அவனையும் ஒரு சிறந்த கூடைப்பந்து வீரனாக்க எண்ணினேன். அந்த எண்ணத்தை நனவாக்க நாங்கள் இருவருமே சேர்ந்து உழைத்தோம். அதன் பலன்தான் அவன் தற்போது தேசிய அணிக்கு விளையாடும் அளவுக்கு உயர்ந்திருக்கிறான்” என்றார்.

விஷ்ணுராம் ஏழாம் வகுப்பு படிக்கும்போது அவரை தினமும் காலையில் பட்டிவீரன்பட்டியில் இருந்து வத்தலக்குண்டு வரை 8 கி.மீ. தூரம் ஓட்டப்பயிற்சியில் ஈடுபடுத்தியிருக்கிறார், ரமேஷ்பாபு. அத்துடன் தான் கூடைப்பந்து விளையாடச் செல்லும் இடங்களுக்கு எல்லாம் மகனையும் அழைத்துச் சென்றிருக் கிறார்.

விஷ்ணுராம் எட்டாம் வகுப்பு படிக்கையில், பள்ளிகளுக்கு இடையிலான வட்டார அளவிலான கூடைப்பந்துப் போட்டியில் பங்கேற்றிருக்கிறார். அதில் தனது அணி பெற்ற 41 புள்ளிகளில் 37 புள்ளிகளை தானே பெற்றுக் கொடுத்திருக்கிறார்.

விரைவிலேயே வழக்கமான தமிழக 14 வயதுக்கு உட்பட்டோர் அணிக்குத் தேர்வானார். சத்தீஷ்கர் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய கூடைப்பந்தாட்டப் போட்டியில் பங்கேற்றார். அதில் தமிழக அணி இறுதியில் தோல்வியைத் தழுவினாலும், சிறந்த வீரர் விருது விஷ்ணுராமுக்கே கிடைத்தது. தொடர்ந்து, வழக்கமான தமிழக கூடைப்பந்து அணியில் நான்கு முறை ஆடியிருக்கிறார்.

கடந்த 2016-ம் ஆண்டு இந்திய காது கேளாதோர் கூடைப்பந்து அணிக்கான தேர்வு புதுச்சேரியில் நடைபெற்றபோது, அதில் அணியின் கேப்டனாகவே விஷ்ணுராம் அறிவிக்கப்பட்டார். ஆனால், ஜப்பான் செல்லவிருந்த இந்திய அணியின் பயணம் எதிர்பாராதவிதமாக ரத்து செய்யப்பட்டுவிட்டது.

இருந்தபோதும் விஷ்ணுராம் மனம் சோரவில்லை. சென்னை நேரு விளையாட்டரங்கில் நடந்த காது கேளாதோருக்கான அகில இந்தியக் கூடைப்பந்து போட்டியில் புதுச்சேரி அணி சார்பில் விஷ்ணுராம் ஆடினார். இறுதிப்போட்டியில் அந்த அணி வெல்லவும் பிரதான காரணமாயிருந்தார்.

கடந்த ஆண்டு ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடைபெற்ற அகில இந்தியப் போட்டியிலும் புதுச்சேரி அணி சார்பில் ஆடினார், இவர். அந்த அணியின் மேலாளராக இருந்தவர், விஷ்ணு ராமின் தந்தை ரமேஷ்பாபுதான்.

அத்தொடரின் இறுதிப்போட்டியில் புதுச்சேரியும் கர்நாடகமும் மோத, 63- 31 என்ற புள்ளிக் கணக்கில் புதுச்சேரி வெற்றி பெற்றது. புதுச்சேரி அணி சார்பில் விஷ்ணுராம் மட்டும் 43 புள்ளிகளைக் குவித்தது குறிப்பிடத்தக்கது.

2018-ம் ஆண்டுக்கான இந்திய காது கேளாதோர் கூடைப்பந்து அணி தேர்வு நடைபெறவிருக்கும் நிலையில், அதற்காக தந்தையின் வழிகாட்டலில் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், விஷ்ணுராம்.

இவரது தம்பி தனுஷ்ராம் 7-ம் வகுப்பு படிக்கிறார். அவரும் அண்ணன் வழியில் கூடைப்பந்தில் ஈடுபடத் தொடங்கி யிருக்கிறார்.

விஷ்ணுராமின் தாய் ஷர்மிளா மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர். தன்னாலான ஆதரவை மகனுக்கு வழங்கிவருகிறார் இவர்.

தடைகளை எல்லாம் தாண்டி, உயரே... உயரே... உச்சியிலே... என்று உச்சங்களை எட்டப் போராடும் விஷ்ணுராமும் அவரது தந்தை ரமேஷ்பாபுவும் பாராட்டுக்குரியவர்கள்! 

Next Story