பிற விளையாட்டு

பேட்மிண்டன் பிரிமியர் லீக்: சென்னை சுற்று இன்று தொடக்கம் + "||" + Badminton Premier League: Chennai Round Start Today

பேட்மிண்டன் பிரிமியர் லீக்: சென்னை சுற்று இன்று தொடக்கம்

பேட்மிண்டன் பிரிமியர் லீக்: சென்னை சுற்று இன்று தொடக்கம்
பேட்மிண்டன் பிரிமியர் லீக் போட்டியின் சென்னை சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.

சென்னை,

பேட்மிண்டன் பிரிமியர் லீக் போட்டியின் சென்னை சுற்று ஆட்டங்கள் இன்று தொடங்குகிறது.

பேட்மிண்டன் பிரிமியர் லீக்

3–வது பேட்மிண்டன் பிரிமியர் லீக் (பி.பி.எல்.) போட்டி கடந்த 23–ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதில் சென்னை ஸ்மா‌ஷர்ஸ், ஆமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ், லக்னோ அவாதே வாரியர்ஸ், பெங்களூரு பிளாஸ்டர்ஸ், டெல்லி டா‌ஷர்ஸ், ஐதராபாத் ஹன்டர்ஸ், மும்பை ராக்கெட்ஸ், நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் ஆகிய 8 அணிகள் கலந்து கொண்டுள்ளன. கவுகாத்தி, டெல்லி, லக்னோ ஆகிய இடங்களில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து விட்டன.

ஒவ்வொரு போட்டியிலும் ஆண்கள் ஒற்றையர், இரட்டையர், பெண்கள் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் ஆகிய 5 ஆட்டங்கள் இடம் பெறும். 15 புள்ளி அடிப்படையில் முடிவு நிர்ணயிக்கப்படும். ஒவ்வொரு வெற்றிக்கும் ஒரு புள்ளி வழங்கப்படும். 5 ஆட்டங்களில் ஒன்றை துருப்பு ஆட்டமாக (டிரம்ப் மேட்ச்) தேர்வு செய்து விளையாட வேண்டும். போட்டியில் சுவாரஸ்யத்தையும், பரபரப்பையும் கொண்டு வர வேண்டும் என்பதற்காக இந்த ஒரு ஆட்டத்துக்கு மட்டும் வெற்றி காணும் அணிக்கு 2 புள்ளி வழங்கப்படும். அத்துடன் ‘டிரம்ப்’ ஆட்டத்தில் தோற்கும் அணியின் ஒட்டுமொத்த புள்ளிகளில் ஒன்று குறைக்கப்படும்.

சென்னை சுற்று இன்று தொடக்கம்

ஒவ்வொரு அணியும் 5 லீக் ஆட்டத்தில் விளையாட வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும். இதுவரை நடந்த லீக் ஆட்டங்கள் முடிவில் சாய்னா நேவால் தலைமையிலான லக்னோ அவாதே வாரியர்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. பெங்களூரு பிளாஸ்டர்ஸ் 2–வது இடத்திலும், ஆமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ் 3–வது இடத்திலும், டெல்லி டா‌ஷர்ஸ் 4–வது இடத்திலும் உள்ளன. பி.வி.சிந்து தலைமையிலான சென்னை ஸ்மா‌ஷர்ஸ் அணி 7–வது இடத்தில் தான் உள்ளது. அந்த அணி அரைஇறுதிக்கு தகுதி பெறுவது என்பது கடினமான வி‌ஷயமாகும்.

இந்த நிலையில் சென்னை சுற்று லீக் ஆட்டம் நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 9–ந் தேதி வரை நடக்கிறது. இதில் சென்னை ஸ்மா‌ஷர்ஸ் அணி தனது எஞ்சிய 2 ஆட்டங்களிலும் பெரிய வெற்றி பெற்றால் தான் அரைஇறுதி வாய்ப்பு குறித்து நினைத்து பார்க்க முடியும். கடைசி சுற்று ஆட்டங்கள் ஐதராபாத்தில் வருகிற 10, 11–ந் தேதிகளில் நடைபெறுகிறது.

பெங்களூரு–நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் இன்று மோதல்

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு தொடங்கும் லீக் ஆட்டத்தில் பெங்களூரு பிளாஸ்டர்ஸ்–நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. அதேநேரத்தில் நேரு உள்விளையாட்டு அரங்கின் நுழைவு வாயிலில் உள்ள கவுண்ட்டரில் காலை 10 மணி முதல் போட்டி தொடங்கும் வரை டிக்கெட் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ.249, ரூ.400, ரூ.600, ரூ.800 என டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னை சுற்று அட்டவணை

தேதி மோதும் அணிகள்

ஜன.5: பெங்களூரு பிளாஸ்டர்ஸ்–நார்த் ஈஸ்டர்ன் வாரியர்ஸ்

ஜன.6: சென்னை ஸ்மா‌ஷர்ஸ்–ஆமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ்

ஜன.7: ஐதராபாத் ஹன்டர்ஸ்–லக்னோ அவாதே வாரியர்ஸ்

ஜன.8: சென்னை ஸ்மா‌ஷர்ஸ்–பெங்களூரு பிளாஸ்டர்ஸ்

ஜன.9: மும்பை ராக்கெட்ஸ்–ஆமதாபாத் ஸ்மாஷ் மாஸ்டர்ஸ்

(குறிப்பு: இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவி‌ஷன் நேரடி ஒளிபரப்பு செய்கிறது)