ஆனந்தின் ‘பிளாஷ்பேக்’ ஆனந்தம்!


ஆனந்தின் ‘பிளாஷ்பேக்’ ஆனந்தம்!
x
தினத்தந்தி 13 Jan 2018 7:25 AM GMT (Updated: 13 Jan 2018 7:25 AM GMT)

ரேபிட் சாம்பியன்ஷிப் வெற்றி, தனக்கு பழைய ‘பிளாஷ்பேக்’ நினைவுகளை கிளறிவிட்டதாகக் கூறுகிறார், ஆனந்த்.

மீபத்தில் உலக ரேபிட் செஸ் சாம்பியன்ஷிப்பை வென்றதன் மூலம் மீண்டும் உலகத்தின் கவனத்தைத் தன் பக்கம் திருப்பி யிருக்கிறார், சென்னை செஸ் நாயகர் விஸ்வநாதன் ஆனந்த்.

ரேபிட் சாம்பியன்ஷிப் வெற்றி, தனக்கு பழைய ‘பிளாஷ்பேக்’ நினைவுகளை கிளறிவிட்டதாகக் கூறுகிறார், ஆனந்த்.

“எனக்கு ஏதோ காலம் உறைந்துவிட்டது போலத் தோன்றியது. மீண்டும் சில ஆண்டுகள் நான் பின்னால் போய்விட்டேன். ஆம், சில ஆண்டுகள் முன்புவரை நான் ரேபிட் செஸ் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தியது எனக்கு ஞாபகம் வந்தது” என்கிறார்.

ரியாத்தில் நடைபெற்ற ரேபிட் செஸ் போட்டியில் தோல்வியையே தழுவாமல் முழுக்க முழுக்க ஆதிக்கம் செலுத்தினார் ஆனந்த்.

48 வயதாகும் ஆனந்துக்கு இந்த வெற்றி சில விதங்களில் முக்கியமானது. முதலாவது, 2000 ஆண்டுக்குப் பிறகு ஆனந்த் வெல்லும் முதல் ரேபிட் பட்டம் என்ற வகையில் அவரது தரத்தை இது மீண்டும் அழுத்தமாகப் பதிவு செய்திருக்கிறது. இரண்டாவதாக, ஆனந்த் ஓய்வுபெற வேண்டிய காலம் இது என்று எழுந்த குரல்களை அடக்கி யிருக்கிறது.

சரி, முன்னாள் உலக சாம்பியன் ஆனந்த் என்ன சொல்கிறார்?

“நான் ஒரு கடினமான ஆண்டுக்குப் பின் இந்தத் தொடரில் ஆட வந்தேன். குறிப்பாக, லண்டன் செஸ் கிளாசிக் தொடர் எனக்குப் பெரும் ஏமாற்றமாக அமைந்தது. லண்டன் தொடர் குறித்து எனக்குப் பெரிதாக எதிர்பார்ப்பு இல்லை. ஆனாலும்கூட நாம் நன்றாக விளையாட முடியும் என்று எண்ணினேன். ஆனால் அங்கே கடைசி இடம் பெற்றது பெருத்த அடி. அது ரியாத் தொடருக்கு எந்த வகையிலும் உற்சாகம் தருவதாக இல்லை. தவிர, நான் விளையாடிய கடைசி இரண்டு ரேபிட் சாம்பியன்ஷிப்களிலும் மோசமான முடிவுகளே கிடைத்தன. எனவே நான் இங்கே கொஞ்சம் அவநம்பிக்கையான மனநிலையில்தான் வந்தேன் என்பதைக் கூறவேண்டும்” என்று சொல்லும் ஆனந்த், ரியாத்தில் முதல் நாளிலேயே நல்லவிதமாக உணர்ந்ததாகக் கூறுகிறார்.

“அங்கு, நான் நன்றாக விளையாடுவதை உணர்ந்தேன். எனது மனநிலையும் சிறப்பாக இருந்தது” என்கிறார்.

ஆரம்பத்திலேயே உருவான நேர்மறை உணர்வு, ஆனந்துக்கு வெற்றிகளை அள்ளித் தந்தது. 15 சுற்றுகளில் இவர் ஆறில் வென்றார், ஒன்பதை டிரா செய்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக அமைந்தது, உலகின் நம்பர் 1 வீரரும், ஆனந்தின் சமீபத்திய தொந்தரவாளருமான மாக்னஸ் கார்ல்சனுக்கு எதிராகப் பெற்ற வெற்றி.

“மாக்னஸ் கார்ல்சனுக்கு எதிராகப் பெற்றது முக்கியமான வெற்றி. எப்போதையும் போலவே இங்கும் அவர் சிறப்பான பார்மில் இருந்தார். கடைசி சில சுற்றுகளில் அவர்தான் வெற்றி பெறுவார் என்றே நான் நினைத்தேன்” -வெளிப்படையாகப் பேசுகிறார் ஆனந்த்.

“அவருடனான தீவிரமான போட்டியில், எனக்கு டிரா உத்தரவாதமான நிலையில் மேலும் சில நிமிடங்கள் விளையாடிப் பார்க்கத் தீர்மானித்தேன். அப்போதுதான், திடீரென்று வெற்றி வாய்ப்பை உணர்ந்தேன். அதை கார்ல்சனும் அறிந்துவிட்டார் என்பது அவர் முகத்தைப் பார்த்தபோது தெரிந்தது. சமீப காலத்தில் ரேபிட் செஸ்சில் ஆதிக்கம் செலுத்தும் அவரை வீழ்த்தியபோது உண்மையான சாதனையாக உணர்ந்தேன்” என்று மகிழ்ச்சி நினைவில் நீந்துகிறார் ஆனந்த்.

ஆனந்தை ஓய்வு பெறச் செய்ய நினைத்த அனைவருக்கும் அவர் சரியான பதிலடி கொடுத்துவிட்டார் என்கிறார், முன்னாள் உலக சாம்பியன் கேரி காஸ்பரோவ். 

Next Story