இந்திய ஓபன் பேட்மிண்டன் டெல்லியில் இன்று தொடக்கம்


இந்திய ஓபன் பேட்மிண்டன் டெல்லியில் இன்று தொடக்கம்
x
தினத்தந்தி 30 Jan 2018 9:30 PM GMT (Updated: 30 Jan 2018 6:59 PM GMT)

இந்தியாவின் சாய்னா, சிந்து உள்பட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது.

புதுடெல்லி,

இந்தியாவின் சாய்னா, சிந்து உள்பட முன்னணி வீராங்கனைகள் பங்கேற்கும் இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று தொடங்குகிறது.

இந்திய பேட்மிண்டன்

மொத்தம் ரூ.2¼ கோடி பரிசுத்தொகைக்கான இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் இன்று தொடங்கி வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது. இதில் களம் காணும் உள்ளூர் நட்சத்திரங்கள் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோருக்கு பட்டம் வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது.

சில தினங்களுக்கு முன்பு இந்தோனேஷிய மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் இறுதி ஆட்டத்தில் தோல்வி கண்ட சாய்னா நேவால் தனது முதல் சுற்றில் சோபி ஹோம்போ டாலை (டென்மார்க்) இன்று எதிர்கொள்கிறார். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியவரான பி.வி.சிந்து முதல் சவாலை நடாலியா கோச் ரோட்டேவுடன் தொடங்குகிறார். இவர்களுக்கு சிம்மசொப்பனமாக திகழும் ஒலிம்பிக் சாம்பியனான கரோலினா மரின் (ஸ்பெயின்) முதல் ரவுண்டில் தகுதி நிலை வீராங்கனையான ஹெம்ராசாட்டனுனை (தாய்லாந்து) எதிர்கொள்கிறார்.

சிந்து, சாய்னா கருத்து

இதையொட்டி பி.வி.சிந்து நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் ‘ஒவ்வொரு சுற்றும் கடினமானது. அதற்கு ஏற்ப தயாராக வேண்டும். கடந்த முறை இங்கு நான் பட்டம் வென்றேன். 2015-ம் ஆண்டில் சாய்னா வெற்றி பெற்று இருந்தார். எனவே நாங்கள் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியாக வேண்டும்’ என்றார்.

பட்டம் வெல்லும் வாய்ப்பு உள்ள மங்கைகளில் ஒருவராக இருப்பது குறித்து சாய்னாவிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பிய போது, ‘கடந்த சில மாதங்களாக நான் பட்டம் வெல்லும் வாய்ப்பில் இல்லை. எனவே இந்த மாதிரியான தகவல்கள் எங்கிருந்து வருகிறது என்று தெரியவில்லை. எதுவாகினும், நான் நன்றாக செயல்படுவேன் என்று நம்புகிறேன்’ என்றார்.

‘நம்பர் ஒன்’ வீராங்கனை தாய் ஜூ யிங்குக்கு (சீனதைபே) எதிராக கடைசியாக விளையாடிய 10 ஆட்டங்களில் 9-ல் தோற்று இருப்பது குறித்து சாய்னாவிடம் கேட்ட போது, ‘கடந்த ஆண்டில் தாய் ஜூ யிங் நிறைய பட்டங்களை வென்றார். இந்தியர்கள் மட்டுமல்ல, மற்ற நாட்டவரும் அவரிடம் தோற்று இருக்கிறார்கள். தற்போது அவர் சிறந்த வீராங்கனை ஆவார். அதே சமயம் அவர் ஒன்றும் தோற்கடிக்க முடியாத வீராங்கனை அல்ல. அதற்குரிய நேரம் வரும் போது வீழ்த்துவேன்’ என்றார். இந்த தொடரில் கடைசி நேரத்தில் தாய் ஜூ யிங் விலகி விட்டது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீகாந்த்

ஆண்கள் பிரிவில் முன்னணி இந்திய வீரர் ஸ்ரீகாந்த் முதல் சுற்றில் லீ சேச்சியை (ஹாங்காங்) சந்திக்கிறார். காஷ்யப், அஜய் ஜெயராம், சவுரப் வர்மா, சமீர் வர்மா, சாய் பிரனீத், பிரனாய் உள்ளிட்ட இந்தியர்களும் இறங்குகிறார்கள். நேற்று தகுதி சுற்று ஆட்டங்கள் நடந்தன.

Next Story