இந்திய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து போராடி தோல்வி


இந்திய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து போராடி தோல்வி
x
தினத்தந்தி 4 Feb 2018 9:00 PM GMT (Updated: 4 Feb 2018 6:36 PM GMT)

இந்திய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து போராடி தோல்வி கண்டார்.

புதுடெல்லி,

இந்திய ஓபன் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து போராடி தோல்வி கண்டார்.

சிந்து அதிர்ச்சி தோல்வி

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்தது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனும், உலக தரவரிசையில் 4–வது இடத்தில் இருப்பவருமான பி.வி.சிந்து, 11–வது இடத்தில் உள்ள அமெரிக்க வீராங்கனை பீவென் ஜாங்குடன் மோதினார்.

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் பி.வி.சிந்து 18–21, 21–11, 20–22 என்ற செட் கணக்கில் பீவென் ஜாங்கிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். இந்த ஆட்டம் 69 நிமிடம் நீடித்தது. 2017 மற்றும் 2018–ம் ஆண்டில் பெரிய போட்டியில் இறுதி ஆட்டத்தில் சிந்து சந்தித்த 4–வது தோல்வி இதுவாகும். தோல்வி கண்ட சிந்து வழக்கமான நிருபர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.

சீன வீரர் சாம்பியன்

ஆண்கள் ஒற்றையர்  பிரிவு இறுதிப்போட்டியில் உலக தரவரிசையில் 8–வது இடத்தில் இருக்கும் சீன வீரர் ஷி யுகி 21–18, 21–14 என்ற நேர்செட்டில் 7–வது இடத்தில் உள்ள சீன தைபே வீரர் ஷோ டின் சென்னை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். இந்த ஆட்டம் 47 நிமிடம் அரங்கேறியது.

சிந்துவை வீழ்த்திய பீவென் ஜாங் கருத்து தெரிவிக்கையில், ‘நான் இழக்க எதுவுமில்லை. சிந்துவுக்கு தான் நெருக்கடி இருந்தது. நான் வழக்கத்துக்கு மாறாக தாக்குதல் ஆட்டத்தை அதிகம் தொடுத்தேன். இது எனது பெரிய பட்டமாகும். இந்த வெற்றி உண்மையிலேயே மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இதனை எனது பேட்மிண்டன் வாழக்கையில் சிறந்ததாக  கருதுகிறேன்’ என்றார்.

Next Story