ஏமாற்றத்துடன் ஓய்வு பெற்றார், இந்திய வீரர் ஷிவ கேசவன்


ஏமாற்றத்துடன் ஓய்வு பெற்றார், இந்திய வீரர் ஷிவ கேசவன்
x
தினத்தந்தி 11 Feb 2018 11:30 PM GMT (Updated: 11 Feb 2018 7:44 PM GMT)

குளிர்கால ஒலிம்பிக்: ஏமாற்றத்துடன் ஓய்வு பெற்றார், இந்திய வீரர் ஷிவ கேசவன் அமெரிக்கா, நெதர்லாந்து வீரர்கள் சாதனை

பியாங்சாங்,

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. ஆண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங் பந்தயத்தில் நெதர்லாந்து வீரர் ஸ்வென் கிராமர் தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். காலில் சக்கரத்தை கட்டிக்கொண்டு மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த கிராமர் 6 நிமிடம் 09.76 வினாடிகளில் இலக்கை கடந்தார். குளிர்கால ஒலிம்பிக்கில் அவர் வென்ற 3-வது தங்கம் இதுவாகும். ஒரே வேகத்திலான ஸ்கேட்டிங்கில் தொடர்ச்சியாக 3-வது தங்கப்பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்று சாதனையை படைத்தார்.

படுத்துக்கொண்டே பனிச்சறுக்கக்கூடிய லஜ் வகை போட்டியில் இந்திய வீரரும், ஆசிய சாம்பியனுமான ஷிவ கேசவனுக்கு நேற்றைய கடைசி தகுதி சுற்றிலும் ஏமாற்றமே மிஞ்சியது. ஒட்டுமொத்த அளவில் அவர் 34-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். தனது 16-வது வயதில் குளிர்கால ஒலிம்பிக்கில் கால்பதித்த ஷிவ கேசவனுக்கு இது 6-வது குளிர்கால ஒலிம்பிக்காகும். 2006-ம் ஆண்டில் 25-வது இடம் பிடித்ததே அவரது சிறந்த செயல்பாடாகும். இமாசலபிரதேசத்தை சேர்ந்த 36 வயதான ஷிவ கேசவன் இத்துடன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஆண்களுக்கான ஸ்னோபோர்டு ஸ்லோப்ஸ்டைல் போட்டியில் அமெரிக்க வீரர் ரெட் ஜெரார்டு தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். இந்த வகை பனிச்சறுக்கில் பல தடைகளை தாண்டி, அந்தரத்தில் பல்டி அடித்து இலக்கை வெற்றிகரமாக அடைந்த ரெட் ஜெரார்டுவின் வயது 17. இந்த நூற்றாண்டில் பிறந்து குளிர்கால ஒலிம்பிக்கில் மகுடம் சூடிய முதல் நபர் இவர் தான். மேலும், 1928-ம் ஆண்டுக்கு பிறகு குறைந்த வயதில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற அமெரிக்க வீரர் என்ற பெருமையும் ஜெரார்டுவுக்கு கிடைத்துள்ளது.

Next Story