குளிர்கால ஒலிம்பிக்: ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் ஜப்பான் வீராங்கனை சாதனை


குளிர்கால ஒலிம்பிக்: ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் ஜப்பான் வீராங்கனை சாதனை
x
தினத்தந்தி 18 Feb 2018 9:00 PM GMT (Updated: 18 Feb 2018 6:53 PM GMT)

23–வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது.

பியாங்சாங்,

23–வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று ஆண்களுக்கான அல்பைன் பனிச்சறுக்கின் ஜெயன்ட் ஸ்லாலோம் பிரிவில் ஆஸ்திரியா வீரர் மார்செல் ஹிர்ஸ்செர் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். பனிமலையின் உச்சியில் இருந்து மின்னல் வேகத்தில் சீறிப்பாய்ந்த அவர் 2 நிமிடம் 18.04 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடத்தை பிடித்தார். அவருக்கு இது 2–வது தங்கப்பதக்கமாகும். நார்வேயின் ஹென்ரிக் கிறிஸ்டோபெர்சென் வெள்ளிப்பதக்கம் (2 நிமிடம் 19.31 வினாடி) பெற்றார்.

‘கிராஸ்கன்ட்ரி’ பனிச்சறுக்கில் 4x10 கிலோ மீட்டர் தொடர் ஓட்டத்தில் நார்வே அணி ஒரு மணி 33 நிமிடம் 04.9 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கமும், அவர்களை விட 9.4 வினாடி பின்தங்கிய ரஷிய வீரர்களை உள்ளடக்கிய ஒலிம்பிக் குழு வெள்ளிப்பதக்கமும், பிரான்ஸ் வெண்கலப்பதக்கமும் கைப்பற்றியது. பையத்லானில் 15 கிலோ மீட்டர் பயணிக்கக்கூடிய ‘மாஸ்’ பிரிவில் பிரான்ஸ் வீரர் மார்ட்டின் போர்கேட் 35 நிமிடம் 47.3 வினாடிகளில் தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தார்.

இதே போல் பெண்களுக்கான 500 மீட்டர் ஸ்பீடு ஸ்கேட்டிங்கில் ஜப்பான் வீராங்கனையும், உலக சாம்பியனுமான நாவ் கொடைரா 36.94 வினாடிகளில் இலக்கை நிறைவு செய்து புதிய ஒலிம்பிக் சாதனையுடன் தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். ஒலிம்பிக்கில் இந்த பிரிவில் மகுடம் சூடிய முதல் ஜப்பான் நாட்டவர் என்ற பெருமையை கொடைரா பெற்றார். நடப்பு சாம்பியனான தென்கொரியாவின் லீ சாங்–ஹா வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதானது.

இதற்கிடையே, கலப்பு இரட்டையர் கர்லிங் பிரிவில் தனது மனைவியுடன் இணைந்து வெண்கலப்பதக்கம் வென்ற ரஷிய வீரர் அலெக்சாண்டர் ருஷெல்னிட்ஸ்கி ‘மெல்டோனியம்’ என்ற ஊக்கமருந்தை பயன்படுத்தியதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ஏற்கனவே ஊக்கமருந்து பிரச்சினையால் அல்லோல்படும் ரஷியாவுக்கு இது மேலும் ஒரு பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது.

10–வது நாளான நேற்றைய முடிவில் நார்வே அணி 9 தங்கம், 9 வெள்ளி, 8 வெண்கலம் என்று மொத்தம் 26 பதக்கங்களுடன், பதக்கப்பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. ஜெர்மனி 2–வது இடத்திலும் (9 தங்கம் உள்பட 18 பதக்கம்), நெதர்லாந்து 3–வது இடத்திலும் (6 தங்கம் உள்பட 13 பதக்கம்) உள்ளன.


Next Story