ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னை-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் டிரா


ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி: சென்னை-ஜாம்ஷெட்பூர் ஆட்டம் டிரா
x
தினத்தந்தி 18 Feb 2018 9:30 PM GMT (Updated: 18 Feb 2018 7:13 PM GMT)

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை-ஜாம்ஷெட்பூர் அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

சென்னை,

ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் சென்னை-ஜாம்ஷெட்பூர் அணிகள் இடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.

ஐ.எஸ்.எல். கால்பந்து

10 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து திருவிழாவில் லீக் சுற்று இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 76-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி.- ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதின.

உள்ளூர் ரசிகர்களின் உற்சாகமான ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் ஆடிய சென்னை வீரர்கள் வசமே (61 சதவீதம்) பந்து அதிக நேரம் சுற்றிக்கொண்டிருந்தது. ஆனால் தடுப்பாட்டத்தில் கில்லாடியான ஜாம்ஷெட்பூர் வீரர்கள், கோல் வாங்கிவிடக்கூடாது என்பதில் கூடுதல் கவனமுடன் செயல்பட்டனர். இதனால் சென்னை அணியின் பல முயற்சிகள் தடுக்கப்பட்டன. 32-வது நிமிடத்தில் ஜாம்ஷெட்பூர் வீரர் வெலிங்டன் பிரியோரி அதிரடியாக கோல் அடித்து, குழுமியிருந்த 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்தார். இது இந்த சீசனில் அடிக்கப்பட்ட 200-வது கோல் ஆகும்.

டிரா ஆனது

பதிலடி கொடுக்க சென்னை வீரர்கள் தீவிரம் காட்டினர். அகஸ்டோ, செரனோ, மைல்சன் அடித்த ஷாட்டுகள் மயிரிழையில் கம்பத்தை விட்டு விலகி சென்றன. 88-வது நிமிடம் வரை சென்னை அணியினரால் ஒரு பந்தை கூட துல்லியமாக இலக்கை நோக்கி அடிக்க முடியாத அளவுக்கு ஜாம்ஷெட்பூர் அணியின் தடுப்பு அரண் வலுவாக இருந்தது.

89-வது நிமிடத்தில் சென்னை அணிக்கு கோல் அடிக்கும் சந்தர்ப்பம் கனிந்தது. கார்னரில் இருந்து சென்னை அணியின் மிஹெலிக் உதைத்த ஷாட்டை, சக வீரர் முகமது ரபி தலையால் முட்டி கோலாக்கினார். முடிவில் இந்த ஆட்டம் 1-1 என்ற கணக்கில் கோல் டிராவில் முடிந்தது.

புள்ளி விவரம்

அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டுள்ள சென்னை அணி 16 ஆட்டங்களில் விளையாடி 8 வெற்றி, 4 டிரா, 4 தோல்வி என்று 28 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. ஜாம்ஷெட்பூர் அணி 7 வெற்றி, 5 டிரா, 4 தோல்வியுடன் 26 புள்ளிகளை பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.

21-ந்தேதி நடக்கும் அடுத்த ஆட்டத்தில் கோவா-டெல்லி அணிகள் மோதுகின்றன.

Next Story