தேசிய சீனியர் கைப்பந்து தமிழக அணிகள் கால்இறுதிக்கு முன்னேற்றம்


தேசிய சீனியர் கைப்பந்து தமிழக அணிகள் கால்இறுதிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 23 Feb 2018 10:30 PM GMT (Updated: 23 Feb 2018 9:22 PM GMT)

தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணி கால்இறுதிக்கு முன்னேறியது.

கோழிக்கோடு,

தேசிய சீனியர் கைப்பந்து போட்டியில் தமிழக ஆண்கள் மற்றும் பெண்கள் அணி கால்இறுதிக்கு முன்னேறியது.

66-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி கோழிக்கோட்டில் நடந்து வருகிறது. இதில் 3-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான ‘ஏ’ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் தமிழக அணி, மேற்கு வங்காளத்தை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தமிழக அணி 25-21, 25-23, 25-10 என்ற நேர்செட்டில் மேற்கு வங்காளத்தை வீழ்த்தியது. தமிழக அணியில் ராஜஸ்ரீ, உத்கர்ஷா, ஆர்யா, சரண்யா ஆகியோரின் ஆட்டம் அபாரமாக இருந்தது.

மற்றொரு லீக் ஆட்டத்தில் இந்தியன் ரெயில்வே அணி 25-13, 25-11, 25-17 என்ற நேர்செட்டில் ஆந்திராவை சாய்த்தது. ‘ஏ’ பிரிவில் லீக் முடிவில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்தியன் ரெயில்வே அணி முதலிடம் பிடித்தும், தமிழக அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 2-வது இடம் பெற்றும், மேற்கு வங்காள அணி ஒரு வெற்றி, 2 தோல்வியுடன் 3-வது இடம் பெற்றும் கால்இறுதிக்கு முன்னேறின.

ஆண்களுக்கான ‘ஏ’ பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் ஆந்திரா 25-20, 25-21, 25-19 என்ற நேர்செட்டில் ராஜஸ்தானை தோற்கடித்தது. இதேபிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் கேரளா அணி 25-20, 25-20, 27-25 என்ற நேர்செட்டில் பஞ்சாப் அணியை பதம் பார்த்தது.

‘ஏ’ பிரிவில் 3 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற கேரளா அணி முதலிடம் பிடித்தும், 2 வெற்றி, ஒரு தோல்வி கண்ட பஞ்சாப் அணி 2-வது இடம் பெற்றும், ஒரு வெற்றி, 2 தோல்வி கண்ட ஆந்திரா அணி 3-வது இடம் பெற்றும் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. ராஜஸ்தான் அணி 3 ஆட்டத்திலும் தோல்வி கண்டு நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை பறிகொடுத்தது.

முந்தைய நாளில் ‘பி’ நடந்த ஆட்டம் ஒன்றில் தமிழக ஆண்கள் அணி 25-17, 25-19, 25-21 என்ற நேர்செட்டில் இமாச்சலபிரதேசத்தை தோற்கடித்தது. தொடர்ச்சியாக 2-வது வெற்றியை சுவைத்த தமிழக அணி கால் இறுதிக்குள் நுழைந்தது.

Next Story