பிற விளையாட்டு

குளிர்கால ஒலிம்பிக் 2-வது தங்கம் வென்று வரலாறு படைத்தார் லெடெக்கா + "||" + Lateka created history by winning the Olympic Games 2 gold medal

குளிர்கால ஒலிம்பிக் 2-வது தங்கம் வென்று வரலாறு படைத்தார் லெடெக்கா

குளிர்கால ஒலிம்பிக் 2-வது தங்கம் வென்று வரலாறு படைத்தார் லெடெக்கா
போட்டியில் செக்குடியரசு வீராங் கனை எஸ்டர் லெடெக்கா புதிய வரலாறு படைத்தார்.
பியாங்சாங்,

குளிர்கால ஒலிம்பிக்கில் இரு வெவ்வேறான விளையாட்டு பிரிவுகளில் தங்கப்பதக்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற புதிய வரலாற்று சாதனையை செக்குடியரசின் லெடெக்கா படைத்தார்.

23-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி தென்கொரியாவின் பியாங்சாங் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டிவிட்ட இந்த போட்டியில் நேற்று செக்குடியரசு வீராங் கனை எஸ்டர் லெடெக்கா புதிய வரலாறு படைத்தார். வளைந்து நெளிந்து செல்லும் பாதையில் தடுமாறாமல் பனியில் சறுக்கக்கூடிய ‘ஸ்னோபோர்டு பாரலெல் ஜெயன்ட் ஸ்லாலோம்’ பந்தயத்தில் லெடெக்காவுக்கும், ஜெர்மனியின் செலினா ஜோர்க்குக்கு இடையே நேரடி போட்டி நிலவியது. இறுதியில் லெடெக்கா, செலினாவை விட 0.46 வினாடிக்கு முன்பாக இலக்கை அடைந்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். செலினா ஜோர்க் வெள்ளிப்பதக்கம் பெற்றார்.


22 வயதான லெடெக்கா ஏற்கனவே ‘அல்பைன் ஸ்கீயிங்’ பிரிவில் தங்கம் வென்று இருந்தார். இதன் மூலம் குளிர்கால ஒலிம்பிக் வரலாற்றில் இரு வெவ்வேறான போட்டிகளில் தங்கப்பதக்கத்தை ருசித்த முதல் வீராங்கனை என்ற அரிய பெருமைக்கு லெடெக்கா சொந்தக்காரர் ஆனார். அதே சமயம் இத்தகைய சாதனையை வீரர்கள் தரப்பில் ஏற்கனவே 4 பேர் செய்திருக்கிறார்கள். இதன் ஆண்கள் பிரிவில் சுவிட்சர்லாந்தின் நெவின் கால்மரினிக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது.

பனிஉச்சியில் இருந்து சீறிப்பாயக்கூடிய ‘அல்பைன் ஸ்கீயிங்’ அணிகள் பிரிவில் சுவிட்சர்லாந்து குழுவினர் 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினர். 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் கிரிஸ்டின் லிஸ்டால், செபாஸ்டியன், நினா ஹவெர், லெப் கிரிஸ்டியன் ஆகியோர் அடங்கிய நார்வே அணி ‘டைபிரேக்கர்’ அடிப்படையில் பிரான்சை பின்னுக்கு தள்ளிவிட்டு வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

இந்த ஒலிம்பிக்கில் நார்வேயின் 38-வது பதக்கம் (13 தங்கம், 14 வெள்ளி, 11 வெண்கலம்) இதுவாகும். இதன் மூலம் ஒரு குளிர்கால ஒலிம்பிக்கில் அதிக பதக்கங்கள் குவித்த அணி என்ற சாதனையை நிகழ்த்தியது. 2010-ம் ஆண்டு வான்கோவர் குளிர்கால ஒலிம்பிக்கில் அமெரிக்கா 37 பதக்கம் வென்றதே முந்தைய அதிகபட்ச எண்ணிக்கையாக இருந்தது.

இந்த ஒலிம்பிக் திருவிழா இன்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் நிறைவு பெறுகிறது. நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பின் மகள் இவான்கா டிரம்ப் கலந்து கொள்கிறார். ஆண்களுக்கான ஐஸ் ஆக்கி உள்பட 4 தங்கப் பதக்கத்துக்கான போட்டிகளும் கடைசி நாளில் நடக்க இருக்கிறது.