ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய தடகள வீரர் டேவிந்தர் சிங் இடைநீக்கம்


ஊக்க மருந்து சோதனையில் சிக்கிய இந்திய தடகள வீரர் டேவிந்தர் சிங் இடைநீக்கம்
x
தினத்தந்தி 28 Feb 2018 9:30 PM GMT (Updated: 28 Feb 2018 9:17 PM GMT)

இந்திய தடகள சம்மேளனத்தால் புதிதாக அமைக்கப்பட்ட தடகள நேர்மை அமைப்பு சார்பில் போட்டி இல்லாத நேரத்தில் இந்திய தடகள வீரர் டேவிந்தர் சிங் காங்கிடம் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது.

புதுடெல்லி,

இந்திய தடகள சம்மேளனத்தால் புதிதாக அமைக்கப்பட்ட தடகள நேர்மை அமைப்பு சார்பில் போட்டி இல்லாத நேரத்தில் இந்திய தடகள வீரர் டேவிந்தர் சிங் காங்கிடம் ஊக்க மருந்து சோதனை நடத்தப்பட்டது.

பாட்டியாலாவில் கடந்த வாரம் நடந்த இந்த சோதனையில் உலக தடகள சம்மேளனத்தால் தடை செய்யப்பட்ட ஊக்க மருந்தை டேவிந்தர் சிங் காங் பயன்படுத்தியது தெரியவந்தது.

இதனை அடுத்து டேவிந்தர் சிங் காங்கை இடைநீக்கம் செய்து சர்வதேச தடகள சம்மேளனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அத்துடன் இந்த விஷயம் குறித்து இந்திய தடகள சம்மேளனத்துக்கு முறைப்படி தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பாட்டியாலாவில் நடைபெறும் இந்தியன் கிராண்ட்பிரி தடகள போட்டியில் இருந்து டேவிந்தர் சிங் காங் உடனடியாக நீக்கம் செய்யப்பட்டார்.

பஞ்சாப்பை சேர்ந்த 29 வயதான டேவிந்தர் சிங் காங் கடந்த ஆண்டு லண்டனில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார். இதன் மூலம் உலக தடகள போட்டியில் ஈட்டி எறிதலில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்று இருந்தார்.

இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் காமன்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட டேவிந்தர் சிங் காங் ஊக்க மருந்து சோதனையில் மாட்டி இருப்பது இந்திய தடகள அணிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

டேவிந்தர் சிங் காங் மீது கடந்த ஆண்டும் ஊக்க மருந்து சர்ச்சை கிளம்பியது. 2-வது முறையாக ஊக்க மருந்து பிரச்சினையில் சிக்கி இருக்கும் டேவிந்தர் சிங் காங்குக்கு சர்வதேச தடகள சம்மேளனம் 4 ஆண்டு காலம் வரை தடை விதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story