ஆசிய மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் தங்கம் வென்று சரித்திரம் படைத்தார்


ஆசிய மல்யுத்த போட்டியில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர் தங்கம் வென்று சரித்திரம் படைத்தார்
x
தினத்தந்தி 3 March 2018 9:00 PM GMT (Updated: 3 March 2018 8:23 PM GMT)

ஆசிய சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கிர்கிஸ்தான் நாட்டில் நடந்து வருகிறது.

பிஷ்கெக்,

ஆசிய சீனியர் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி கிர்கிஸ்தான் நாட்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான பிரீஸ்டைல் 65 கிலோ உடல் எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை நவ்ஜோத் கவுர், ஜப்பான் வீராங்கனை மியா இமாய்யை சந்தித்தார். இதில் தொடக்கம் முதலே நவ்ஜோத் கவுரின் கையே ஓங்கி இருந்தது. தன்னை கிடுக்கி பிடி போட்டு சாய்க்க முயற்சித்த மியா இமாய்யின் தலையை நவ்ஜோத் கவுர் மூன்று, நான்கு முறை பிடித்து நிமிர முடியாத அளவுக்கு தரையோடு அமுக்கி புள்ளிகளை குவித்தார். முடிவில் நவ்ஜோத் கவுர் 9–1 என்ற புள்ளி கணக்கில் மியா இமாய்யை எளிதில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம் பஞ்சாப்பை சேர்ந்த 28 வயதான நவ்ஜோத் கவுர், ஆசிய சீனியர் மல்யுத்த போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சரித்திர சாதனையை படைத்தார். 62 கிலோ எடைப்பிரிவில் ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை சாக்ஷி மாலிக் 10–7 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தான் வீராங்கனை அயாலின் காஸ்யோமாவாவை வீழ்த்தி வெண்கலப்பதக்கம் பெற்றார். இந்த போட்டியில் இந்திய அணி இதுவரை ஒரு தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்கலப்பதக்கம் வென்று இருக்கிறது.

புதிய வரலாறு படைத்த நவ்ஜோத் கவுர் அளித்த பேட்டியில், ‘இந்த நாளுக்காக தான் நீண்ட நாட்கள் காத்து இருந்தேன். மல்யுத்த போட்டியில் கால் பதித்தது முதல் எனது வாழ்க்கையில் மிகச்சிறந்த நாள் இது தான். எந்தவித நெருக்கடியும் இன்றி இயல்பாக செயல்பட வேண்டும் என்று முடிவுடன் களம் கண்டு அதனை சாதித்து இருக்கிறேன். ஆசிய போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய மங்கை என்பதை நினைத்து பெருமிதம் அடைகிறேன்’ என்று தெரிவித்தார்.


Next Story