பிற விளையாட்டு

அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் நாளை மறுநாள் தொடக்கம் + "||" + All India Volleyball tournament starts tomorrow morning in Chennai

அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் நாளை மறுநாள் தொடக்கம்

அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் நாளை மறுநாள் தொடக்கம்
ரூ.5 லட்சம் பரிசுத் தொகைக்கான அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னையில் நாளை மறுநாள் தொடங்குகிறது.
சென்னை,

நெல்லை நண்பர்கள் சங்கம் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 45-வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை மறுநாள் (27-ந் தேதி) முதல் ஏப்ரல் 1-ந் தேதி வரை நடக்கிறது.

‘தினத்தந்தி’ ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் எஸ்.ஆர்.எம்., கேரளா போலீஸ், கர்நாடகம், தென் மத்திய ரெயில்வே, வருமான வரி, ஐ.சி.எப்., சுங்க இலாகா, தமிழ்நாடு போலீஸ், பனிமலர், செயின்ட் ஜோசப்ஸ், எஸ்.டி.ஏ.டி. ஆகிய 11 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் ஆட்டம் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும்.

பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியன் கேரளா போலீஸ், தெற்கு ரெயில்வே, தென் மத்திய ரெயில்வே, தமிழ்நாடு யூத் ஆகிய 4 அணிகள் பங்கேற்று ‘ரவுண்ட் ராபின் லீக்’ முறையில் பலப்பரீட்சை நடத்துகின்றன.

இந்த போட்டியில் மொத்தம் ரூ.5 லட்சம் ரொக்கப்பரிசு வழங்கப்படுகிறது. ஆண்கள் பிரிவில் ‘சாம்பியன்’ பட்டம் வெல்லும் அணிக்கு டாக்டர் சிவந்தி தங்க கோப்பையுடன் ரூ.1 லட்சமும், பெண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணிக்கு எஸ்.என்.ஜெ.கோப்பையுடன் ரூ.75 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்படும். இதுதவிர சிறந்த 5 வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் சிறப்பு பரிசாக அளிக்கப்படும்.

போட்டிகள் தினசரி மாலை 5.30 மணிக்கு தொடங்கி மின்னொளியில் அரங்கேறும். நாளை மறுநாள் நடைபெறும் தொடக்க விழாவுக்கு சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை தலைமை தாங்குகிறார். வருமானவரி கமிஷனர் கே.ரவி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைக்கிறார். தமிழ்நாடு கைப்பந்து சங்க தலைவர் எஸ்.வாசுதேவன், சென்னை ஒய்.எம்.சி.ஏ. தலைவர் வின்சென்ட் ஜார்ஜ், ஓம்சக்தி ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனர் ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

ஆண்கள் பிரிவில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் அணிக்கு வழங்கப்படும் டாக்டர் சிவந்தி தங்க கோப்பையின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. இதில் வருமான வரி இணை கமிஷனர் எஸ்.பாண்டியன் கலந்து கொண்டு கோப்பையை அறிமுகப்படுத்த, அதனை எஸ்.என்.ஜெ.குழும நிர்வாக இயக்குனர் எஸ்.என்.ஜெயமுருகன் பெற்றுக்கொண்டார். தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.கே.சித்திரைபாண்டியன், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன்துரை, ரோமா குரூப்ஸ் நிர்வாக இயக்குனர் ராஜன், போட்டி அமைப்பு குழு துணைசேர்மன் பி.பாலச்சந்திரன் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...

அதிகம் வாசிக்கப்பட்டவை