700 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில இளையோர் தடகள போட்டி சென்னையில் நாளை தொடக்கம்


700 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில இளையோர் தடகள போட்டி சென்னையில் நாளை தொடக்கம்
x
தினத்தந்தி 30 March 2018 8:45 PM GMT (Updated: 30 March 2018 8:18 PM GMT)

700 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில இளையோர் தடகள போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.

சென்னை,

700 வீரர்-வீராங்கனைகள் பங்கேற்கும் மாநில இளையோர் தடகள போட்டி சென்னையில் நாளை தொடங்குகிறது.

மாநில இளையோர் தடகளம்

தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில், செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங் கல்லூரி ஆதரவுடன் முதல்முறையாக மாநில இளையோர் (யூத்) தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடத்தப்படுகிறது. 18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான இந்த போட்டி சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) நடக்கிறது.

18 மற்றும் 20 வயதுக்கு உட்பட்ட வீரர்-வீராங்கனைகளின் போட்டி திறனை மேம்படுத்தும் நோக்கில் நடத்தப்படும் இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 700 வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

தமிழக அணி தேர்வு


18 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல் ஹெப்டத்லான் உள்பட 21 பந்தயங்களும், 20 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில் 100 மீட்டர், 200 மீட்டர் ஓட்டம், உயரம் தாண்டுதல், போல்வால்ட், 100, 400 மீட்டர் தொடர் ஓட்டம் உள்பட 23 பந்தயங்களும் நடைபெறுகிறது. இந்த போட்டியில் பிரியதர்ஷினி, சுபா, ஹேமமாலினி, நிதின், பிரவீன், ஸ்ரீகிரண், நிஷாந்த் ராஜா, பாபிஷா, கிரிதர் ராணி உள்பட முன்னணி வீரர்-வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.

இந்த போட்டியின் அடிப்படையில் கோவையில் ஏப்ரல் 20-ந் தேதி முதல் 22-ந் தேதி வரை நடைபெறும் 16-வது பெடரேஷன் கோப்பை தேசிய ஜூனியர் தடகள போட்டி மற்றும் குஜராத் மாநிலம் வதோதராவில் ஜூலை 21-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை நடைபெறும் 15-வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிக்கான தமிழக தடகள அணி தேர்வு செய்யப்படும். அத்துடன் மேற்கண்ட தேசிய ஜூனியர் போட்டிகளில் சிறப்பான திறனை வெளிப்படுத்துபவர்கள் ஜப்பானில் நடைபெறும் ஆசிய ஜூனியர் தடகள போட்டிக்கான இந்திய அணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த தகவலை தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், செயலாளர் சி.லதா ஆகியோர் சென்னையில் நேற்று நிருபர்களிடம் தெரிவித்தனர்.

Next Story