கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் போட்டி கோலாகலமாக தொடங்கியது


கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் போட்டி கோலாகலமாக தொடங்கியது
x
தினத்தந்தி 4 April 2018 11:30 PM GMT (Updated: 4 April 2018 7:25 PM GMT)

கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் நேற்று தொடங்கியது.

கோல்ட்கோஸ்ட்,

உலகின் 3-வது மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கடற்கரை நகரான கோல்ட்கோஸ்டில் நேற்று தொடங்கியது. இங்கிலாந்தின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளை ஒருங்கிணைத்து நடத்தப்படும் இந்த போட்டியில் 71 நாடுகளை சேர்ந்த 4,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 218 வீரர், வீராங்கனைகள் அனுப்பப்பட்டுள்ளனர்.

தொடக்க விழா அங்குள்ள காரரா ஸ்டேடியத்தில் கோலாகலமாக நடைபெற்றது. ரசிகர்களை பிரமிக்க வைக்கும் வகையில் லேசர் ஒளிவெள்ளத்துக்கு மத்தியில் வித்தியாசமான நடனங்கள் அரங்கேறின. ஆஸ்திரேலியாவின் பாரம்பரியத்தையும், முன்னோர்களின் வாழ்க்கை முறையையும் பிரதிபலிக்கும் வகையில் நிகழ்ச்சிகள் அமைந்தன.

போட்டியின் சிறப்பு அம்சமாக 71 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் தங்கள் நாட்டு தேசிய கொடியுடன் மிடுக்குடன் அணிவகுத்து வந்தனர். ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற பேட்மிண்டன் மங்கை பி.வி.சிந்து இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியுடன் கம்பீரமாக அணிவகுத்து வந்தார். நமது வீரர், வீராங்கனைகள் பேண்ட் மற்றும் கோட் அணிந்திருந்தனர்.

அதன் பிறகு ‘குயின் பேட்டன்’ தொடர் ஓட்டமாக ஸ்டேடியத்திற்குள் எடுத்து வரப்பட்டது. தடை ஓட்ட உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவின் சாலி பியர்சன் அதை இங்கிலாந்து இளவரசர் சார்லசிடம் வழங்கினார். அதைத் தொடர்ந்து போட்டி தொடங்குவதாக இளவரசர் சார்லஸ் முறைப்படி அறிவித்தார். 2 மணி நேரம் நடந்த விழாவின் இறுதியில் வண்ணமயமான வாணவேடிக்கையும் இடம் பெற்றது. விழா நிகழ்ச்சி, மழையால் சிறிது நேரம் பாதிப்புக்குள்ளானது.

இதற்கிடையே, ஆஸ்திரேலியாவின் பழங்குடியின மக்கள் இந்த போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்டேடியத்தின் வெளிப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நமது இடத்தை ஆக்கிரமித்து நம்மை அடிமைப்படுத்தியதற்காக இப்படியொரு கொண்டாட்டமா? என்று கோஷங்கள் எழுப்பினர்.

நேற்றைய நாளில் தொடக்க விழா மட்டுமே நடைபெற்றது. போட்டிகள் இன்று இந்திய நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். பளுதூக்குதலில் உலக சாம்பியனான இந்தியாவின் மீராபாய் சானு (48 கிலோ எடைப்பிரிவு) இன்று களம் இறங்குகிறார். அவர் இந்தியாவின் பதக்க வேட்டையை ஆரம்பித்து வைப்பாார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய அணிக்கு பிரதமர் மோடி உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Next Story