பிற விளையாட்டு

பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும் தங்கம் வென்றது + "||" + Badminton competition The Indian men team Gold won

பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும் தங்கம் வென்றது

பேட்மிண்டன் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும் தங்கம் வென்றது
காமன்வெல்த் விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆண்கள் அணியும் தங்கப்பதக்கம் வென்று அசத்தியது. பேட்மிண்டன் போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது.
கோல்டுகோஸ்ட்,

காமன்வெல்த் விளையாட்டு டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் அணிகள் பிரிவில் நேற்று மாலை நடந்த இறுதிப்போட்டியில் இந்திய அணி, நைஜீரியாவை எதிர்கொண்டது.

இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கணக்கில் நைஜீரியாவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. இந்திய வீரர்கள் சரத்கமல், சத்யன் ஆகியோர் தங்களது ஒற்றையர் ஆட்டங்களில் வெற்றி பெற்றனர். இரட்டையர் பிரிவில் ஹர்மீத் தேசாய்-சத்யன் இணை வெற்றி கண்டது. முன்னதாக நேற்று நடந்த அரைஇறுதிப்போட்டியில் இந்திய அணி 3-2 என்ற கணக்கில் சிங்கப்பூரை சாய்த்து இருந்தது.

காமன்வெல்த் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தங்கப்பதக்கம் வெல்வது இது 2-வது முறையாகும். 2006-ம் ஆண்டில் இந்திய ஆண்கள் அணி, சிங்கப்பூரை சாய்த்து தங்கப்பதக்கத்தை கைப்பற்றி இருந்தது.

நேற்று முன்தினம் நடந்த பெண்கள் அணிகள் பிரிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் சிங்கப்பூரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை உச்சி முகர்ந்து இருந்தது நினைவிருக்கலாம். காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிசில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணி ஒருசேர தங்கப்பதக்கத்தை தனதாக்கி இருப்பது இது முதல்முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பேட்மிண்டன் போட்டியில் இந்தியா தங்கப்பதக்கம் வென்றது. இதன் கலப்பு அணிகள் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய அணி, 3 முறை சாம்பியனான மலேசியாவுடன் மோதியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் மலேசியாவை தோற்கடித்து முதல்முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. இந்திய அணியில் சாத்விக் ரங்கி ரெட்டி-அஸ்வினி பொன்னப்பா ஜோடி கலப்பு இரட்டையர் பிரிவிலும், ஸ்ரீகாந்த், சாய்னா நேவால் ஆகியோர் ஒற்றையர் பிரிவிலும் வெற்றி கண்டனர். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ரங்கி ரெட்டி, சிராக் சந்திரசேகர் ஷெட்டி ஜோடி தோல்வி கண்டது. தோல்வி கண்ட மலேசியா அணி வெள்ளிப்பதக்கம் வென்றது. 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் இங்கிலக்கில் சிங்கப்பூரை சாய்த்து வெண்கலப்பதக்கத்தை பெற்றது.

தடகள போட்டியில் நேற்று நடந்த பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 52.11 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து தனது பிரிவில் 3-வது இடம் பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். குத்துச்சண்டை போட்டியில் ஆண்கள் பிரிவில் கவுரவ் சோலங்கி (52 கிலோ பிரிவு), மனிஷ் கவுசிக் (60 கிலோ பிரிவு) ஆகியோர் தங்களது கால்இறுதிக்கு முந்தைய சுற்றில் வெற்றி பெற்று கால்இறுதிக்குள் நுழைந்தனர்.

ஆக்கி போட்டியில் ஆண்கள் பிரிவில் இந்திய அணி இன்று நடைபெறும் தனது 2-வது லீக் ஆட்டத்தில் மலேசியாவை (அதிகாலை 5 மணி) சந்திக்கிறது. பெண்கள் பிரிவில் இந்திய அணி தனது 3-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை (பிற்பகல் 3 மணி) எதிர்கொள்கிறது.