பிற விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டு போட்டி:15 வயது இந்திய வீரர் அனிஷ் தங்கம் வென்று சரித்திரம் படைத்தார் + "||" + 15 year old Indian player Anish won gold Made History

காமன்வெல்த் விளையாட்டு போட்டி:15 வயது இந்திய வீரர் அனிஷ் தங்கம் வென்று சரித்திரம் படைத்தார்

காமன்வெல்த் விளையாட்டு போட்டி:15 வயது இந்திய வீரர் அனிஷ் தங்கம் வென்று சரித்திரம் படைத்தார்
காமன்வெல்த் விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் 15 வயதான இந்திய வீரர் அனிஷ் பான்வாலா தங்கப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார்.
கோல்டுகோஸ்ட், 

காமன்வெல்த் விளையாட்டு துப்பாக்கி சுடுதலில் 15 வயதான இந்திய வீரர் அனிஷ் பான்வாலா தங்கப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார். தேஜஸ்வினி, பஜ்ரங் புனியா ஆகிய இந்தியர்களும் தங்கம் வென்று அசத்தினார்கள்.

தேஜஸ்வினி தங்கம் வென்றார்

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்த விளையாட்டு திருவிழாவில் 9-வது நாளான நேற்றும் இந்திய அணியினரின் பதக்க அறுவடை தொடர்ந்தது.

துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (மூன்று நிலை) போட்டியில் இந்திய வீராங்கனை தேஜஸ்வினி சவாந்த் 457.9 புள்ளிகள் குவித்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். 2014-ம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் சிங்கப்பூர் வீராங்கனை ஜாஸ்மின் 449.1 புள்ளிகள் குவித்ததே சாதனையாக இருந்தது. மற்றொரு இந்திய வீராங்கனை அஞ்சும் மோட்ஜில் 455.7 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

மராட்டியத்தை சேர்ந்த 37 வயதான தேஜஸ்வினி சவாந்த் 50 மீட்டர் ரைபிள் (புரோன்) பிரிவில் நேற்று முன்தினம் வெள்ளி வென்று இருந்தார். முன்னாள் உலக சாம்பியனான தேஜஸ்வினி சவாந்த் ஒட்டுமொத்தத்தில் காமன்வெல்த் போட்டியில் கைப்பற்றிய 7-வது பதக்கம் இதுவாகும். அரியானாவை சேர்ந்த 24 வயதான அஞ்சும் மோட்ஜிலுக்கு இதுவே முதல் பதக்கமாகும்.

வரலாறு படைத்த ‘இளம் புயல்’

துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் பிரிவில் 15 வயதான இந்திய வீரர் அனிஷ் பான்வாலா இறுதிப்போட்டியில் 30 புள்ளிகள் குவித்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்று சரித்திரம் படைத்தார். காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இளம் இந்தியர் என்ற பெருமையை சில தினங்களுக்கு முன்பு பெற்று இருந்த அரியானா துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மானு பாகெரின் (16 வயது) சாதனையும் அனிஷ் பான்வாலா தகர்த்து முத்திரை பதித்தார். இளம் புயலான அனிஷ் பதற்ற மின்றி செயல்பட்டு அனுபவம் வாய்ந்த வீரர்களை பின்னுக்கு தள்ளி அசத்தினார்.

இந்த போட்டியில் 28 புள்ளிகள் பெற்ற ஆஸ்திரேலிய வீரர் செர்ஜி எவ்லெவ்ஸ்கி வெள்ளிப்பதக்கமும், 17 புள்ளிகள் பெற்ற இங்கிலாந்து வீரர் சாம் கோவின் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

10-ம் வகுப்பு மாணவர்

சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு படிக்கும் அனிஷ் பான்வால் காமன்வெல்த் போட்டிக்காக பரீட்சையை துறந்து போட்டியில் பங்கேற்று சாதித்து காட்டி இருக்கிறார். அவருக்கு மாற்று தேதியில் தேர்வு எழுத சி.பி.எஸ்.இ.அனுமதி அளித்து இருக்கிறது.

அரியானாவை சேர்ந்த இவர் சமீபத்தில் சிட்னியில் நடந்த ஜூனியர் உலக கோப்பை போட்டியிலும் இதே பிரிவு போட்டியில் தங்கப்பதக்கம் வென்றது நினைவிருக்கலாம்.

பஜ்ரங் புனியாவுக்கு தங்கம்

மல்யுத்த போட்டியில் ஆண்களுக்கான பிரீஸ்டைல் 65 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா 10-0 என்ற புள்ளி கணக்கில் வேல்ஸ் வீரர் கேன் சாரிக்கை துவம்சம் செய்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். 97 கிலோ பிரிவின் இறுதி சுற்றில் இந்திய வீரர் மவுசம் காத்ரி 2-12 என்ற புள்ளி கணக்கில் தென்ஆப்பிரிக்க வீரர் மார்ட்டின் எராஸ்முஸ்சிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார்.

பெண்களுக்கான பிரீஸ்டைல் 57 கிலோ பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்திய வீரர் பூஜா தன்டா 5-7 என்ற புள்ளி கணக்கில் நைஜீரியாவின் ஒடுனயோ அடெகுரோயிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார். 68 கிலோ பிரிவு வெண்கலப்பதக்கத்துக்கான மோதலில் இந்திய வீராங்கனை திவ்யா கக்ரன் 4-0 என்ற புள்ளி கணக்கில் வங்காளதேச வீராங்கனை ஷெரின் சுல்தானாவை தோற்கடித்து வெண்கலப்பதக்கத்தை வசப்படுத்தினார்.

டேபிள் டென்னிசில் வெள்ளி

டேபிள் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் மனிகா பத்ரா-மவுமா தாஸ் ஜோடி 0-3 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனான சிங்கப்பூரின் டியான்வெய்-மென்ங்யு இணையிடம் தோல்வி அடைந்தது. என்றாலும் மனிகா-மவுமா தாஸ் ஜோடிக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சரத்கமல்-சத்யன் ஜோடி அரைஇறுதியில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சரத்கமல் அரைஇறுதிக்கும், கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சரத்கமல்-மவுமா தாஸ், சத்யன்-மனிகா பத்ரா ஜோடிகள் அரைஇறுதிக்கும் முன்னேறினார்கள்.

பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாய்னா நேவால், பி.வி.சிந்து ஆகியோரும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்ரீகாந்த், பிரனாய் ஆகியோரும் தங்களது கால்இறுதி ஆட்டங்களில் வெற்றி பெற்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றனர். இதே போல் இந்தியாவின் சாத்விக் ரங்கி ரெட்டி-சிராஜ் ஷெட்டி ஜோடி ஆண்கள் இரட்டையர் பிரிவிலும், சிக்கி ரெட்டி-அஸ்வினி பொன்னப்பா இணை பெண்கள் இரட்டையர் பிரிவிலும், சாத்விக் ரங்கி ரெட்டி-அஸ்வினி பொன்னப்பா ஜோடி கலப்பு இரட்டையர் பிரிவிலும் அரைஇறுதியை எட்டியது.

குத்துச்சண்டையில் 3 வெண்கலம்

குத்துச்சண்டையில் இந்திய வீரர்கள் அமித் (49 கிலோ), கவுரவ் சோலங்கி (52 கிலோ), மனிஷ் கவுசிக் (60 கிலோ), விகாஸ் கிருஷ்ணன் (75 கிலோ), சதீஷ்குமார் (91 கிலோவுக்கு மேல்) ஆகியோர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி கலக்கினர். இந்திய வீரர்கள் மனோஜ்குமார் (69 கிலோ), முகமது ஹூசாமுதின் (56 கிலோ), நமன் தன்வார் (91 கிலோ) ஆகியோர் தங்களது அரைஇறுதி சுற்றில் தோல்வியை சந்தித்து வெண்கலப்பதக்கத்தை பெற்றனர்.

ஸ்குவாஷ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பலிக்கல்-சவுரவ் கோஷல் ஜோடி இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜோஸ்னா-தீபிகா பலிக்கல் ஜோடி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.

இந்திய தடகள வீரர்கள்

தடகளத்தில் ஆண்கள் பிரிவில் நடைபெற்ற ஈட்டி எறிதலில் இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா (80.42 மீட்டர்). விபின் கஷனா (78.88 மீட்டர்) ஆகியோர் இறுதிசுற்றுக்கு முன்னேறினார்கள். 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய ஆண்கள் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி கண்டது.

நேற்று ஒரேநாளில் இந்தியா 3 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது. நாளை இந்த போட்டி நிறைவடைய உள்ள நிலையில் பதக்கப்பட்டியலில் ஆஸ்திரேலியா 65 தங்கம், 49 வெள்ளி, 54 வெண்கலப்பதக்கத்துடன் முதலிடமும், இங்கிலாந்து 31 தங்கம், 34 வெள்ளி, 34 வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடமும், இந்தியா 17 தங்கம், 11 வெள்ளி, 14 வெண்கலப்பதக்கத்துடன் 3-வது இடமும் வகிக்கின்றன.