பிற விளையாட்டு

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில்இந்தியா ஒரே நாளில் 8 தங்கப்பதக்கம் வென்றது + "||" + Commonwealth Games match India won 8 gold medals in one day

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில்இந்தியா ஒரே நாளில் 8 தங்கப்பதக்கம் வென்றது

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில்இந்தியா ஒரே நாளில் 8 தங்கப்பதக்கம் வென்றது
காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நேற்று ஒரேநாளில் இந்தியா 8 தங்கப்பதக்கம் கைப்பற்றியது. மேரிகோம், நீரஜ் சோப்ரா, மனிகா பத்ரா ஆகியோர் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.
கோல்டுகோஸ்ட், 

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் நேற்று ஒரேநாளில் இந்தியா 8 தங்கப்பதக்கம் கைப்பற்றியது. மேரிகோம், நீரஜ் சோப்ரா, மனிகா பத்ரா ஆகியோர் தங்கம் வென்று சாதனை படைத்தனர்.

மேரிகோம் தங்கம் வென்றார்

21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வருகிறது. இன்றுடன் நிறைவு பெறவுள்ள இந்த விளையாட்டு திருவிழாவின் 10-வது நாளான நேற்று இந்தியா பதக்கங்களை வென்று குவித்தது.

குத்துச்சண்டை போட்டியில் பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை மேரிகோம் இறுதிப்போட்டியில் 5-0 என்ற கணக்கில் வடக்கு அயர்லாந்து வீராங் கனை கிறிஸ்டினா ஒஹராவை எளிதில் தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார்.

தொடர்ந்து உழைப்பேன்

5 முறை உலக சாம்பியனும், ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவருமான 35 வயது மேரிகோம் தனது அறிமுக காமன்வெல்த் விளையாட்டு போட்டியிலேயே தங்கம் வென்று சாதனை படைத்து இருக்கிறார். அவருக்கு இது தான் கடைசி காமன்வெல்த் போட்டியாக இருக்கும் என்று தெரிகிறது.

தங்கம் வென்ற பிறகு மேரி கோம் அளித்த பேட்டியில், ‘மீண்டும் சரித்திரம் படைத்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மைல்கல் பதக்கத்தை வென்றது மிகுந்த மகிழ்ச்சி. நான் கடினமாக உழைத்து பெறும் ஒவ்வொரு பதக்கமும் சிறப்புக்குரியது தான். எனது உடல் தகுதி நன்றாக இருக்கும் வரை தொடர்ந்து களத்தில் கடினமாக உழைப்பேன்’ என்று தெரிவித்தார்.

சோலங்கி, விகாஸ் கிருஷ்ணன் அசத்தல்

ஆண்களுக்கான 52 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் கவுரவ் சோலங்கி இறுதிப்போட்டியில் 4-1 என்ற கணக்கில் வடக்கு அயர்லாந்து வீரர் பிரன்டன் இர்வினை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். 49 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் அமித் பன்கால் இறுதிப்போட்டியில் 1-3 என்ற கணக்கில் இங்கிலாந்தின் கலால் யபாயிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். இதேபோல் 60 கிலோ பிரிவில் இந்திய வீரர் மனிஷ் கவுசிக் இறுதிப்போட்டியில் 2-3 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஹாரி கார்சைடுவிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

75 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் இறுதிப்போட்டியில் 5-0 என்ற கணக்கில் வில்பிரட் செமியை (கேமரூன்) வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கபளகரம் செய்தார். 91 கிலோவுக்கு மேற்பட்ட எடைப்பிரிவில் இந்திய வீரர் சதீஷ்குமார் இறுதிப்போட்டியில் 0-5 என்ற கணக்கில் இங்கிலாந்து வீரர் பிராசர் கிளார்க்கிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

துப்பாக்கி சுடுதலில் சாதனை

துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (மூன்று நிலை) போட்டியில் இந்திய வீரர் சஞ்சீவ் ராஜ்புத் 454.5 புள்ளிகள் குவித்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கம் வென்றார். காமன்வெல்த் போட்டியில் 37 வயது கப்பல்படை அதிகாரியான சஞ்சீவ் ராஜ்புத் வென்ற 3-வது பதக்கம் இதுவாகும். ஏற்கனவே 2006-ம் ஆண்டில் வெண்கலப்பதக்கமும், 2014-ம் ஆண்டில் வெள்ளிப்பதக்கமும் வென்று இருந்தார். கனடா வீரர் கிரிகோர்ஸ் 448.4 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கமும், இங்கிலாந்து வீரர் டீன் பாலே 441.2 புள்ளிகளுடன் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.

மல்யுத்த போட்டியில் பிரீஸ்டைல் 125 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுமித் மாலிக், நைஜீரியாவின் சினிவி போல்டிச்சை சந்திக்க இருந்தார். காயம் காரணமாக சினிவி போல்டிச் விலகியதால் சுமித் மாலிக் தங்கம் வென்றார். சுமித் மாலிக் தனது 3 சுற்று பந்தயங்களிலும் வென்று இருந்தார். 50 கிலோ எடைப்பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் 13-3 என்ற புள்ளி கணக்கில் கனடாவின் ஜெசிகா மெக்டொனால்டை தோற்கடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

சாக்‌ஷி மாலிக் ஏமாற்றம்

62 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்‌ஷிமாலிக் அரைஇறுதியில் 3-6 என்ற புள்ளி கணக்கில் நைஜீரியா வீராங்கனை அமினாட் அடெனியிடம் தோல்வி கண்டு தங்கப்பதக்க வாய்ப்பை தவறவிட்டார். ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றவரான சாக்‌ஷி மாலிக், வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் 6-5 என்ற புள்ளி கணக்கில் நியூசிலாந்தின் டாய்லா போர்டை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். ‘தங்கப்பதக்கம் வெல்ல முடியாமல் போனது எனக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்தது’ என்று சாக்‌ஷிமாலிக் கண்ணீர் மல்க தெரிவித்தார்.

86 கிலோ பிரிவில் இந்திய வீரர் சோம்வீர் வெண்கலப்பதக்கத்துக்கான பந்தயத்தில் 7-3 என்ற புள்ளி கணக்கில் கனடாவின் அலெக்சாண்டர் மூரியை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை பெற்றார்.

நீரஜ் சோப்ரா சரித்திரம் படைத்தார்

தடகள போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 20 வயது இந்திய வீரரான நீரஜ் சோப்ரா 86.47 மீட்டர் தூரம் வீசி தங்கப்பதக்கம் வென்றார். இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய ஈட்டி எறிதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதில் பங்கேற்ற மற்றொரு இந்திய வீரர் விபின் கஷனா (77.87 மீட்டர்) 5-வது இடம் பெற்றார்.

தடகளத்தில் மற்ற பந்தயங்களில் இந்தியாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீரர் ஜின்சன் ஜான்சன் (3:37.86 வினாடி) புதிய தேசிய சாதனை படைத்து 5-வது இடமும், டிரிபிள் ஜம்ப்பில் இந்திய வீரர் அர்பிந்தர்சிங் (16.46 மீட்டர்) 4-வது இடமும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர். 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இந்திய பெண்கள் அணி 7-வது இடம் பெற்றது. இந்திய ஆண்கள் அணி பந்தய தூரத்தை முழுமையாக ஓடி முடிக்காமல் பாதியில் வெளியேறியது.

மனிகா பத்ரா அசத்தல்

டேபிள் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை மனிகா பத்ரா 4-0 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 4-வது இடத்தில் உள்ள சிங்கப்பூர் வீராங்கனை யு மெங்யுவை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினார். இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.

இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்தியாவின் சரத்கமல்-சத்யன் ஜோடி 2-3 என்ற செட் கணக்கில் இங்கிலாந்தின் பால் டிரிங்கால்-லியாம் பிட்ச்போர்ட் இணையிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கம் பெற்றது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹர்மீத் தேசாய்-சனில் சங்கர் ஷெட்டி ஜோடி வெண்கலப்பதக்கம் பெற்றது. கலப்பு இரட்டையர் பிரிவில் அரைஇறுதியில் இந்தியாவின் சரத்கமல்-மவுமா தாஸ், சத்யன்-மவுமா தாஸ் இணை தங்களது ஆட்டங்களில் தோல்வியை சந்தித்தனர். இன்று நடைபெறும் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்த இந்திய இணைகள் மோதுகின்றன. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதியில் இந்திய வீரர் சரத்கமல் தோல்வி கண்டார். வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் சரத்கமல், இன்று இங்கிலாந்து வீரர் சாமுவேல் வால்கெரை சந்திக்கிறார்.

இன்று நிறைவு பெறுகிறது

நேற்று ஒரேநாளில் இந்தியா 8 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலப்பதக்கங்களை அறுவடை செய்தது. நேற்றைய போட்டிகள் முடிவில் ஆஸ்திரேலியா 75 தங்கம், 55 வெள்ளி, 57 வெண்கலப்பதக்கத்துடன் முதலிடமும், இங்கிலாந்து 42 தங்கம், 40 வெள்ளி, 41 வெண்கலப்பதக்கத்துடன் 2-வது இடமும், இந்தியா 25 தங்கம், 16 வெள்ளி, 18 வெண்கலப்பதக்கத்துடன் 3-வது இடமும் வகிக்கின்றன.

இன்றுடன் காமன்வெல்த் விளையாட்டு போட்டி நிறைவு பெறுகிறது. கடைசி நாளான இன்று 14 பந்தயங்கள் அரங்கேறுகின்றன. நிறைவு விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ஆக்கியில் இந்தியாவுக்கு ஏமாற்றம்

ஆக்கி போட்டியில் இந்தியாவுக்கு பெருத்த ஏமாற்றம் காத்து இருந்தது. வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய ஆண்கள் அணி 1-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டு வெருங்கையுடன் திரும்பியது. இங்கிலாந்து அணியில் சாம் வார்ட் 7-வது மற்றும் 43-வது நிமிடத்தில் கோல் அடித்தார். இந்திய அணியின் வருண்குமார் 27-வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி பதில் கோல் திருப்பினார். ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கோல் கணக்கில் நியூசிலாந்தை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றியது. வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய பெண்கள் அணி 0-6 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்திடம் மோசமான தோல்வியை சந்தித்தது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணி 4-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரேலியாவை சாய்த்து தங்கப்பதக்கத்தை தனதாக்கியது. லீக் ஆட்டங்களில் இந்திய ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் இங்கிலாந்தை வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்குவாஷ் போட்டியில் வெள்ளி

ஸ்குவாஷ் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பலிக்கல்-சவுரவ் கோஷல் ஜோடி இறுதிப்போட்டியில் 8-11, 10-11 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் டோனா உருஹர்ட்-கேமரூன் பில்லி இணையிடம் தோல்வி கண்டு வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது. பெண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தீபிகா பலிக்கல்-ஜோஸ்னா சின்னப்பா இணை இங்கிலாந்தின் லாரா மாசரோ-சாரா பெர்ரி ஜோடியை 11-10, 11-5 என்ற நேர்செட்டில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தீபிகா பலிக்கல், ஜோஸ்னா சின்னப்பா ஆகிய இருவரும் தமிழகத்தை சேர்ந்தவர்கள்.

இறுதிப்போட்டியில் சாய்னா-சிந்து

பேட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதிப்போட்டியில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21-10, 21-17 என்ற நேர்செட்டில் இங்கிலாந்து வீரர் ஒசெப் ராஜீவை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் பிரனாய் அரைஇறுதியில் தோல்வி கண்டதுடன், வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்திலும் தோற்று வெளியேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் 21-14, 18-21, 21-17 என்ற செட் கணக்கில் ஸ்காட்லாந்து வீராங்கனை ஜில்மோர் கிறிஸ்டியை சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-18, 21-8 என்ற நேர்செட்டில் கனடாவின் லி மிச்செலியை தோற்கடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார். இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் பி.வி.சிந்து-சாய்னா நேவால் ஆகியோர் பலப்பரீட்சை நடத்துகிறார்கள்.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக் ரங்கி ரெட்டி-சிராக் ஷெட்டி ஜோடி அரைஇறுதியில் வெற்றி கண்டு இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைத்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் அரைஇறுதியில் தோல்வி கண்ட இந்தியாவின் சாத்விக் ரங்கி ரெட்டி-அஸ்வினி பொன்னப்பா இணை வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்திலும் கோட்டை விட்டது. பெண்கள் இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்தியாவின் சிக்கி ரெட்டி-அஸ்வினி ஜோடி 21-19, 21-19 என்ற நேர்செட்டில் ஆஸ்திரேலியாவின் செட்யனா மபசா-குரோன்யா சோமர்விலே இணையை தோற்கடித்து வெண்கலப்பதக்கம் வென்றது.