பிற விளையாட்டு

மலைக்க வைக்கும் மனு பாகெர்! + "||" + Manu Baker

மலைக்க வைக்கும் மனு பாகெர்!

மலைக்க வைக்கும் மனு பாகெர்!
மனு பாகெர், உருவத்தாலும் வயதாலும் சின்னப் பெண். ஆனால் இவரது சாதனைகளோ பெரியவை.
சமீபத்தில் முடிந்த காமன்வெல்த் போட்டி, உலகக் கோப்பை போட்டி ஆகியவற்றில் தங்கம் ‘சுட்டு’ வந்த சுட்டிப்பெண் இவர்.

16 வயதாகும் மனு, இந்த இரு போட்டிகளிலும் இப்போதுதான் முதல்முறையாகப் பிரவேசம் செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பதினோராம் வகுப்பு மாணவியான மனு, உலகக் கோப்பை போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் தங்கம் வென்றபோது, உலகக் கோப்பை போட்டியில் தங்கம் வென்ற மிகவும் இளவயது இந்திய வீராங்கனை, உலக அளவில் மூன்றாவது இளவயது வீராங்கனை என்ற சரித்திரத்தைப் படைத்தார்.

மனுவைப் பொறுத்தவரை இதுபோல பல விஷயங்கள் நம்ப முடியாதவை. அரியானா மாநிலம் ஜாஜர் மாவட்டத்தில் உள்ள கோரியா கிராமத்தில் பிறந்த மனு, தற்காப்புக்கலை, குத்துச்சண்டை, டென்னிஸ், ஸ்கேட்டிங் என்று வேறு விளையாட்டுகளில்தான் கவனம் செலுத்திவந்தார். இரண்டாண்டுகளுக்கு முன்புதான் துப்பாக்கியைக் கையில் எடுத்தார்.

ஆனால், பங்கேற்ற முதல் உலகக் கோப்பை போட்டியிலேயே 2 தங்கப் பதக்கங்கள், முதல் காமன்வெல்த் போட்டியில் ஒரு தங்கப்பதக்கம் என்று படபடவென்று வெற்றிகளைக் குவித்திருக்கிறார்.

ஆனால் அதுபற்றிக் கேட்டால், அலட்டிக்கொள்ளாமல் பேசுகிறார்...

‘‘வெற்றிகள் அவைபாட்டுக்கு நிகழ்ந்தவை. நான் அதுபற்றி அதிகம் யோசிப்பதில்லை. முந்தைய ரெக்கார்டு என்ன என்று அறிந்துகொள்ளக்கூட நான் ஆர்வம் காட்டுவதில்லை.’’

அதேநேரம், தான் இந்த உயரத்தை எட்ட உதவியவர்களை மனு மறக்கவில்லை.

‘‘எனது திறமையைக் கூர்தீட்டிய அனைத் துப் பயிற்சியாளர்களுக்கும், எனக்காக அவர்கள் செலவிட்ட நேரங்களுக்கும் நான் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்’’ என்கிறார், நெகிழ்வுடன்.

காமன்வெல்த் போட்டியில், அனுபவம்மிக்க வீராங்கனை ஹீனா சித்துவை முறியடித்துத்தான் மனு தங்கம் வென்றார். இவர் தன்னை மற்றவர்கள் முதன்முதலில் திரும்பிப் பார்க்க வைத்ததும் ஹீனாவை முதல்முறையாக முந்தியபோதுதான்.

கடந்த ஆண்டு டிசம்பரில் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற தேசியப் போட்டியில், ஹீனாவை மனு தோற்கடித்தார். 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் ஹீனாவின் நீண்டகால சாதனையையும் அவர் முறியடித்தார். அந்தப் போட்டித் தொடரில் மட்டும் மொத்தம் 15 பதக்கங்களை வீழ்த்தி மலைக்கவைத்தார் மனு.

வர்த்தகக் கப்பல் ஒன்றில் தலைமைப் பொறியாளராகப் பணிபுரியும் மனுவின் தந்தை ராம்கிஷன் பாகெர்தான் மனுவை துப்பாக்கி சுடுதலில் ஈடுபடும்படி தூண்டினாராம்.

ஆரம்பத்திலேயே அட்டகாசப்படுத்தத் தொடங்கியுள்ள மனுவிடம் நாம் நிறையவே எதிர்பார்க்கலாம்!