ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் சாய்னா, பிரனாய் தோல்வி


ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்: அரைஇறுதியில் சாய்னா, பிரனாய் தோல்வி
x
தினத்தந்தி 28 April 2018 9:15 PM GMT (Updated: 28 April 2018 8:42 PM GMT)

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா, பிரனாய் ஆகியோர் அரைஇறுதியில் தோல்வி அடைந்தனர்.

வுஹான், 

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சாய்னா, பிரனாய் ஆகியோர் அரைஇறுதியில் தோல்வி அடைந்தனர். அவர்களுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது.

சாய்னா போராடி தோல்வி

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவின் வுஹான் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் 12-ம் நிலை வீராங்கனையும், காமன்வெல்த் விளையாட்டு சாம்பியனுமான சாய்னா நேவால் (இந்தியா), தரவரிசையில் 2-வது இடம் வகிப்பவரும், நடப்பு சாம்பியனுமான தாய் ஜூ யிங்கை (சீனத்தைபே) எதிர்கொண்டார். விறுவிறுப்பான இந்த மோதலில் தொடக்கத்தில் சாய்னா தடுமாறினாலும் பிறகு 17-17 என்று சமநிலைக்கு கொண்டு வந்ததுடன் 20-18 என்ற முன்னிலையுடன் முதல் செட்டை வெல்லக்கூடிய விளிம்பை எட்டினார். ஆனால் அதன் பிறகு சுதாரித்து மீண்ட தாய் ஜூ யிங் கடுமையாக போராடி இந்த செட்டை வசப்படுத்தினார். சாய்னாவின் சில தவறுகள் அவருக்கு சாதகமாக போய் விட்டது.

2-வது செட்டிலும் இதே போன்று தான் நீயா-நானா என்று போட்டி நிலவியது. ஒரு கட்டத்தில் 19-19 என்று சமநிலையும் வந்தது. ஆனால் இந்த முறையும் சாய்னாவுக்கு அதிர்ஷ்டம் கிட்டவில்லை.

45 நிமிடங்கள் நீடித்த திரிலிங்கான ஆட்டத்தின் முடிவில் சாய்னா 25-27, 19-21 என்ற நேர் செட்டில் தோல்வியை தழுவினார். தாய் ஜூ யிங்குக்கு எதிராக இதுவரை 16 ஆட்டங்களில் மோதி உள்ள சாய்னா அதில் 11-ல் தோல்வி கண்டுள்ளார். இதில் தொடர்ச்சியாக 9 ஆட்டங்களில் தோற்றதும் அடங்கும். தோல்வியின் மூலம் 28 வயதான சாய்னா வெண்கலப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. ஆசிய பேட்மிண்டனில் அவர் வெண்கலம் வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே 2010, 2016-ம் ஆண்டுகளிலும் அவர் வெண்கலம் பெற்று இருக்கிறார்.

பிரனாய்க்கு வெண்கலம்

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் பிரனாய் 16-21, 18-21 என்ற நேர் செட்டில் ஒலிம்பிக் சாம்பியன் சென் லாங்கிடம் (சீனா) தோல்வி அடைந்து வெண்கலப்பதக்கம் பெற்றார். 2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமை பிரனாய்க்கு கிடைத்தது.

இத்துடன் நடப்பு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது. முன்னணி நட்சத்திரங்கள் சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் கால்இறுதியுடன் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Next Story