துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 26 May 2018 9:00 PM GMT (Updated: 26 May 2018 9:01 PM GMT)

இலங்கையில் நடந்த சில டெஸ்ட் போட்டிகளில் ‘பிக்சிங்’ என்ற சூதாட்டம் நடந்துள்ளதாக அல் ஜஸீரா செய்தி நிறுவனம் அதிர்ச்சி தகவலை ஆவணப்படமாக தயாரித்து வெளியிட்டுள்ளது.

இந்தியா–இலங்கை டெஸ்டில் சூதாட்டமா? ஐ.சி.சி. விசாரணை

இலங்கையில் நடந்த சில டெஸ்ட் போட்டிகளில் ‘பிக்சிங்’ என்ற சூதாட்டம் நடந்துள்ளதாக அல் ஜஸீரா செய்தி நிறுவனம் அதிர்ச்சி தகவலை ஆவணப்படமாக தயாரித்து வெளியிட்டுள்ளது. அதில், ‘கடந்த ஆண்டு இந்தியா–இலங்கை, 2016–ம் ஆண்டு இலங்கை–ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் இடையே காலேயில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் ‘பிக்சிங்’ நடந்துள்ளது. காலே மைதானத்தின் ஆடுகளத்தை சூதாட்டக்காரர்கள் தங்களுக்கு ஏற்ப மாற்றியுள்ளனர். அதாவது அந்த ஆடுகளத்தின் துணைப்பராமரிப்பாளரை சூதாட்டதரகர் தொடர்பு கொண்டு, ஆடுகளத்தை தங்களுக்கு உகந்த மாதிரி மாற்றும்படியும், அதற்கு பணம் தருவதாகவும் கூறியுள்ளார். இதற்கு ஆடுகள துணை பராமரிப்பாளரும் ஒத்துழைத்துள்ளார். இதே போல் நவம்பர் மாதம் இங்கு நடக்கும் இங்கிலாந்து–இலங்கை டெஸ்ட் போட்டியிலும் பிக்சிங் செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது’ என்று கூறப்பட்டுள்ளது. இது குறித்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) உடனடியாக விசாரணையை தொடங்கியுள்ளது. அந்த செய்தி நிறுவனத்திடம் இது தொடர்பான ஆதாரங்களை ஐ.சி.சி. கேட்டுள்ளது.

ரஷித்கானுக்கு தெண்டுல்கர் புகழாரம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் ஆப்கானிஸ்தானை சேர்ந்த ரஷித்கானுக்கு இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் புகழாரம் சூட்டியுள்ளார். தெண்டுல்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ரஷித்கான் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்று எப்போதும் நினைத்தது உண்டு. ஆனால் இப்போது அவர் தான் 20 ஓவர் கிரிக்கெட்டின் தலைச்சிறந்த சுழற்பந்து வீச்சாளர் என்று தயக்கமின்றி சொல்வேன். பந்து வீச்சு மட்டுமின்றி அவரிடம் பேட்டிங் திறமையும் இருக்கிறது’ என்றார்.

இங்கிலாந்து மீண்டும் தடுமாற்றம்

பாகிஸ்தான் – இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லண்டன் லார்ட்சில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 184 ரன்னில் சுருண்டதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 2–வது நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 350 ரன்கள் எடுத்திருந்தது. 3–வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் 363 ரன்களுக்கு ஆல்–அவுட் ஆனது. 179 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2–வது இன்னிங்சை தொடங்கி இங்கிலாந்து அணி மறுபடியும் தடுமாறியது. 68 ஓவர் முடிந்திருந்த போது இங்கிலாந்து 6 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து 20 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 68 ரன்கள் எடுத்தார்.


Next Story