பிற விளையாட்டு

உலகில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு 83–வது இடம் ஓராண்டில் ரூ.160 கோடி வருவாய் ஈட்டுகிறார் + "||" + List of most earning players in the world Virat Kohli was ranked 83rd

உலகில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு 83–வது இடம் ஓராண்டில் ரூ.160 கோடி வருவாய் ஈட்டுகிறார்

உலகில் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு 83–வது இடம் ஓராண்டில் ரூ.160 கோடி வருவாய் ஈட்டுகிறார்
உலகில் அதிகம் சம்பாதிக்கும் டாப்–100 விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இந்தியாவில் இருந்து கிரிக்கெட் வீரர் விராட் கோலி மட்டுமே இடம் பிடித்துள்ளார்.

நியூயார்க்,

உலகில் அதிகம் சம்பாதிக்கும் டாப்–100 விளையாட்டு வீரர்களின் பட்டியலில் இந்தியாவில் இருந்து கிரிக்கெட் வீரர் விராட் கோலி மட்டுமே இடம் பிடித்துள்ளார். அவர் ஆண்டுக்கு ரூ.160 கோடி வருவாய் ஈட்டுகிறார்.

‘நம்பர் ஒன்’ மேவெதர்

அமெரிக்காவை சேர்ந்த வணிக இதழான ‘போர்ப்ஸ்’ பத்திரிகை ஆண்டுதோறும் அதிகம் சம்பாதிக்கும் வீரர்கள் பற்றிய சுவாரஸ்யமான விவரங்களை வெளியிடுவது வழக்கம். இதன்படி நேற்று புதிய பட்டியலை வெளியிட்டது. கடந்த 12 மாதங்களில் வீரர்களுக்கு விளம்பரம், பரிசு, ஊதியம் மற்றும் போட்டி கட்டணம் உள்ளிட்டவை மூலம் கிடைத்த வருமானங்களை கணக்கிட்டு டாப்–100 பட்டியல் வெளியாகி இருக்கிறது.

நிறைய சம்பாதிக்கும் வீரர்களின் பட்டியலில் அமெரிக்க குத்துச்சண்டை சாம்பியன் புளோயிட் மேவெதர் முதலிடத்தை பிடித்துள்ளார். அவர் ஓராண்டில் ரூ.1900 கோடி சம்பாதித்து இருக்கிறார். இதில், ஆகஸ்டு மாதம் நடந்த கனோர் மெக்கிரிகோருக்கு (அயர்லாந்து) எதிரான தொழில்முறை குத்துச்சண்டையில் அவர் வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த ரூ.1,300 கோடியும் அடங்கும்.

41 வயதான மேவெதர் தொழில்முறை குத்துச்சண்டையில் தோற்றதே கிடையாது. 50 முறை களம் இறங்கி அனைத்திலும் வாகை சூடிய அவர் ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டது குறிப்பிடத்தக்கது.

கால்பந்து நட்சத்திரங்கள்

2–வது இடத்தை அர்ஜென்டினா கால்பந்து அணியின் நட்சத்திர வீரரும், பார்சிலோனா கிளப்புக்காக விளையாடி வருபவருமான லயோனல் மெஸ்சி பெற்றுள்ளார். இந்த காலக்கட்டத்தில் மெஸ்சின் வருமானம் ரூ.741 கோடியாகும். போர்ச்சுகல் கால்பந்து அணியின் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ ரூ.721 கோடி வருமானம் ஈட்டி 3–வது இடம் வகிக்கிறார்.

பிரேசில் கால்பந்து வீரர் நெய்மார் 5–வது இடத்திலும் (ரூ.600 கோடி), சுவிட்சர்லாந்து டென்னிஸ் ஜாம்பவான் ரோஜர் பெடரர் 7–வது இடத்திலும் (ரூ.516 கோடி), ஓட்டப்பந்தய வீரர் உசேன் போல்ட் 45–வது இடத்திலும் (ரூ.207 கோடி) உள்ளனர்.

விராட் கோலி

இந்த பட்டியலில் ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் இடம் பெற்றுள்ளார். அவர் வேறு யாருமில்லை. இந்திய கேப்டன் விராட் கோலி தான். அவரது வருமானம் ரூ.160 கோடியாக கணக்கிடப்பட்டு 83–வது இடம் வழங்கப்பட்டுள்ளது. 29 வயதான கோலியை பற்றி போர்ப்ஸ் இதழ், ‘விராட் கோலி இந்தியாவில் மட்டுமல்ல, உலக அளவில் புகழ்பெற்ற வீரர்களில் ஒருவராக திகழ்கிறார். அவரை டுவிட்டரில் 2½ கோடி ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள். இந்த ஆண்டு இந்திய கிரிக்கெட் வாரியம் வீரர்களுக்கான ஊதிய ஒப்பந்த பட்டியலில் புதியதாக ‘ஏ’ பிளஸ் கிரேடை உருவாக்கியது. அதில் சேர்க்கப்பட்டுள்ளன 5 வீரர்களில் கோலியும் ஒருவர். அந்த வகையில் அவர் ரூ.7 கோடி ஊதியம் பெறுகிறார். மேலும் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக ரூ.17 கோடிக்கு தக்க வைக்கப்பட்டார். பூமா, பெப்சி, உபைர் உள்ளிட்ட பல நிறுவனங்களுடன் அவர் விளம்பரம் ஒப்பந்தம் செய்திருக்கிறார்.’ என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கோடிகளை அள்ளுவதில் கடந்த ஆண்டு 89–வது இடத்தில் இருந்த கோலி இந்த முறை 6 இடங்கள் முன்னேறி இருக்கிறார். கோலியை தவிர வேறு எந்த இந்தியருக்கும் இடம் இல்லை.

பணக்கார விளையாட்டு வீரர்களில் 66 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள். அதிலும் 40 பேர் அமெரிக்காவில் பிரபலமான என்.பி.ஏ. எனப்படும் கூடைப்பந்து ஆட்டக்காரர்கள் ஆவர்.

வீராங்கனைகள் இல்லை

100 பேரில் ஒரு வீராங்கனைக்கு கூட இடம் கிடைக்கவில்லை. வழக்கமாக டென்னிஸ் புயல்கள் மரிய ‌ஷரபோவா (ரஷியா), செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) இடம் பெறுவார்கள். ஊக்கமருந்து சோதனையில் சிக்கி 15 மாத தடையை அனுபவித்த ‌ஷரபோவாவினால் அதன் பிறகு பெரிய அளவில் வெற்றிகளை குவிக்க முடியவில்லை. இதே போல் குழந்தை பெற்றுக்கொண்டு சமீபத்தில் களம் திரும்பிய செரீனாவின் வருமானமும் வெகுவாக குறைந்து போய் விட்டது. இதனால் அவர்களால் இந்த பட்டியலில் நுழைய முடியவில்லை.