பிரமிக்க வைக்கும் பிரக்ஞானந்தா!


பிரமிக்க வைக்கும் பிரக்ஞானந்தா!
x
தினத்தந்தி 30 Jun 2018 9:38 AM GMT (Updated: 30 Jun 2018 9:38 AM GMT)

உலகின் இரண்டாவது இளவயது கிராண்ட்மாஸ்டர் என்ற தகுதியைப் பெற்றதன்மூலம் ஒட்டுமொத்த சதுரங்க உலகத்தையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார், சென்னை வீரர் பிரக்ஞானந்தா.

முகப்பேர் வேலம்மாள் மேனிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்புதான் படிக்கிறார் பிரக்ஞானந்தா. ஆனால் உலகச் சிகரத்தை எட்டிவிட்டார். இத்தாலியில் நடைபெற்ற கிரெடின் ஓபன் போட்டியின்போது கிராண்ட்மாஸ்டர் பெருமையுடன் நாடு திரும்பியிருக்கிறார்.

பிரக்ஞானந்தா, இவருக்கு முன்பு சாதனையாளராகத் திகழ்கிற உக்ரைனின் செர்ஜி கர்ஜாகின் ஆகிய இருவர் மட்டுமே உலகிலேயே 13 வயதுக்கு முன் கிராண்ட்மாஸ்டர் ஆனவர்கள்.

சென்னையின் புதிய கிராண்ட்மாஸ்டருக்கு பல திசைகளில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன.

அவற்றில் முக்கியமானது, பிரக்ஞானந்தாவின் சொந்தப் பயிற்சியாளர் கிராண்ட்மாஸ்டர் ஆர்.பி. ரமேஷின் பாராட்டு...

‘‘பிரக்ஞானந்தா அசாதாரண திறமை கொண்டவர். அவர் எனது மாணவர் என்பதற்காக மட்டும் நான் இதைக் கூறவில்லை. உலக சாம்பியன் ஆவதற்கான அனைத்துத் தகுதியும் அவருக்கு இருக்கிறது. பிரக்ஞா இவ்வளவு தூரம் உயர்ந்ததற்கு முக்கியக் காரணம் அவரது உழைப்புதான். பயிற்சியாளர்களாகிய நாங்கள் துணையாகத்தான் இருக்கிறோம்’’ என்கிறார்.

பிரக்ஞானந்தாவின் வெற்றி வேட்கைக்கு இணையே இல்லை என்பது பயிற்சியாளரின் கருத்து.

‘‘ஒருநாள், உலக சாம்பியனாக வேண்டும் என்பது மட்டும் பிரக்ஞாவின் குறிக்கோள் அல்ல. மூவாயிரம் ரேட்டிங் புள்ளிகளையும் தாண்ட வேண்டும் என்பதே அவரது உச்ச லட்சியம். பாருங்கள், நடப்பு உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன்கூட மூவாயிரம் புள்ளிகளை நெருங்கவில்லை!’’

இளவயது கிராண்ட்மாஸ்டர் என்பதில் பிரக்ஞானந்தாவுக்கும் கர்ஜாகினுக்கும் மூன்று மாதம்தான் இடைவெளி. ஆனால் உண்மையில், பிரக்ஞானந்தாவுக்கு மிக இளவயது கிராண்ட்மாஸ்டர் ஆவது குறிக்கோள் இல்லையாம்.

‘‘அவர் பல நீண்டகால இலக்குகளை மனதில் வைத்திருக்கிறார். அவற்றை நோக்கி அவர் உழைக்க வேண்டும், தனது சதுரங்கத் திறனை மேலும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் எனது எண்ணமும்’’ என்கிறார் ரமேஷ்.

சதுரங்க குடும்பத்தைப் போல பிரக்ஞானந்தாவின் சொந்தக் குடும்பமும் மகிழ்ச்சியில் மிதக்கிறது.

அப்பா ரமேஷ்பாபு, அம்மா நாகலட்சுமி, அக்கா வைஷாலி (இவரும் ஒரு சதுரங்க வீராங்கனை) என்று எல்லோரது வார்த்தைகளிலும் சந்தோஷமும் பெருமிதமும் தெறிக்கிறது.

‘‘பிரக்ஞானந்தா வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் எப்போதும் எந்த நெருக்கடியும் கொடுப்பதில்லை. அவன் எந்தக் கவலையும் இன்றி இயல்பாக விளையாட வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை’’ என்கின்றனர்.

ஆனால் சாதாரணமாகவே சமர்த்துப்பிள்ளையான பிரக்ஞானந்தா, வெளியே சுற்றுவது, பொழுதுபோக்குகளில் நேரத்தைக் கழிப்பதில் ஆர்வம் காட்டுவதில்லையாம். சதுரங்கமே உயிர்மூச்சாகக் கொண்டவராம்.

அதுதான் அவரது வெற்றியின் ரகசியம் என்பது புரிகிறது! 

Next Story