சாம்பியன்களை உருவாக்கும் சாம்பியன்!


சாம்பியன்களை உருவாக்கும் சாம்பியன்!
x
தினத்தந்தி 14 July 2018 7:06 AM GMT (Updated: 14 July 2018 7:06 AM GMT)

இளவழகி... கேரம் விளையாட்டில் நான்கு முறை உலக சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற தமிழ்ப்பெண்.

சென்னை வியாசர்பாடியில் இருந்து விருட்சமாய் எழுந்த இந்த சாம்பியன் வீராங்கனை, தற்போது மேலும் பல சாம்பியன்களை உருவாக்கும் முயற்சியில் முனைப்பாக ஈடுபட்டிருக்கிறார்.

அது உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இளவழகியின் பேட்டி...

நீங்கள் எந்த வயதில் கேரம் விளையாடத் தொடங்கினீர்கள்?

ஆறு வயதில். அப்பா இருதயராஜுக்கு கேரம் விளையாட்டில் மிகுந்த ஆர்வம். ஆனால் அவர் பி.யூ.சி.க்குப் பின் குடும்பச் சூழல் காரணமாக மீன்பாடி வண்டி ஓட்டத் தொடங்கிவிட்டார். எனவே என்னை கேரம் விளையாட்டில் இறக்கிவிட்டார். இப்படி அப்பாவின் விருப்பத்தால் கேரம் விளையாடத் தொடங்கிய நான், பின்னர் சொந்த ஆர்வத்திலேயே இதில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்து­­­­­­­­­விட்டேன். நான் பயின்ற கன்னிகாபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை சந்திரா, விளையாட்டு ஆசிரியை கலாவதி ஆகியோரும் மிகவும் கைகொடுத்தார்கள்.

நீங்கள் யாரிடம் முறைப்படி கேரம் பயிற்சி பெற்றீர்கள்?

நான் கேரம் விளையாடத் தொடங்கியபோது வீட்டில் சரியான கேரம் போர்டு கூடக் கிடையாது. எனவே நான், அப்பாவின் நண்பரான ஆறுமுகத்தின் கேரம் கிளப்பில் முறைப்படி பயிற்சி பெறத் தொடங்கினேன். தொடர்ந்து, பங்காரு பாபு, ஆனந்தன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றேன்.

எப்போது முதல் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினீர்கள்? நீங்கள் முதலில் பெற்ற வெற்றி?

நான் எனது பத்தாவது வயதில் இருந்து கேரம் போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில் மாநில அளவிலான சப்-ஜூனியர் போட்டியில் கலந்துகொண்ட நான், அதில் இரண்டாமிடமே பெற்றேன். ஆனால் அதற்குப் பின் மெல்ல மெல்ல போட்டிகளில் வெற்றி பெறத் தொடங்கினேன். தேசிய அளவிலும் முத்திரை பதிக்க ஆரம்பித்தேன்.

நீங்கள் வென்ற உலக சாம்பியன்ஷிப் போட்டிகள் பற்றிக் கூறுங்கள்...

தேசியப் போட்டிகளில் சிறந்த ரேங்கிங் பெற்றதன் விளைவாக, கடந்த 2006-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ராஜீவ்காந்தி 2-வது கேரம் உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புப் பெற்றேன். அதன் இறுதிப் போட்டியில் மராட்டியத்தைச் சேர்ந்த ஆயிஷா முகமதை வீழ்த்தி சாம்பியன் ஆனேன். முதல்முறையாக ஓர் உலக சாம்பியன்ஷிப்பில், அதுவும் நமது முன்னாள் பிரதமர் பெயரில் அமைந்த போட்டியில் வென்றது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது. தொடர்ந்து, பிரான்சில் நடைபெற்ற 5-வது உலக கேரம் சாம்பியன்ஷிப்பில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றேன், இரட்டையர் பிரிவில் இரண்டாமிடம் பெற்றேன்.

அடுத்து...?

2010-ல் அமெரிக்கா ரிச்மாண்டில் நடந்த உலகக் கோப்பை போட்டியிலும் இரட்டையர் பிரிவில் சக நாட்டு வீராங்கனை ராஷ்மி குமாரியுடன் இணைந்து வெற்றிவாகை சூடிவந்தேன். ஒற்றையர் பிரிவில் இரண்டாமிடத்தைப் பிடித்தேன். 2012-ல் பிரான்சில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியிலும் ஒற்றையர், இரட்டையர் பிரிவுகளில் வெற்றியைத் தட்டிவந்தேன்.

நீங்கள் தொடர்ந்து கேரம் விளையாட்டில் கவனம் செலுத்திவருகிறீர்களா?

சாதிக்கத் துடிப்பவர்களுக்கு வெற்றி வேட்கை ஒருபோதும் அடங்காது. அப்படித்தான் நானும். சர்வதேச, தேசிய அளவில் நூற்றுக்கணக்கான பதக்கங்கள், கோப்பைகள், கேடயங்களைக் கைப்பற்றிவிட்டாலும், தொடர்ந்து கேரம் விளையாட்டில் தீவிரமாய் ஈடுபட்டு வருகிறேன். இப்போதும் தினமும் மணிக்கணக்கில் கடும் பயிற்சி செய்கிறேன். அதற்கும் மேலாக, ஒரு முக்கியமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன்.

அது என்ன முயற்சி?

நம்மூரில் இருந்து பல கேரம் சாம்பியன்களை உருவாக்குவது. அந்த நோக்கில் நான் ‘வேல்டு கேரம் சாம்பியன் கிளப்’பை நடத்தி வருகிறேன். இங்கு 6 வயது முதல் 65 வயது வரையிலானவர்கள் கேரம் பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களில் இருந்து, என்னைப் போல பல உலக சாம்பியன்களை உருவாக்க வேண்டும் என்பதே எனது ஆசை.

இந்த கிளப்பை எந்த ஆதரவில் நடத்துகிறீர்கள்?

நானும், முன்னாள் தேசிய கேரம் சாம்பியனான எனது கணவர் சக்திவேலும் இணைந்து எங்கள் சொந்தப் பணத்தில்தான் இந்த கிளப்பை நடத்துகிறோம். எங்கள் கிளப்பில் பயிற்சி பெறும் பலரும் அன்றாடக் கூலித்தொழிலாளர்களின் பிள்ளைகள். எனவே அவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்க முடியாது. இந்த விளையாட்டின் மீது கொண்ட பற்றினாலும், வறுமையால் நம்மைப் போல பிறரும் திறமையை வெளிப்படுத்தத் தவிக்கக்கூடாது என்ற எண்ணத்தாலும் இக்கிளப்பை கஷ்டத்துக்கு இடையில் தொடர்ந்து நடத்தி வருகிறேன். மாநில வீரரான சுரேஷும் இங்கு பயிற்சி அளித்துவருகிறார்.

உங்கள் பயிற்சியில் வீரர், வீராங்கனைகள் யாரும் பிரகாசிக்கத் தொடங்கியிருக்கிறார்களா?

எங்களிடம் பயிற்சி பெறும் மேத்யூ, தற்போது மாநில அளவில் ‘நம்பர் 1’ வீரராக இருக்கிறார். எங்கள் கிளப்பில் பயிற்சி பெறும் ரோகித், நந்தினி, மதுமிதா ஆகியோர் தேசிய பள்ளி விளையாட்டுகள் போட்டியிலும், காயத்திரி, ரஞ்சித்குமார் ஆகியோர் மாலத்தீவில் நடைபெற்ற போட்டியிலும் வெற்றி பெற்றிருப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

ஓர் உலக சாம்பியனாக உங்களுக்கு உரிய அங்கீகாரம் கிடைத்திருக்கிறதா?

நினைவு தெரிந்த நாளில் இருந்து நான் கேரம்தான் எல்லாம் என்று இருந்திருக்கிறேன். அதற்கேற்ப இவ்விளையாட்டுதான் எனக்கு வாழ்வு கொடுத்திருக்கிறது. அமெரிக்காவில் வெற்றி பெற்றபிறகே எனக்கு ஓ.என்.ஜி.சி.யில் வேலை கிடைத்தது. முதல்முறையாக நான் உலக சாம்பியன் ஆனபோது தமிழக அரசின் சார்பில் ரூ. 10 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதன் மூலம் வாழ்வில் நான் என்னை நிலைப்படுத்திக்கொள்ள முடிந்தது. என் தங்கைகள் இலக்கியா, செவ்வந்தியின் கல்லூரிப் படிப்புக்கு உதவ முடிந்தது. முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டிலிடம் பாராட்டுப் பெற்றதும் கேரத்தால்தான்.

கேரம் விளையாட்டின் சிறப்பம்சம் என்று எதைக் கூறுவீர்கள்?

இந்தியத் துணைக்கண்டத்தில் தோன்றியது என்ற வகையில் இது நம்ம விளையாட்டு. அதற்கேற்ப இதில் ஆண்கள், பெண்கள் இரண்டு பிரிவுகளிலும் ஆதிக்கம் செலுத்துபவர்கள் இந்தியர்கள்தான். நம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் நிறைய சாதித்திருக்கிறோம். கவனக்குவிப்புக்கு உதவும் கேரம் விளையாட்டுக்கு தற்போது உலக நாடுகள் பலவும் அதிக முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கியிருக்கின்றன.

உலக சாம்பியனாக நீங்கள் உருவானதன் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்?

முதலில், எனது குடும்பத்தினர். அப்பாவுக்குப் பின், அம்மா செல்வி, சகோதரிகள் எல்லோரும் எனக்குப் பின்புலமாக இருந்திருக்கிறார்கள். நான் அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்வதற்கு ஐ.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தியும் மிகவும் உதவியாக இருந்திருக்கிறார். எனக்கு வேலைவாய்ப்பு அளித்த ஓ.என்.சி.ஜி.க்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

நிறைவேறாத ஆதங்கம் ஏதாவது?

நான் முதல்முறையாக உலக சாம்பியன் ஆனபோது ரூ. 10 லட்சம் பரிசு அளித்த தமிழக அரசு, அடுத்து உலக சாம்பியன் ஆகிறவருக்கு ரூ. 20 லட்சம் வழங்கப்படும் என்று அறிவித்தது. ஆனால் நான் மறுபடி உலக சாம்பியன்ஷிப்பை வென்றபோது அந்தப் பரிசுத்தொகை வழங்கப்படவில்லை. அத்தொகை கிடைத்தால் என்னால் மேலும் பலருக்கு பயிற்சி அளிக்க முடியும். எனக்குத் தகுதி இருப்பதால், அர்ஜுனா விருது பெறவும் ஆசைப்படுகிறேன்.

இளவழகியின் ஆதங்கங்கள், உரியவர்கள் காதில் விழட்டும்! 

Next Story