துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 28 July 2018 10:30 PM GMT (Updated: 28 July 2018 8:13 PM GMT)

பார்முலா1 கார்பந்தயம் மாக்யோராட் ஓடுதளத்தில் இன்று நடக்கிறது.


* 11 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் ஆட உள்ள இந்திய விக்கெட் கீப்பர் தமிழகத்தை சேர்ந்த தினேஷ் கார்த்திக் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘நீண்ட இடைவெளிக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவது பதற்றமாகவும், கொஞ்சம் பரவசமாகவும் இருக்கிறது. இங்கிலாந்தில் விளையாடுவது மிகப்பெரிய சவாலாகும். தொடரை ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன்’ என்றார்.

* இங்கிலாந்து முன்னாள் கேப்டன் கிரஹாம் கூச் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய கேப்டன் விராட் கோலி இப்போது உலகின் சிறந்த வீரர்களில் ஒருவராக விளங்குகிறார். இங்கிலாந்து அணிக்கு அவர் மிகவும் அபாயகரமான வீரராக இருப்பார் என்று நினைக்கிறேன். ஏனெனில் அவர் இதற்கு முன்பு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரில் (2014-ம் ஆண்டில் 5 டெஸ்டில் 134 ரன்கள் மட்டுமே எடுத்தார்) நன்றாக ஆடியதில்லை. அதனால் இந்த முறை இங்கு அவர் தனது திறமையை நிரூபித்து காட்டும் உத்வேகத்துடன் இருப்பார்’ என்றார்.

* பார்முலா1 கார்பந்தயத்தின் 12-வது சுற்றான ஹங்கேரி கிராண்ட்பிரி அங்குள்ள மாக்யோராட் ஓடுதளத்தில் இன்று நடக்கிறது. இதையொட்டி நேற்று தகுதி சுற்று போட்டி நடந்தது. இதில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தின் லீவிஸ் ஹாமில்டன் முதலிடம் பிடித்தார். இதையடுத்து இன்றைய பிரதான சுற்றில் அவரது கார் முதல்வரிசையில் இருந்து புறப்படும்.

* பாசட்டெரேவில் நேற்று நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 301 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் 103 ரன்கள் (127 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசினார். இது அவரது 11-வது சதமாகும். இந்த தொடரில் இதுவரை 287 ரன்கள் சேர்த்துள்ள தமிம் இக்பால், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் ஒன்றில் அதிக ரன்கள் குவித்த வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

* ஊக்கமருந்து விவகாரத்தில் ரஷிய தடகள சங்கத்துக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க சர்வதேச தடகள சம்மேளனம் தடை விதித்தது. இந்த நிலையில் அந்த தடையை மேலும் நீட்டிப்பது என்று சர்வதேச சம்மேளனம் நேற்று ஒருமனதாக முடிவு எடுத்துள்ளது. இதனால் விரைவில் நடக்க உள்ள ஐரோப்பிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ரஷிய வீரர், வீராங்கனைகள் பொதுவான அமைப்பின் பெயரில் தான் கலந்து கொள்ள முடியும்.

Next Story