துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 13 Aug 2018 10:00 PM GMT (Updated: 13 Aug 2018 9:45 PM GMT)

சீன தைபேயிடம் இந்திய ஹேண்ட்பால் அணி தோல்வியடைந்தது.


இந்திய ஹேண்ட்பால் அணி தோல்வி

* 18–வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவில் வருகிற 18–ந் தேதி தொடங்குகிறது. போட்டி அதிகாரபூர்வமாக தொடங்கப்படாத நிலையில் ஹேண்ட்பால், கால்பந்து போட்டிகள் நேற்று தொடங்கி விட்டது. ஹேண்ட்பால் போட்டியில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்திய அணி, சீன தைபேயை சந்தித்தது. இதில் இந்திய அணி 28–38 என்ற கோல் கணக்கில் சீன தைபேயிடம் தோல்வி கண்டது.

இந்திய அணி சரிவில் இருந்து மீளும்–டீன் ஜோன்ஸ்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்ஸ்மேன் டீன் ஜோன்ஸ் அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் சரிவை சந்தித்துள்ள இந்திய அணி அதில் இருந்து மீண்டு வரும் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நன்றாக ஆடாததால், அந்த அணி மோசமான அணியாகி விடாது. லார்ட்சில் நிலவிய தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக பந்து அதிகம் ஸ்விங் ஆனது. அடுத்த போட்டியில் தட்பவெப்ப நிலை நன்றாக இருக்கும் என்று நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

‘தனிப்பட்ட பயிற்சியாளர் தேவை’–வினேஷ் போகத்

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் 2 முறை தங்கப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் அளித்த ஒரு பேட்டியில், ‘ஆசிய விளையாட்டு போட்டிக்கான பயிற்சியில் எங்களது கவனத்தை செலுத்தி வருகிறோம். எங்களுக்கு சில குறைபாடுகள் இருக்கிறது. அதனை நீக்க வேண்டியது அவசியமானதாகும். பிரதான பயிற்சியாளரால் எல்லா வீரர்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்த முடியவில்லை. எனக்கு தனிப்பட்ட பயிற்சியாளர் வசதி செய்து கொடுத்தால் அவர் எனது செயல்பாடு குறித்து முழு நேரமும் கவனம் செலுத்த முடியும். எனது தவறுகளை கண்டுபிடித்து அதனை உடனடியாக திருத்தி கொள்ள முடியும். போட்டி திறனை அதிகரிக்க தனிப்பட்ட பயிற்சியாளர் அவசியமானதாகும். அத்துடன் பயிற்சி வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை மாவட்ட கபடி அணிகள் இன்று தேர்வு

மாநில ஜூனியர் பெண்கள் கபடி போட்டி தர்மபுரியில் வருகிற 24–ந் தேதி முதல் 26–ந் தேதி வரை நடக்கிறது. மாநில சப்–ஜூனியர் பெண்கள் கபடி போட்டி விழுப்புரத்தில் வருகிற 31–ந் தேதி முதல் செப்டம்பர் 2–ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த இரண்டு போட்டிகளுக்கான சென்னை மாவட்ட கபடி அணிகள் தேர்வு சென்னை ராணிமேரி கல்லூரி மைதானத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடக்கிறது. இதில் கலந்து கொள்ள விரும்பும் வீராங்கனைகள் தகுந்த வயது சான்றிதழுடன் மைதானத்துக்கு வர வேண்டும் என்று சென்னை மாவட்ட அமெச்சூர் கபடி சங்க செயலாளர் கோல்டு எம்.ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் பெண்கள் கிரிக்கெட் போட்டி

ஐ.வி.எஸ்.இவென்ட்ஸ் சார்பில் சென்னை பெண்கள் கல்லூரி அணிகளுக்கான லீக் கிரிக்கெட் போட்டி சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவ கல்லூரி மைதானத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இந்த போட்டியில் எம்.ஓ.பி.வைஷ்ணவா, எத்திராஜ் உள்பட 10 அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றன. லீக் மற்றும் நாக்–அவுட் முறையில் போட்டி நடத்தப்படுகிறது.


Next Story