பேட்மிண்டன் அணிகள் பிரிவில் இந்தியா தோல்வி: ஆண்கள் கபடி அணிக்கும் அதிர்ச்சி


பேட்மிண்டன் அணிகள் பிரிவில் இந்தியா தோல்வி: ஆண்கள் கபடி அணிக்கும் அதிர்ச்சி
x
தினத்தந்தி 20 Aug 2018 11:00 PM GMT (Updated: 20 Aug 2018 8:13 PM GMT)

ஆசிய விளையாட்டில் பேட்மிண்டன் அணிகள் பிரிவில் இந்தியா கால்இறுதியுடன் வெளியேறியது. ஆண்கள் கபடி அணியும் லீக் சுற்றில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது.

ஜகர்தா,

ஆசிய விளையாட்டில், 11 அணிகள் இடையிலான கபடி போட்டியில் முதல் நாளில் 2 வெற்றிகளை பெற்ற இந்திய ஆண்கள் அணி (ஏ பிரிவு) நேற்று 3-வது லீக்கில் தென்கொரியாவை சந்தித்தது. திரிலிங்கான இந்த ஆட்டத்தில் இந்தியா 23-24 என்ற புள்ளி கணக்கில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஆனாலும் இந்திய அணி தொடர்ந்து அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.

ஆசிய விளையாட்டில் 1990-ம் ஆண்டு கபடி போட்டி அறிமுகம் ஆனது. அது முதல் தோல்வியே சந்திக்காமல் தொடர்ச்சியாக 7 முறை தங்கப்பதக்கம் வென்றிருந்த இந்திய அணி, ஆசிய விளையாட்டு வரலாற்றில் முதல்முறையாக தோல்வியை சந்தித்து இருக்கிறது. அதே சமயம் 9 அணிகள் இடம் பெற்றுள்ள கபடி பெண்கள் பிரிவில் நடப்பு சாம்பியனான இந்திய அணி (ஏ பிரிவு) 33-23 என்ற புள்ளி கணக்கில் தாய்லாந்தை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 27-25, 25-22, 25-19 என்ற செட் கணக்கில் ஹாங்காங்கை தோற்கடித்தது. இதே போல் ஹேண்ட்பால் போட்டியில் இந்தியா 45-19 என்ற புள்ளி கணக்கில் மலேசியாவை (ஏ பிரிவு) வென்றது.

பேட்மிண்டனில் அணிகளுக்கான பிரிவில் இந்தியாவுக்கு எதிர்பாராத சறுக்கல் ஏற்பட்டது. இதன் பெண்கள் கால்இறுதியில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் ஜப்பானிடம் தோற்றது. இதில் ஒற்றையர் முதல் சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து 21-18, 21-19 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் அகானே யமாகுச்சியை வீழ்த்தி நல்ல தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தார். ஆனால் மற்றொரு இந்திய நட்சத்திரம் சாய்னா நேவால் 11-21, 25-23, 16-21 என்ற செட் கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் நோஜோமி ஒகுஹராவிடம் (ஜப்பான்) போராடி வீழ்ந்தார். இது தான் பின்னடைவாக அமைந்தது. இரட்டையர் பிரிவில் சிக்கி ரெட்டி-அராதி சாரா, சிந்து-அஸ்வினி ஜோடிகள் தங்களது ஆட்டங்களில் நேர் செட்டில் தோற்றன.

இதே போல் ஆண்கள் பிரிவில் கால்இறுதியில் இந்திய அணி 1-3 என்ற கணக்கில் இந்தோனேஷியாவிடம் தோற்று வெளியேறியது. இதில் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரனாய் 21-15, 19-21, 21-19 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் கிறிஸ்டி ஜோனட்டானை தோற்கடித்து ஆறுதல் அளித்தார். மற்றபடி ஒற்றையரில் ஸ்ரீகாந்த், இரட்டையரில் சிராக் ஷெட்டி- சாத்விக் ரங்கிரெட்டி, மனு அட்ரி- சுமீத் ரெட்டி ஆகியோர் தோல்வியை தழுவினர். பேட்மிண்டன் அணிகள் பிரிவில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்த நிலையில், இனி தனிநபர் போட்டிகளில் தான் பதக்கத்தை எதிர்பார்க்க வேண்டும்.

டென்னிஸ் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் 2-வது சுற்று ஆட்டங்களில் இந்தியாவின் ராம்குமார் 6-0, 7-6 (4) என்ற நேர் செட் கணக்கில் வாங் ஹாங் கிட்டையும் (ஹாங்காங்), இந்தியாவின் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-2, 6-0 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் பிட்ரியாதியையும் விரட்டியடித்தனர்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனைகள் அங்கிதா ரெய்னா 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் இந்தோனேஷியாவின் பியட்ரைசையும், கர்மான் கவுர் தான்டி 6-1, 6-0 என்ற நேர் செட் கணக்கில் ஜாக்கல் அல்டான்சார்னையையும் (மங்கோலியா) வீழ்த்தி 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.

Next Story