ஆசிய விளையாட்டு பெண்கள் மல்யுத்தம்: தங்கம் வென்று வரலாறு படைத்தார், வினேஷ் போகத்


ஆசிய விளையாட்டு பெண்கள் மல்யுத்தம்: தங்கம் வென்று வரலாறு படைத்தார், வினேஷ் போகத்
x
தினத்தந்தி 20 Aug 2018 11:15 PM GMT (Updated: 20 Aug 2018 8:24 PM GMT)

ஆசிய விளையாட்டு பெண்கள் மல்யுத்தத்தில் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தங்கப்பதக்கத்தை கைப்பற்றி புதிய சரித்திரம் படைத்தார்.

ஜகர்தா,

18-வது ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா பெற்றுத்தந்தார். இந்த நிலையில் இந்தியாவுக்கு 2-வது தங்கப்பதக்கமும் மல்யுத்தத்திலேயே கிடைத்திருக்கிறது.

போட்டியின் 2-வது நாளான நேற்று பெண்கள் மல்யுத்தத்தில் (50 கிலோ, பிரிஸ்டைல் பிரிவு) இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தனது முதல் சுற்றில் 8-2 என்ற புள்ளி கணக்கில் சீனாவின் யனன் சன்னை தோற்கடித்தார். இதன் மூலம் ரியோ ஒலிம்பிக் கால்இறுதியில் அவரிடம் மோதி காயத்துடன் தோல்வியை ஒப்புக்கொண்டதற்கு பழிதீர்த்துக் கொண்டார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத் கால்இறுதியில் 11-0 என்ற கணக்கில் ஹியன்ஜூ கிம்மையும் (தென்கொரியா), அரைஇறுதியில் 10-0 என்ற புள்ளி கணக்கில் யாக் ஹிமுரடோவாவையும் (உஸ்பெகிஸ்தான்) பந்தாடினார்.

இதன் பின்னர் இறுதிப்போட்டியில் யுகி அரியை (ஜப்பான்) எதிர்கொண்ட வினேஷ் போகத் இதிலும் எதிராளியை மடக்கி பிரமாதப்படுத்தினார். முடிவில் 6-2 என்ற புள்ளி கணக்கில் வினேஷ் போகத் வெற்றி கண்டு தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார். இதன் மூலம் ஆசிய விளையாட்டில் பெண்கள் மல்யுத்தத்தில் மகுடம் சூடிய முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

அரியானாவைச் சேர்ந்த 23 வயதான வினேஷ் போகத், காமன்வெல்த் போட்டியிலும் சாம்பியன் பட்டத்தை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கூறுகையில், ‘ஆசிய அளவிலான போட்டிகளில் நான் 3-4 வெள்ளிப்பதக்கம் பெற்று இருக்கிறேன். அதனால் இந்த முறை தங்கம் வெல்ல வேண்டும் என்பதில் தீவிரமாக இருந்தேன். கடவுளின் கருணையால் அது நடந்திருக்கிறது’ என்றார்.

அதே சமயம், ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்றவரான இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், ஏமாற்றத்திற்குள்ளானார். அரைஇறுதியில் 7-9 என்ற புள்ளி கணக்கில் டைமிபெகோவாவுடன் (கஜகஸ்தான்) தோல்வி அடைந்த சாக்‌ஷி மாலிக் அடுத்து வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் (62 கிலோ பிரிவு) வடகொரியாவின் ஜோங் சிம் ரிம்முடன் மல்லுகட்டினார். இதில் சாக்‌ஷி மாலிக் 2-12 என்ற கணக்கில் தோற்று பதக்கத்தை கோட்டை விட்டார். முன்னதாக மற்றொரு இந்திய மல்யுத்த வீராங்கனை பூஜா தன்டா வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் (57 கிலோ) ஜப்பானின் காட்சுகி சககாமியுடன் 1-6 என்ற புள்ளி கணக்கில் பணிந்தார். இதே போல் ஆண்களுக்கான மல்யுத்தம் 125 கிலோ உடல் எடைப்பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய வீரர் சுமித் மாலிக் 0-2 என்ற புள்ளி கணக்கில் உஸ்பெகிஸ்தான் வீரர் மோட்மனாஷ்விலியிடம் தோல்வி அடைந்தார்.

பதக்கப்பட்டியலில் சீனா 15 தங்கம், 12 வெள்ளி, 9 வெண்கலம் என்று மொத்தம் 36 பதக்கங்களுடன் முதலிடம் வகிக்கிறது. ஜப்பான் 8 தங்கம் உள்பட 30 பதக்கங்களுடன் 2-வது இடத்தில் உள்ளது.

இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, ஒரு வெண்கலம் என்று 5 பதக்கத்துடன் 8-வது இடத்தில் இருக்கிறது.

Next Story