பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு: 15 வயது துப்பாக்கி சுடுதல் வீரர் விஹான் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை + "||" + 15-year-old shooter Vihani won the silver medal

ஆசிய விளையாட்டு: 15 வயது துப்பாக்கி சுடுதல் வீரர் விஹான் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை

ஆசிய விளையாட்டு: 15 வயது துப்பாக்கி சுடுதல் வீரர் விஹான் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் 15 வயதான ஷர்துல் விஹான் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார்.
பாலெம்பேங், 

ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீரர் 15 வயதான ஷர்துல் விஹான் வெள்ளிப்பதக்கம் வென்று அசத்தினார். டென்னிசில் 3 பதக்கம் உறுதியானது.

45 நாடுகள் பங்கேற்றுள்ள 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பேங் நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. போட்டியின் 5-வது நாளான நேற்று இந்தியாவுக்கு பெரிய அளவில் பதக்கம் கிடைக்கவில்லை. துப்பாக்கி சுடுதலில் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

துப்பாக்கி சுடுதலில் ஆண்களுக்கான டபுள் டிராப் பிரிவின் தகுதி சுற்றில் இந்திய இளம் நட்சத்திரம் ஷர்துல் விஹான் 141 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து 6 பேரில் ஒருவராக இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு இந்திய வீரர் அங்குர் மிட்டல் தகுதி சுற்றுடன் வெளியேற்றப்பட்டார்.

இதைத் தொடர்ந்து நடந்த இறுதிப்போட்டியில் தொடக்கத்தில் ஷர்துல் விஹானின் கையே ஓங்கியது. பிறகு கடைசி கட்டத்தில் சற்று பின்தங்கிப்போனார். முடிவில் ஷர்துல் விஹான் 73 புள்ளிகளுடன் 2-வது இடத்தை பிடித்து வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். தென்கொரியா வீரர் 34 வயதான ஹியன்வூ ஷின் 74 புள்ளிகளுடன் தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினார்.

வெள்ளிப்பதக்கத்தை ‘சுட்டு’ பிரமிக்க வைத்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த விஹானின் வயது வெறும் 15 மட்டுமே. 10-ம் வகுப்பு படிக்கிறார். இதன் மூலம் ஆசிய விளையாட்டில் துப்பாக்கி சுடுதலில் குறைந்த வயதில் பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற சிறப்பை அவர் பெற்றார். தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 4 தங்கப்பதக்கங்களை அள்ளிய விஹான், தற்போது சர்வதேச அளவிலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார். விஹானின் மாமா மனோஜ் கூறுகையில், ‘ஷர்துல் விஹான் தினமும் அதிகாலையில் 5 மணிக்கு விழித்து மீரட்டில் இருந்து டெல்லியில் உள்ள கர்னி துப்பாக்கி சுடுதல் மையத்துக்கு சென்று பயிற்சியில் ஈடுபடுவார். அதன் பிறகு இரவில் 9 மணிக்கு தான் வீடு திரும்புவார். 15 வயதில் இதை எல்லாம் செய்து சாதித்ததை பார்க்கும் போது வியப்பாக இருக்கிறது’ என்றார்.

தொழிலதிபர் குடும்பத்தை சேர்ந்த ஷர்துல் விஹான் முதலில் கிரிக்கெட், அதன் பிறகு பேட்மிண்டன் விளை யாடி கடைசியில் துப்பாக்கி சுடுதலில் முழு நேர வீரராக மாறி விட்டார்.

போட்டி குறித்து விஹான் கூறுகையில், ‘முந்தைய நாள் இரவில் பயிற்சியாளர் மான்ஷர் சிங், களத்தில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் உன்னை விட வயதில் மூத்தவர்கள். அதை பற்றி கவலைப்படாமல் தைரியமாக செயல்படு என்று அறிவுரை வழங்கினார். அதைத்தான் நான் செய்தேன்’ என்றார். நடப்பு தொடரில் துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு கிடைத்த 8-வது பதக்கம் இதுவாகும். அதே சமயம் பெண்களுக்கான டபுள் டிராப் பிரிவில் இந்தியாவின் ஸ்ரேயாசி சிங், வர்ஷா ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர்.

டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் அரைஇறுதியில் இந்திய வீராங்கனை அங்கிதா ரெய்னா 4-6, 6-7 (6) என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஜாங் சூவையிடம் 2 மணி 11 நிமிடங்கள் போராடி தோல்வி அடைந்தார். வெளியேறினாலும் அரைஇறுதி வரை முன்னேறியதன் மூலம் 25 வயதான அங்கிதா ரெய்னாவுக்கு வெண்கலப்பதக்கம் கிடைத்தது. ஆசிய டென்னிசில் பெண்கள் ஒற்றையரில் சானியா மிர்சாவுக்கு பிறகு பதக்கத்தை ருசித்த இந்திய வீராங்கனை அங்கிதா தான்.

ஆண்கள் இரட்டையர் அரைஇறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் கூட்டணி 4-6, 6-3 (10-8) என்ற செட் கணக்கில் உசுகி காய்ட்டோ- ஷிமாபுகுரோ (ஜப்பான்) இணையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இதையடுத்து போபண்ணா- திவிஜ் சரண் ஜோடிக்கு தங்கம் அல்லது வெள்ளிப்பதக்கம் உறுதியாகியுள்ளது. அவர்கள் இன்று நடக்கும் இறுதி ஆட்டத்தில் அலெக்சாண்டர் பப்ளிக்- டெனிஸ் யேவ்செயேவ் (கஜகஸ்தான்) ஜோடியுடன் மோதுகிறார்கள்.

ஆண்கள் ஒற்றையர் கால்இறுதியில் இந்திய வீரரான சென்னையை சேர்ந்த பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 6-7 (2), 6-4, 7-6 (8) என்ற செட் கணக்கில் சூன்வூவை (தென்கொரியா) சாய்த்து அரைஇறுதியை எட்டி பதக்கத்தை உறுதிப்படுத்தினார்.

அதே சமயம் கலப்பு இரட்டையர் கால்இறுதியில் இந்தியாவின் போபண்ணா- அங்கிதா ரெய்னா ஜோடி 4-6, 6-1, 6-10 என்ற செட் கணக்கில் இந்தோனேஷியாவின் ரங்கட்-சுட்ஜியாடி இணையிடம் தோற்று நடையை கட்டியது.