பிற விளையாட்டு

ஆசிய விளையாட்டு போட்டி: குண்டு எறிதலில் இந்திய வீரர் தஜிந்தர் பால்சிங் தங்கம் வென்று சாதனை + "||" + Asian Games: Tajinderpal Singh wins gold with games record

ஆசிய விளையாட்டு போட்டி: குண்டு எறிதலில் இந்திய வீரர் தஜிந்தர் பால்சிங் தங்கம் வென்று சாதனை

ஆசிய விளையாட்டு போட்டி: குண்டு எறிதலில் இந்திய வீரர் தஜிந்தர் பால்சிங் தங்கம் வென்று சாதனை
ஆசிய விளையாட்டு போட்டியில் நேற்று நடந்த குண்டு எறிதல் பந்தயத்தில் இந்திய வீரர் தஜிந்தர் பால்சிங் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
ஜகர்தா,

ஆசிய விளையாட்டு போட்டியில் தடகளத்தில் இந்தியாவுக்கு நேற்று சிறப்பான நாளாக அமைந்தது. ஆண்களுக்கான குண்டு எறிதலில் 23 வயதான இந்திய வீரர் தஜிந்தர் பால்சிங் 5-வது முயற்சியில் 20.75 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். சீன வீரர் லி யங் (19.52 மீட்டர்) வெள்ளிப்பதக்கமும், கஜகஸ்தான் வீரர் இவான் இவானோவ் (19.40 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.


பஞ்சாபை சேர்ந்த ராணுவ வீரரான தஜிந்தர்பால்சிங் இந்த வெற்றியின் மூலம் புதிய போட்டி சாதனையுடன், தேசிய சாதனையும் படைத்தார். இதற்கு முன்பு 2011-ம் ஆண்டில் இந்திய வீரர் ஓம்பிரகாஷ் 20.69 மீட்டர் தூரம் வீசியதே தேசிய சாதனையாக இருந்தது. இந்த போட்டி தொடரில் தடகளத்தில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் பதக்கம் இதுவாகும். அத்துடன் இந்த போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த 7-வது தங்கப்பதக்கம் இது. தஜிந்தர் பால்சிங் 2017-ம் ஆண்டு புவனேஸ்வரத்தில் நடந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தார்.

இறுதிப்போட்டியில் ஆரோக்ய ராஜீவ்

ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் அரைஇறுதி சுற்றில் இந்திய வீரர்கள் முகமது அனாஸ் 45.30 வினாடியில் பந்தய தூரத்தை கடந்தும், ஆரோக்ய ராஜீவ் (தமிழ்நாடு) 46.08 வினாடியில் பந்தய இலக்கை எட்டியும் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள். ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் தகுதி சுற்றில் இந்திய வீரர் சேத்தன் 2.15 மீட்டர் உயரம் தாண்டி தனது பிரிவில் 5-வது இடத்தை பிடித்து இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் ஸ்ரீசங்கர் 7.83 மீட்டர் தூரம் தாண்டி 4-வது இடம் பிடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

பெண்களுக்கான 100 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனை டூட்டி சந்த் (11.38 வினாடி) 3-வது இடத்தை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார். பெண்களுக்கான 10 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய வீராங்கனை சூர்யா (தமிழ்நாடு) 6-வது இடத்தையும், சஞ்சிவானி பாபுரா 9-வது இடத்தையும் பிடித்து ஏமாற்றம் அளித்தனர். பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தில் இந்திய வீராங்கனைகள் ஹிமா தாஸ் (51.00 வினாடி), புதிய தேசிய சாதனையுடன் 2-வது இடமும், நிர்மலா 4-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்கள். பெண்களுக்கான சங்கிலி குண்டு எறிதலில் இந்திய வீராங்கனை சரிதா ரோமித் சிங் (62.03 மீட்டர்) 5-வது இடம் பிடித்து வெறுங்கையுடன் திரும்பினார்.

இந்தியாவுக்கு நேற்று ஒரே நாளில் ஒரு தங்கமும், 3 வெண்கலப்பதக்கமும் கிடைத்தன.