பிற விளையாட்டு

தங்கம் வென்று இந்தியா திரும்பிய வீரர் ; காத்திருந்த அதிர்ச்சி செய்தி + "||" + Tajinderpal Singh Toor's father dies before seeing son's Asian Games gold

தங்கம் வென்று இந்தியா திரும்பிய வீரர் ; காத்திருந்த அதிர்ச்சி செய்தி

தங்கம் வென்று இந்தியா திரும்பிய வீரர் ; காத்திருந்த அதிர்ச்சி செய்தி
தங்கம் வென்று இந்தியா திரும்பிய வீரரின் தந்தை இறந்த அதிர்ச்சி செய்தி கிடைத்து உள்ளது.


சண்டிகார்,

இந்தோனேஷியாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் இந்திய தடகள வீரர் தஜிந்தர்பால் சிங் குண்டு எறிதல் போட்டியில் 20.75 மீட்டர் தூரம் எறிந்து புதிய போட்டி சாதனையுடன் தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். தங்கப்பதக்கம் வென்றதுடன், புதிய தேசிய சாதனையும் படைத்த 23 வயது ராணுவ வீரரான தஜிந்தர்பால் சிங் பஞ்சாப் மாநிலம் மோகா நகர் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர்.

இவரது தந்தை கரம் சிங் கடந்த சில வருடங்களாக புற்று நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தங்கப்பதக்கம் வென்ற தஜிந்தர்பால் சிங் தனது பதக்கத்தை குடும்பத்தினருக்கு அர்ப்பணிக்க விரும்புவதாகவும், தங்கப்பதக்கம் வென்று தன்னிடம் காண்பிக்க வேண்டும் என்று போட்டிக்கு புறப்படும் முன்பு தனது தந்தை தெரிவித்ததாகவும் கூறியிருந்தார். ஆனால் அவரது இந்த ஆசை நிராசையாகி விட்டது.

ஆசிய விளையாட்டு போட்டியில் வென்ற தங்கப்பதக்கத்தை தனது தந்தையிடம் காட்டி வாழ்த்து பெறும் ஆவலுடன் நாடு திரும்பிய தஜிந்தர் பால் சிங் நேற்று முன்தினம் டெல்லியை வந்தடைந்தார். அங்கிருந்து தனது சொந்த ஊருக்கு பயணமானார். ஆனால் அவர் தனது சொந்த ஊரை அடைவதற்கு முன்பே அவரது தந்தை மறைந்த அதிர்ச்சிகரமான செய்தி அவருக்கு கிடைத்தது.

தனது தந்தையை கடைசியாக உயிரோடு பார்க்க முடியாமல் போனதாலும், அவரது ஆசைப்படி வென்ற தங்கப்பதக்கத்தை நேரில் காண்பிக்க முடியாமல் போனதாலும் மனம் உடைந்த தஜிந்தர்பால் சிங் கதறி அழுதது காண்போரை கண் கலங்க வைப்பதாக இருந்தது. தஜிந்தர் பால் சிங்கின் தந்தை மறைவுக்கு இந்திய தடகள சம்மேளனமும், பஞ்சாப் மாநில விளையாட்டு மந்திரி ராணா குர்மித் சிங் சோதியும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.