துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 11 Sep 2018 8:30 PM GMT (Updated: 11 Sep 2018 6:20 PM GMT)

உலக பெண்கள் அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது.

* ஐரோப்பிய கால்பந்து சங்கத்தின் உறுப்பு நாடுகள் பங்கேற்கும் முதலாவது நே‌ஷனல் லீக் கால்பந்து போட்டி அங்கு பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் 55 அணிகள் கலந்து கொண்டு லீக்கில் மோதி வருகின்றன. இதில் போர்ச்சுகல் நாட்டில் உள்ள லிஸ்போன் நகரில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் போர்ச்சுகல் அணி 1–0 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தியது. போர்ச்சுகல் அணி வீரர் ஆந்த்ரே சில்வா 48–வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். சுவீடனில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் 0–2 என்ற கணக்கில் பின்தங்கி இருந்த துருக்கி அணி சரிவில் இருந்து மீண்டு 3–2 என்ற கோல் கணக்கில் சுவீடனை சாய்த்தது.

* உலக பெண்கள் அணிகள் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் போட்டி சீனாவில் நடந்து வருகிறது. இதில் ‘சி’ பிரிவில் இடம் பிடித்துள்ள இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் அமெரிக்காவை சந்தித்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 0–3 என்ற கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டது. இந்திய அணி வீராங்கனைகள் அபரஜிதா, தன்வி கண்ணா, சுனன்யா குருவில்லா ஆகியோர் தங்கள் ஆட்டங்களில் தோல்வி அடைந்தனர். இந்த போட்டியில் இருந்து இந்தியாவின் முன்னணி வீராங்கனைகள் ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பலிக்கல் ஆகியோர் கடைசி நேரத்தில் விலகி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த ஆண்டில் நடந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டி மற்றும் சமீபத்தில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் டெல்லியில் நேற்று அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய பயிற்சியாளர்கள் மல்யுத்த போட்டியில் நல்ல முடிவை பெறும் அளவுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். இருப்பினும் ஒலிம்பிக் போன்ற மிகவும் கடினமான சவால் நிறைந்த போட்டிகளில் சாதிக்க வேண்டும் என்றால் வெளிநாட்டு பயிற்சியாளர்களிடம் பயிற்சி பெற வேண்டியது அவசியமானதாகும். அப்போது தான் இலக்கை எட்ட முடியும். ஆசிய விளையாட்டு போட்டிக்கு முன்பு ஹங்கேரி சென்று நான் பயிற்சி பெற்றது எனது திறமையை மேம்படுத்துவதாக இருந்தது. அடுத்த 2 ஆண்டுகளுக்கு இதேபோல் வெளிநாட்டு பயிற்சி எனக்கு அளிக்கப்பட்டால் நிச்சயம் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன்’ என்று நம்பிக்கை தெரிவித்தார்.

* சமீபத்தில் நடந்த அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ், ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகாவிடம் தோல்வி கண்டார். இந்த ஆட்டத்தின் 2–வது செட்டின் போது செரீனாவை நோக்கி அவரது பயிற்சியாளர் சைகை மூலம் ஏதோ தெரிவித்தார். இதனை கவனித்த கள நடுவர் செரீனாவை கண்டித்தார். பயிற்சியாளர் தனக்கு எந்தவித ஆலோசனையும் வழங்கவில்லை. நான் யாரையும் ஏமாற்றியது கிடையாது என்று நடுவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட செரீனா தனது ராக்கெட்டையும் உடைத்து எறிந்தார். இந்த சம்பவத்துக்காக செரீனாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் இருந்து வெளியாகும் ஹெரால்டு சன் பத்திரிகையில் புகழ் பெற்ற ஓவியர் மார்க் நைட், செரீனாவை கேலி செய்யும் வகையில் வரைந்த கார்ட்டூன் வெளியாகி உள்ளது. செரீனாவின் முக தோற்றத்துடன் குண்டான கருப்பு நிற பெண்மணி மைதானத்தில் துள்ளிக் குதித்து டென்னிஸ் ராக்கெட்டை உடைப்பது போல் அந்த கார்ட்டூனில் சித்தரிக்கப்பட்டு இருந்தது. இது கருப்பு இனத்தவரை அவமதிப்பதாகவும், பாலியல் பாகுபாட்டை வெளிப்படுத்துவதாகவும் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் ஆயிரக்கணக்கானவர்கள் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


Next Story