பிற விளையாட்டு

வெளிச்சப் பாதையில் குணேஸ்வரன்! + "||" + Gunasewaran on the path of light!

வெளிச்சப் பாதையில் குணேஸ்வரன்!

வெளிச்சப் பாதையில் குணேஸ்வரன்!
இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் மூலம் வெளிச்சத்துக்கு வந்தவர்களில் ஒருவர், சென்னை டென்னிஸ் வீரர் பிரஜ்னேஷ் குணேஸ்வரன்.
ஆசிய போட்டியில் ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்றதற்குப் பின் பலரும் இவரை கவனிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஆனால் அதற்கு முன்பே பல அதிரடியான வெற்றிகளைப் பெற்றவர்தான் குணேஸ்வரன்.

உதாரணமாக, சீனாவில் நடைபெற்ற டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் சிறப்பாகச் செயல்பட்ட குணேஸ்வரன், ஸ்டட்கார்ட்டில் நடந்த மெர்சிடிஸ் கோப்பை போட்டியில், 28-வது ரேங்க் வகிக்கும் டெனிஸ் ஷபோவலோவை தடாலடியாய் வீழ்த்தினார். தனது டென்னிஸ் வாழ்வின் உச்சமாக 152-வது இடத்தை எட்டினார்.


வெற்றித் திசையில்...

தற்போது 184-வது இடத்தில் உள்ள இந்த இடதுகை வீரர், தன் பாதையில் வெற்றிகள் வரத் தொடங்கியிருப்பதால் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

ஆசிய விளையாட்டுப் போட்டியில் விளையாட வேண்டியிருந்ததால் குணேஸ்வரனால் அமெரிக்க ஓபன் தகுதிச்சுற்றுப் போட்டிகளில் ஆட முடியவில்லை.

ஆனால் அதுகுறித்துத் தனக்கு வருத்தமில்லை என்கிறார்.

‘‘நாட்டுக்காக பதக்கம் வென்று கொடுத்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. ஆசிய விளையாட்டு போல பல விளையாட்டுகள் கொண்ட ஒரு போட்டியில் நான் பங்கேற்பேன் என்றோ, தாய்நாட்டுக்குப் பதக்கம் பெற்றுக் கொடுப்பேன் என்றோ நினைத்ததில்லை’’ என்கிறார் எளிமையாக.

நெருக்கடியும் போராட்டமும்

ஆசிய விளையாட்டில் ஆண்கள் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் இந்தியாவைப் பொறுத்தவரை குணேஸ்வரன் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. காரணம், ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ‘நம்பர் 2’ வீரர் இவர். அதிலும், ராம்குமார் ராமநாதன் சீக்கிரமே வெளியேறி விட்டதால், குணேஸ்வரனுக்கு நெருக்கடி கூடியது.

இவர், இரு நீ...ண்ட போட்டி களில் மோதி னார். காலிறுதியில் தென்கொரிய வீரர் சூன்வூ குவோனுடன் மூன்று மணி நேரம் போராடி வென்றார்.

‘‘காலிறுதியில் வெற்றி எங்கள் இருவரில் யாருக்கு வேண்டுமானாலும் சொந்தமாகி இருக்கும். நான் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டேன். ஜகர்தாவின் கடும் வெப்பத்தில், விளையாடுவதும் கடினமாக இருந்தது. ஆனால், நாட்டுக்காக விளையாடுகிறோம் என்கிறபோது அந்தக் கஷ்டங்கள் எல்லாம் மறைந்துவிடும். நான் சில பின்னடைவுகளைச் சந்தித்தேன், சில வாய்ப்புகளை வீணடித்தேன். ஆனாலும் தொடர்ந்து போராடினேன். இடையில் மழை குறுக்கிட்டதால், அரைமணி நேர இடைவெளி கிடைத்தது. அது நான் மீள்வதற்கு ஓரளவு உதவியது.

காலிறுதியில் தசைப் பிடிப்பில் இருந்தும் தோல்வியின் பிடியில் இருந்தும் மீண்ட குணேஸ்வரனால் அரையிறுதியை தாண்டிச் செல்ல முடியவில்லை.

‘‘காலிறுதி ஆட்டத்தில் போராடியதிலேயே நான் மிகவும் களைத்துப் போயிருந்தேன். அது தவிர, அரையிறுதியில் என்னை எதிர்த்து ஆடிய உஸ்பெகிஸ்தான் வீரர் டெனிஸ் இஸ்டோமின் மிகச் சிறப்பாக ஆடினார்’’ என்று விளக்குகிறார். இந்த இஸ்டோமின், கடந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் நட்சத்திர வீரர் நோவக் ஜோகோவிக்கை வீழ்த்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னேறிச் செல்ல விருப்பம்

டென்னிஸ் வாழ்வில் தான் குறிப்பாக எந்த இலக்குகளையும் நிர்ணயித்துக்கொள்ளவில்லை என்றும், ஆனாலும் தொடர்ந்து முன்னேறுவதில் ஆர்வமாக இருப்பதாகவும் குணேஸ்வரன் கூறுகிறார்.

தேசிய 16, 18 வயதுக்கு உட்பட்டோர் பட்டங்களை வென்ற குணேஸ்வரனின் டென்னிஸ் பயணம், காயங் களால் பாதிக்கப்பட்டது. அதிலிருந்து மீள்வதே அவருக்கு பிரதான பிரச்சினை ஆனது. ஆனால், தற்போது நிலைமை மாறி யிருப்பதாக் கூறுகிறார்...

‘‘எனது டென்னிஸ் வாழ்வில், கடைசியில் எல்லாமே சரியாக நடக்கத் தொடங்கி இருக்கின்றன. காயம் காரணமாக, இதற்கு முன் முழு சீசனில் ஆட முடியாமல் போயிருக்கிறது. தற்போது அது முடிகிறது. தொடர்ந்து முன்னேற்றம் காண வேண்டும், ரேங்கிங்கில் உயர வேண்டும் என்பதே எனது ஆசை’’ என்று தனது எண்ணத்தை வெளிப்படுத்துகிறார்.

தற்காப்பில் இருந்து தாக்குதலுக்கு...

ஆரம்பத்தில் தான், தாக்குதலை விட தற்காப்பில் அதிக கவனம் செலுத்தி யதாகவும், அது தான் விரும்பும் இடத்துக்கு உயர உதவாது என உணர்ந்துவிட்டதாகவும் குணேஸ்வரன் சொல்கிறார்.

‘‘தற்காப்பில் அதிக கவனம் செலுத்துவது, நமது முன்னேற்றத்துக்கு உதவாது என்பதை நான் உணர்ந்தேன். அதை மாற்றவும் முடிவெடுத்தேன். தாக்குவதற்கு வாய்ப்புக் கிடைத்தால் தயக்கமின்றித் தாக்குவது என்ற முடிவுக்கு நான் வந்துவிட்டேன்’’ என்கிறார், தெளிவாக.

குணேஸ்வரனின் இந்த மனமாற்றம்தான், இவர் பக்கம் வெற்றிகளை சேர்க்கத் தொடங்கியிருக்கிறது என்பது புரிகிறது.

பூபதியின் பாராட்டு


இந்திய டேவிஸ் கோப்பை அணியின் கேப்டனும், முன்னணி வீரருமான மகேஷ் பூபதி, குணேஸ்வரன் பற்றி பாராட்டு வார்த்தைகளைக் கூறுகிறார்...

‘‘குணேஸ்வரன் அதிக திறன் கொண்ட வீரர். பலநேரங்களில் அவர் தன்னம்பிக்கைக் குறைவால் அவதிப்பட்டது உண்டு. ஆனால் டேவிஸ் கோப்பை, சேலஞ்சர் போட்டி வெற்றிகளுக்குப் பின் குணேஸ்வரனின் தன்னம்பிக்கை கூடியிருக்கிறது. அதனால்தான் அவரால் தொடர்ந்து ஏ.டி.பி. டூர் போட்டிகளுக்குத் தகுதி பெற முடிகிறது. இந்த வட்டத்தில் விளையாடத் தகுதியானவர் குணேஸ்வரன்’’ என்கிறார்.

டென்னிஸ் வீரர்கள் தனி நட்சத்திரங்களாகப் பிரகாசிப்பவர்கள். ஆனால், ‘‘நான் நாட்டுக்காக விளையாடுவதை அதிகம் விரும்புகிறேன். காரணம் அது அதிக ஊக்கத்தை அளிக்கும், போராடுவதற்கான கூடுதல் தெம்பைத் தரும். சக நாட்டு வீரர்கள் நமக்குத் தூண்டுதலாக இருப்பார்கள் என்பதால், அதுவும் கூடுதல் சக்தி அளிக்கும்’’ என்று கூறுகிறார்.

இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே தனக்கு நன்றாக அமைந்ததாகவும், அதன் உச்சமாக ஆசிய விளையாட்டு பதக்கம் அமைந்திருப்பதாகவும் குணேஸ்வரன் சொல்கிறார்.

தற்போது மனரீதியாகவும் உடல்ரீதியாவும் வலுவாக இருப்பதாகத் தெரிவிக்கும் இவர், மேலும் பல முக்கியமான வெற்றிகளைக் குறிவைப்பதாகக் கூறுகிறார்.

இந்தியாவுக்கு பல சிறந்த டென்னிஸ் வீரர்களைத் தந்த பூமி, தமிழகம்.

அந்த வரிசையில் பிரஜ்னேஷ் குணேஸ்வரனும் முத்திரை பதிக்கட்டும், தனது வெற்றிக் கனவுகளை நனவாக்கட்டும்!