சீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா அதிர்ச்சி தோல்வி


சீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா அதிர்ச்சி தோல்வி
x
தினத்தந்தி 18 Sep 2018 11:00 PM GMT (Updated: 18 Sep 2018 7:50 PM GMT)

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றில் சாய்னா அதிர்ச்சி தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் பி.வி.சிந்து வெற்றிபெற்றார்.

சாங்ஜோவ்,

சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சாங்ஜோவ் நகரில் நேற்று தொடங்கியது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 9-ம் நிலை வீராங்கனையான தென்கொரியாவின் சுங் ஜி ஹூனை சந்தித்தார். இதில் முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் போராடி கைப்பற்றிய சாய்னா அடுத்த 2 செட்களையும் 8-21, 14-21 என்ற கணக்கில் இழந்து அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 48 நிமிடம் நடந்தது.

மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 21-13 என்ற நேர்செட்டில் 39-ம் நிலை வீராங்கனையான சனா கவாகமியை (ஜப்பான்) எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு 26 நிமிடமே தேவைப்பட்டது.

ஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் மனு அட்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 13-21, 21-13, 21-12 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் லியோ மின் சுன்-சு சிங் ஹெங் இணையை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி இணை 21-19, 21-17 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் மர்வின் எமில் சிடெல்-லின்டா எப்லெர் ஜோடியை வென்றது.


Next Story