துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 30 Sep 2018 9:00 PM GMT (Updated: 30 Sep 2018 8:34 PM GMT)

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை.

‘3 மாதங்கள் கிரிக்கெட் கிடையாது’– அல்–ஹசன்

வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்–ரவுண்டர் ‌ஷகிப் அல்–ஹசன் இடதுகை சுண்டு விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவையும் பொருட்படுத்தாமல் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்றில் விளையாடினார். இதனால் காயத்தன்மை மோசமடைந்து, வலி அதிகமானது. இதையடுத்து இறுதிப்போட்டியில் ஆடாமல் உடனடியாக தாயகம் திரும்பிய அவருக்கு விரலில் ஆபரே‌ஷன் செய்யப்பட்டது. ஆனால் கையில் கிருமி தொற்று ஏற்பட்டுள்ளதால், இன்னும் சில வாரங்களில் அவருக்கு மேலும் ஒரு ஆபரே‌ஷன் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் மொத்தம் 3 மாதங்கள் எந்த கிரிக்கெட்டிலும் தன்னால் விளையாட இயலாது என்று ‌ஷகிப் அல்–ஹசன் கூறியுள்ளார்.

ஜூனியர் ஆசிய கிரிக்கெட்: அமீரகத்தை பந்தாடியது இந்தியா

8 அணிகள் இடையிலான ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) வங்காளதேசத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் (ஏ பிரிவு) முதலில் பேட் செய்த இந்தியா 6 விக்கெட்டுக்கு 354 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அனுஜ் ரவாத் (102 ரன்), தேவ்தத் படிக்கல் (121 ரன்) சதம் நொறுக்கினர். அடுத்து களம் இறங்கிய ஐக்கிய அரபு அமீரக அணி 33.5 ஓவர்களில் 127 ரன்னில் முடங்கியது. இதன் மூலம் இந்தியா 227 ரன்கள் வித்தியாசத்தில் 2–வது வெற்றியை பெற்றது. இந்திய அணி கடைசி லீக்கில் ஆப்கானிஸ்தானை நாளை சந்திக்கிறது.

ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் இடம் மறுப்பதா?

கங்குலி, ஹர்பஜன்சிங் அதிருப்தி

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மாவுக்கு இடம் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘ரோகித் சர்மாவும், அவரது சகாக்களும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் வெற்றியை தேடித்தந்தது சிறப்பானது. ரோகித் சர்மா கேப்டன்ஷிப்பில் அற்புதமாக செயல்பட்டார். இந்திய டெஸ்ட் அணியில் ரோகித் சர்மாவின் பெயர் இடம் பெறாத ஒவ்வொரு முறையும் நான் ஆச்சரியமடைகிறேன். டெஸ்ட் அணியில் அவர் இடம்பெறுவதற்குரிய தூரம் வெகுதொலையில் இல்லை’ என்று பதிவிட்டுள்ளார். மூத்த சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங், ‘வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா தேர்வு செய்யப்படவில்லை. உண்மையில் தேர்வாளர்கள் என்ன நினைப்பில் இருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை. உங்கள் (ரசிகர்கள்) யாருக்காவது தெரிந்தால் எனக்கு சொல்லுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பெரிய ஸ்கோர் குவிக்கும் ஆவலில் காத்திருக்கும் கருண்நாயர்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிக்கு தேர்வாகி இருந்த பேட்ஸ்மேன் கருண் நாயருக்கு களம் காண வாய்ப்பு அளிக்கப்படவில்லை. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கும் சேர்க்கப்படவில்லை. டெஸ்டில் முச்சதம் சதம் அடித்த இரண்டு இந்திய வீரர்களில் 26 வயதான கருண் நாயரும் ஒருவர். அவர் அளித்த ஒரு பேட்டியில், ‘இங்கிலாந்து தொடரின் போது தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் என்னிடம் எதுவும் பேசவில்லை. அணி நிர்வாகம் எடுக்கும் முடிவுக்கு ஒரு வீரராக நாம் மதிப்பளித்து அதில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும் அவ்வளவு தான். முச்சதம் அடித்து 2 ஆண்டுகள் ஆகி விட்டது. திரும்ப திரும்ப அது பற்றி பேசுவது, ஒப்பிடுவதை தவிர்த்து, நாம் அதிலிருந்து வெளியே வர வேண்டிய நேரம் இது. இப்போது நமக்கு முன்னாள் இருக்கும் சவால்களை நோக்கி பயணிக்க வேண்டும். சர்வதேச கிரிக்கெட்டில் நான் நிறைய ரன்கள் குவித்துள்ளேன். அதனால் யாருக்காகவும் நான் எனது திறமையை நிரூபித்து காட்ட வேண்டிய தேவையில்லை. மீண்டும் அணியில் இடம் பிடித்து மெகா ஸ்கோர் குவிக்கும் வேட்கையில் இருக்கிறேன். இதற்காக கடினமாக உழைத்து வருகிறேன்.’ என்று கூறியுள்ளார்.


Next Story